Aran Sei

தொலைக்காட்சியின் மரியாதை டிஆர்பியை விட முக்கியமானது – ராஜ்தீப் சர்தேசாய்

Image Credits: Newslaundry

பிரபல செய்தி தொலைக்காட்சிகளான இந்தியா டுடேவும், ரிபப்ளிக் டிவியும் சமூக வலைதள போர்களில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஒரு மூத்த நெறியாளர், முக்கிய தொலைக்காட்சி விவாதத்தில், மற்றொரு நெறியாளரை விமர்சிப்பது தீவிரமாக மாறக் கூடும்.

மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய், இந்தியா டுடே தொலைக்காட்சியில், ‘ஊடகங்களின் மரண விசாரணை கோட்பாடு’ (பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம்) பற்றி விவாதிக்கும்போது, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிறுவனர் அர்னாப் கோஸ்வாமியை விமர்சித்துள்ளார்.

அப்போது பேசிய அவர் “ரியா சக்ரவர்த்தி  நேர்காணல் மற்றும் பலவற்றில் என்னை குறிவைத்தார்கள், ஆனால் இன்று நான் கூறுகிறேன் – அர்னாப் கோஸ்வாமி, நீங்கள் ஒரு வாழைப்பழ ரிபப்ளிக் தொலைக்காட்சியை நடத்துகிறீர்கள். உங்கள் சார்பு நிலையை நிரூபிப்பதற்காக, திட்டமிட்டு ஒரு ஊடக விசாரணையை உருவாக்கும் ஒரு தொலைக்காட்சியை நடத்துகிறீர்கள். ஆனால் நீங்கள் கொண்டு வந்துள்ள அளவுக்கு ஊடகத் துறையை கீழே கொண்டு வராதீர்கள். இதுதான் நான் உங்களுக்கு வழங்கும் ஒரே ஆலோசனை. ஊடகம் என்பது இதுவல்ல,” என்று கூறியுள்ளார்.

மேலும் “உங்களை அவமானப்படுத்தவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? நான் இன்று உங்களை அவமானப்படுத்துகிறேன். ஏனென்றால், நான் இரண்டரை மாதங்கள் அமைதியாக இருந்தேன். இருப்பினும், தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகள் (டிஆர்பி) பெறும் ஒரே நோக்கோடு நீங்கள் ஒளிபரப்பிய குப்பைகளை நான் கவனித்து வந்தேன். என் நண்பரே டிஆர்பிகளை விட முக்கியமான ஒன்று உள்ளது – அது தொலைக்காட்சி மரியாதை புள்ளிகள் என்று அழைக்கப்படுகிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம், ரிபப்ளிக் தொலைக்காட்சி, ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (பிஏஆர்சி) வெளியிட்ட மதிப்பீடுகளை ட்விட்டரில் பகிர்ந்து, குறைந்த டிஆர்பி பெற்ற இந்தியா டுடேவை கேலி செய்தது.

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு, இந்தியா டுடே குழுமத்தின் உரிமையாளர் அருண் பூரியை டேக் செய்து “இந்தியாவின் நம்பர் 1 செய்தி நிறுவனம், ரிபப்ளிக் தொலைக்காட்சியிடமிருந்து உங்களுக்கு ஒரு உதவிக்குறிப்பு இதோ: சமூக ஊடகங்களில் புலம்புவதால் பார்வையாளர்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது என்று உங்கள் செய்தி அறிவிப்பாளர்களிடம் சொல்லுங்கள். மூச்சை உள் இழுங்கள். மூச்சை வெளியே விடுங்கள். அமைதியாக இருங்கள். இது, இலக்கை அடையமுடியாத உங்கள் செய்தியாளர்களுக்கு உதவக்கூடும்,” என்று பதிவிட்டிருந்தது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான செய்தி யுத்தங்களின் மையமாக இந்தியா டுடே மற்றும் ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆகிய இரண்டும் மாறிவிட்டன என்று பிரீ பிரஸ் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு ட்விட்டர் பயனாளி “அவர் சொல்வது சரிதான், ஆனால் ராஜ்தீப்பின் நம்பகத்தன்மை என்ன? அர்னாபின் நம்பகத்தன்மை ஒப்பீட்டளவில் மிகவும் சிறந்தது,” என்று அர்னாபிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

புகைப்படக் கலைஞரும் தயாரிப்பாளருமான அதுல் கஸ்பேகர் “இதை யாரோ ஒருவர் சொல்ல வேண்டியிருந்தது, ஏனென்றால் இது ஒரு நிதர்சனமான உண்மை. டிஆர்பியைப் பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு எதிர்காலத்தில் நாம் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும்,” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 

இதைத் தொடர்ந்து பலரும் ராஜ்தீப் சர்தேசாய்க்கு ஆதரவாகத் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்