Aran Sei

இந்திய ஊடகவியலாளர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் – ‘உடனே தள்ளுபடி செய்க’

ர்வதேச ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு (ஐஎப்ஜே), சர்வதேச ஊடக நிலையம் (ஐபிஐ) ஆகிய இரண்டு முன்னணி ஊடகச் சுதந்திரத்துக்கான நிறுவனங்கள், சுதந்திரமான ஊடகவியலாளர்கள் மீது தேசத் துரோகச் சட்டங்களையும், பிற சட்டத் தடைகளையும் போடுவதை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளன. இத்தகைய சட்ட நடவடிக்கைகள் மூலம் ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டு வாயடைக்கப்படுகிறார்கள் என்று அவை கூறியுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கூட்டாக எழுதிய கடிதம் ஒன்றில் “அச்சுறுத்தலும், பழிவாங்கப்படுவோம் என்ற பயமும் இல்லாமல் ஊடகவியலாளர்கள் வேலை செய்வதை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு” அவரை வலியுறுத்தியுள்ளன. “ஊடகவியலாளர்கள்  மீது அவர்களது பணி தொடர்பாகப் போடப்பட்ட தேசத் துரோக வழக்கு உட்பட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு” அவை மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளன.

இந்தக் கடிதம் ஐபிஐ நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஐபிஐ நிறுவனத்தின் துணை இயக்குநர் ஸ்காட் கிரிபன், ஐஎஃப்ஜேயின் பொதுச் செயலாளர் அந்தோனி பெல்லாங்கர் ஆகியோர் இணைந்து இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர்.

ஐபிஐ என்பது ஊடகச் சுதந்திரத்துக்கான ஊடக ஆசிரியர்கள், ஊடக அலுவலர்கள், முன்னணி ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு என்றும், ஐஎப்ஜே என்பது தேசிய ஊடகவியலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு என்றும் அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்கள்.

“கடந்த சில மாதங்களில் பல ஊடகவியலாளர்கள் இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 124A-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்” என்பதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

“மிகச் சமீபத்தில் அக்டோபர் 5-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சித்திக் காப்பன், உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டு தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.” என்பதை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான முந்தைய அரண்செய் செய்திகளைப் படிக்க

பத்திரிகையாளர் மீது தேச விரோத வழக்கு – உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை

பத்திரிகையாளரைச் சந்திக்க வழக்கறிஞருக்கு மறுப்பு: ஹத்ராஸ் உரிமை மீறல்

“அக்டோபர் 6-ம் தேதி கேரளா பணிபுரியும் ஊடகவியலாளர்களின் சங்கம், அவர்களது டெல்லி கிளைச் செயலாளரான காப்பனின் கைதுக்கு எதிராக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறது” என்று ஐபிஐ, ஐஎப்ஜே நிறுவனங்களின் கடிதம் தெரிவிக்கிறது.

“இதே போல, மே மாதம் குஜராத்தைச் சேர்ந்த தாவல் படேல் என்ற செய்தித் தள ஆசிரியர் மாநில அரசியல் தலைமையில் மாற்றம் வரும் என்ற செய்தியை வெளியிட்டதற்காகக் கைது செய்யப்பட்டுத் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 54-ன் கீழ் பொய்யாகப் பதற்றத்தைப் பரப்புவதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்திய ஊடக ஆசிரியர்கள் குழு இதைக் கண்டித்து மே 13 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது” என்பதை இக்கடிதம் பதிவு செய்கிறது.

மூன்றாவதாக, “சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் லோயா மரணம் தொடர்பாக சுயேச்சையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிய மனுக்களை உச்சநீதி மன்றம் நிராகரித்தது பற்றிய கார்ட்டூன் வெளியிட்டதற்காக கமல் சுக்லா என்ற ஊடகவியலாளர் மீது சத்தீஸ்கர் போலீஸ் தேசத் துரோக வழக்கை சுமத்தியது.” என்பதையும் ஐஎப்ஜே, ஐபிஐ அமைப்புகள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.

நான்காவதாக, “பிரபல ஊடகவியலாளர் வினோத் துவா மீது ஹிமாசல் பிரதேச போலீஸ் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்குத் தயாராக இல்லாததாக அரசின் மீது குற்றம் சாட்டியதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்தற்காகவும் அவர் மீது இந்த வழக்கு போடப்பட்டது” என்று இந்த சர்வதேச ஊடகவியலாளர் நிறுவனங்கள் மோடிக்கு எழுதிய கடிதம் குறிப்பிடுகிறது.

“கொரோனா நோய்த்தொற்று காலத்துக்குப் பிறகு ஊடகவியலாளர்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகள் பெரும் அளவில் அதிகரித்துள்ளன. நோய்த்தொற்றைத் தடுப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துபவர்களை வாயடைக்கச் செய்வதற்கு, இந்த மருத்துவ நெருக்கடி ஒரு சாக்காகப் பயன்படுத்தப்படுகிறது” என்று இந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

“கொரோனா முழு அடைப்பு அமல்படுத்தப்பட்ட மார்ச் 25 முதல் மே 31 வரை, பெருந்தொற்று தொடர்பான செய்திகளுக்காக 55 ஊடகவியலாளர்கள் குறி வைக்கப்பட்டதாக ”உரிமைகளும் அபாயங்களும் பற்றிய பகுப்பாய்வுக் குழு’ தெரிவித்துள்ளது” என்று இந்தக் கடிதம் சுட்டிக் காட்டுகிறது.

“அரசின் அவசர கவனத்தைக் கோரும் பிரச்சனைகள் தொடர்பாகச் செய்தி வெளியிடவும், அவற்றை வெளிக் கொணரவும் ஊடகங்களுக்குச் சுதந்திம் இருக்கும் போதுதான் இந்தியாவின் ஜனநாயகம் வலுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று ஐபிஐ நிறுவனத்தின் துணை இயக்குநர் ஸ்காட் கிரிபனும், ஐஎஃப்ஜேயின் பொதுச் செயலாளர் அந்தோனி பெல்லாங்கரும் தமது கடிதத்தில் கூறியுள்ளனர்.

இந்தக் கடிதத்தை ஆங்கிலத்தில் படிக்க, ஐபிஐ நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.

IPI, IFJ urge India to stop using sedition laws to silence journalists

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்