கட்டட உள்வடிவமைப்பாளர் ஒருவரை தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா அர்னாபின் கைதைக் கண்டித்துள்ளார்.
கட்டட உள்வடிவமைப்பாளர் ஒருவர் 2018-ம் ஆண்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு அர்னாப்தான் காரணமென்று தற்கொலை செய்து கொண்டவரின் மகள் அளித்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை அர்னாப் கோஸ்வாமியை அவர் வீட்டில் வைத்து மும்பைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
‘ தற்கொலையை தூண்டினார் ‘ – அர்னாப் கோஸ்வாமி கைது – அமித் ஷா கண்டனம்
ஒரு பத்திரிகையாளர், தனது வேலையைச் செய்ததற்காகக் கைதாகி உள்ளதைக் கண்டிப்பதாக உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். அர்னாப் கோஸ்வாமியின் பெயரைக் குறிப்பிடாமல் உமர் அப்துல்லா இதனைக் கூறியுள்ளார்.
இந்திய ஊடகவியலாளர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் – ‘உடனே தள்ளுபடி செய்க’
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அறிவித்தது.
அந்த அறிவிப்பு செய்வதற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு வினையாற்றியுள்ள உமர் அப்துல்லா இதனை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
We got detained for doing what was demanded of us as politicians – getting people to vote & opposing policies of administrations we disagreed with. We didn’t hear you speak for us. However when you are arrested for doing your job I’ll be the first to condemn it.
— Omar Abdullah (@OmarAbdullah) November 4, 2020
“ஒரு அரசியல்வாதியாக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளதோ அதனைச் செய்ததற்காக நாங்கள் கைது செய்யப்பட்டோம் – மக்களை வாக்களிக்கச் செய்ததற்காகவும், எங்களுக்கு உடன்பாடு இல்லாத அரசின் கொள்கைகளை எதிர்த்ததற்காகவும் நாங்கள் கைது செய்யப்பட்டோம்” என்று உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கவில்லை. இருப்பினும், உங்கள் பணியைச் செய்ததற்காக நீங்கள் கைது செய்யப்படும்போது, அதை முதலில் தட்டிக்கேட்பது நானாகத்தான் இருப்பேன்” என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகையாளர் மீது தேச விரோத வழக்கு – உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.