Aran Sei

கொரோனாவுக்கு அடுத்த பலி – மும்பை, புனே மிரர் பத்திரிகைகள் மூடப்படுகின்றன

மும்பை மிரர் மற்றும் புனே மிரர் பத்திரிக்கைகளை நிறுத்தப் போவதாக அப்பத்திரிக்கைகளை நடத்தி வந்த டைம்ஸ் குழுமம் அறிவித்துள்ளது.

கொரொனா பெருந்தொற்று மற்றும் முழு அடைப்பு காரணமாக உருவாகியிருக்கும் பொருளாதார பிரச்சினைகள் பல தொழில்துறைகளை பாதித்திருக்கிறது. பலர் வேலையிழக்கவும், பல நஷ்டங்களுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. செய்தித்தாள் துறை இதற்கு விதிவிலக்கல்ல.

கொரோனா நோய்தொற்று பரவியதில் இருந்தே பல செய்தித்தாள் நிறுவனங்கள் பெரிய அளவிலான வருவாய் இழப்பை சந்தித்தன. இப்படி, 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டைம்ஸ் குழுவின் மும்பை மிரர் பத்திரிக்கைக்கும் வருவாய் பிரச்சினைகள் ஏற்பட்டன.

மார்ச் மாதம் தொடங்கிய முழு அடைப்பு கட்டுப்பாடுகள் தற்போதும் நீண்டு கொண்டிருக்கும் நிலையில், மும்பை மிரர் மற்றும் புனே மிரர் பத்திரிக்கைகளை நிறுத்தப் போவதாக டைம்ஸ் குழுமம் அறிவித்துள்ளது.

இது குறித்து டைம்ஸ் குழுமம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பல மாதங்கள் தொடர்ந்து ஆலோசித்தும், விவாதித்தும் எங்கள் பதிப்புகளை மாற்றியமைக்க வேண்டும் எனும் வேதனையளிக்கும், கடினமான முடிவை எடுத்திருக்கிறோம். குறுகிய கால அளவில் ஒரு வலிமையான நிறுவனத்தை கட்டியெழுப்ப வேலை செய்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களின் பங்களிப்பை மதிக்கிறோம், அவர்களுடைய கடின உழைப்பு மற்றும் முயற்சிக்கு நன்றி சொல்கிறோம்” என கூறியுள்ளது.

புனே மிரர் முற்றிலுமாக நிறுத்தப்படும் நிலையில், மும்பை மிரர் பத்திரிக்கை வாரப்பத்திரிக்கையாக மாறவிருக்கிறது. ஆனால், இரண்டுமே இணையதள பத்திரிக்கைகளாக வாசகர்களுக்கு கிடைக்கப்பெறும் என டைம்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்