Aran Sei

பத்திரிகையாளரைச் சந்திக்க வழக்கறிஞருக்கு மறுப்பு: ஹத்ராஸ் உரிமை மீறல்

Credits The Print

ஹத்ராஸ் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் சித்திக் காப்பனைச் சிறையில் சந்திக்க அவருடைய வழக்கறிஞருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கும்பல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு செப்டம்பர் 29-ம் தேதி உயிரிழந்துள்ளார்.

அக்டோபர் 5 அன்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் செல்லும் வழியில் கேரளப் பத்திரிகையாளர் சித்திக் காப்பன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஹத்ராஸ் சம்பவம் குறித்துச் செய்தி திரட்டுவதற்காக சித்திக் காப்பன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் மீது குற்றவியல் சட்டப்பிரிவுகள் 153-A, 295-A, 124-A, சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச்சட்டத்தின் 17, 14 பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 65, 72, 76 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தினர், சித்திக் காப்பனைச் சந்திக்க வேண்டி அளித்திருந்த மனுவை, மதுரா நீதிமன்றத் தலைமை நீதிபதி அஞ்சு ராஜ்புட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதி மன்றத்தில் நிழுவையில் உள்ள ரிட் மனுவில் திருத்தம் செய்வது குறித்து சித்திக் காப்பனைச் சந்திக்க வேண்டும் எனக் கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் இந்நாள் முன்னாள் அலுவலக உறுப்பினர்கள் அளித்துள்ள மனுவில் கோரியுள்ளார்கள்.

இது தொடர்பாக மதுரா சிறைச்சாலைக்குச் சென்றிருந்த சங்கத்தினருடன் வழக்கறிஞர் வில்ஸ் மேத்தியூவும் சென்றுள்ளார்.

எதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியாத சித்திக்கின் 90 வயது அம்மா, மனைவி மற்றும் குழந்தைகள் அவரிடம் போனில் பேச வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களிடம் பேசுவதற்குச் சித்திக்குக்கு அனுமதி மறுக்கப்படுள்ளது.

கைதுக்குப் பிறகு சித்திக் அம்மாவின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அக்டோபர் 12-ம் தேதி உச்சநீதி மன்றம் ரிட் மனுவை விசாரித்தபோது, ரிட் மனுவைத் திருத்தி அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மதுரா தலைமை நீதிபதி உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக, மனுவைத் தள்ளுபடி செய்து சித்திக்கைச் சந்திக்க அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது.

தி வயர்-க்கு அளித்துள்ள பேட்டியில் வழக்கறிஞர் மேத்தியூ, “கடமையைச் செய்வதற்காகப் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகம் மற்றும் சட்டவிதிகள் முடிவுக்கு வந்துள்ளதைக் காட்டுகிறது. கடுமையான செயல்கள் புரிந்த கிரிமினல் குற்றவாளியைக் கூட சட்டரீதியான உதவிகள் பெறுவதிலிருந்து தடுக்க முடியாது.” என்று கூறியுள்ளார்.

”வழக்கறிஞர் தன்னுடைய தரப்பினரைச் சந்திப்பது சட்டத்தின் விதிமுறைக்கு உட்பட்டது. மதுரா தலைமை நீதிபதியின் உத்தரவு முறையற்றது. அரசியலமைப்பு விதிகளுக்குப் புறம்பானது. உத்தரவுப் பிரதியைக் கூட நீதிமன்றம் உடனடியாகக் கொடுக்கவில்லை.” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

“தரப்பினரைச் சந்திக்க வேண்டும் எனத் தாக்கல் செய்யப்படும் மனுக்களைத் தள்ளுபடி செய்வதற்கு அதிகபட்சம் 30 நொடிகளே எடுக்கும். ஆனால் கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தினரின் மனுவைத் தள்ளுபடி செய்ய ஐந்து மணி நேரம் எடுத்துக்கொண்டார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞருக்கு அவருடைய தரப்பினரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுவது அப்பட்டமான மனித உரிமை மீறல் என வழக்கறிஞர் மேத்தியூ தி வயர்-க்கு அளித்துள்ள பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்