Aran Sei

பி.பி.சி-ல் இனவெறி: மனநோயாளியான பத்திரிகையாளர்

இங்கிலாந்தின் பிரபலமான தி கார்டியன் இதழில், வாசகர் கடிதம் பிரிவில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. இந்த கடிதத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்வியர் சிங் என்பவர், பி.பி.சியில் தான் சந்தித்த இனவெறி பாகுபாடுகுறித்து விளக்குகிறார்.

நான் 1986-ல் நிக் ராபின்சன் என்பவருடன் ஒரே நேரத்தில் பி.பி.சியின் பட்டதாரி பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தேன். நான் பி.பி.சியில் வேலை செய்யப் போவதாக என் குடும்பத்தினரிடம் சொன்ன நாள் எனக்கு நன்கு நினைவில் உள்ளது. வரப் போகும் எங்கள் எல்லா பண்டிகை கொண்டாட்டங்களும் ஒரே நாளில் வந்து விட்டது போல இருந்தது. இந்தியாவில் இருக்கும் முன்பின் பார்த்திருக்காத எனது சொந்தங்கள் பலர் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள், திருமண சம்பந்தம் விசாரித்தார்கள். என் அப்பா, அம்மா இந்திய இனிப்புகளை குடும்ப நண்பர்களுக்கும் முன் பின் தெரியாதவர்களுக்கும் வினியோகித்தார்கள். குடும்பத்தில் ஒரு பையன் பி.பி.சி.யில் வேலை செய்யப் போகிறானா – ஆஹா என்ன மகிழ்ச்சி!

பி.பி.சியில் எந்த மட்டத்தில் நான் வேலை செய்யப் போகிறேன் என்பது என் பெற்றோருக்கு உண்மையிலேயே தெரியாதுதான். நான் பி.பி.சியில் வேலைக்குச் சேர்வதே, இந்தியாவை விட்டு வந்து அவர்கள் செய்த தியாகங்கள் எல்லாம் பலித்து விட்டன என்பதற்கான சின்னமாக இருந்தது.

என் அம்மா பள்ளிப் படிப்பு இல்லாதவர். பள்ளிக் கூடத்துக்குள் காலெடுத்து வைத்தது கூட கிடையாது. என் அப்பாவைப் போலவே அம்மாவும் மிட்லாண்ட்சில் உள்ள ஓசை நிறைந்த, மாசு நிரம்பிய தொழிற்சாலைகளில் நீண்ட நேரம் முதுகொடிய உழைத்தவர். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு சாப்பாட்டுச் செலவையும் குடியிருக்கும் வீட்டுக்கான வாடகையையும் சமாளித்தார்கள்.

நான் படித்தது ஒரு மேட்டுக்குடி பள்ளி இல்லை. உள்ளூர் அரசுப் பள்ளியில் படித்தேன். ஆனால், எனது பெற்றோர் குறிப்பாக என் அம்மா “நல்ல படிப்பை பெறுவதற்கு கஷ்டப்பட்டு முயற்சி செய். நீ சம்பாதிக்கக் கூடியவற்றில் அது ஒன்றைத்தான் யாரும் உன்னிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியாது”என்று எப்போதுமே சொல்வார். இப்படி வளர்க்கப்பட்ட நான் எங்கள் குடும்பத்திலேயே கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்ற ஒரே ஆள் ஆனேன்.

பின்னர் பி.பி.சியில் சேர்ந்தேன். அங்கு நான் எதிர்கொண்ட இனவெறியைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அதற்கு முன்பும், என் வாழ்நாள் முழுவதும் நான் நிறவெறியை சமாளிக்க வேண்டியிருந்தது என்பது உண்மைதான். ஆனால், நாம் எதிர்பாராத இடத்தில் இருந்து வரும் வெறுப்புதான் மிக மோசமாகக் காயப்படுத்துகிறது. பி.பி.சியில் கேமராவுக்கு முன் நிகழ்ச்சி நடத்துபவர்களாக இருக்கட்டும், கேமராவுக்கு பின்பு வேலை செய்பவர்களாகட்டும் ஒவ்வொருவரிடமும் வெளிப்பட்ட விஷம் கொடூரமாக இருந்தது.

பி.பி.சி அது இயங்கும் சமூகத்திலிருந்து தனித்து இல்லை. அங்கு வேலை செய்பவர்களும் நமது சமூகத்தின் பிற மக்களைப் போலவே அதே விதமான விழுமியங்களைக் கொண்டிருக்கிறார்கள். இனவாத கிண்டல்கள், முத்திரை குத்துவது, கடுப்பேற்றுவது என்று இனவெறுப்பின் வெளிப்பாடுகள் ஒவ்வொன்றும் அங்கே இருந்தது. இவற்றுக்கு நடுவே போராடி நான் மூத்த தயாரிப்பாளர் என்ற பதவி வரை எட்டினேன். ஆனால், பல ஆண்டுகளாக அனுபவித்த உளைச்சல்களும் அதற்கு எந்த ஆறுதலும் இல்லாமல் போனதும் இறுதியில் என்னை பலி வாங்கி விட்டது.  எனக்கு மன முறிவு ஏற்பட்டது. எனது டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளின் உதவியுடன்தான் வாழ்க்கையை இப்போது ஓட்டி வருகிறேன்.

நான் பி.பி.சி.யில் ஒரு மகிழ்ச்சியான, துடிதுடிப்பான நபராக சேர்ந்தேன். அதிலிருந்து விலகும் போது உடைந்து போன ஒரு நபராக, மருந்து இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில், இலட்சியம் எதுவும் மிஞ்சாமல், எதிர்காலத்தை நினைத்து பயப்படுபவனாக வெளியேறினேன்.

லக்வியர் சிங்

லண்டன்

நன்றி : தி கார்டியன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்