Aran Sei

மூன்று ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கும் கௌரி லங்கேஷ்ன் குடும்பம்

2018 நவம்பர் 23 அன்று, 55 வயதான கன்னட பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டது தொடர்பாக, கர்நாடக சிறப்பு விசாரணை குழு (SIT) விரிவான பிழைகளற்ற துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபோது, விரைவில் நீதி கிடைக்கும் என அவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் நம்பிக்கை கொண்டிருந்தனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 18 பேரில், 17 பேருக்கு எதிரான 456 சாட்சிகளும் 1056 வலுவான ஆதாரங்களையும் சிறப்பு விசாரணைக் குழு திரட்டியுள்ளது.

ஆனால், கொளரி லங்கேஷ் கொல்லப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் தரப்பில், வழக்கை விசாரிக்க தனி சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கக்கோரி கர்நாடக அரசை சம்மதிக்க வைக்க மிகவும் பாடுபடவேண்டி இருந்தது என்கிறார்கள். இந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்றுப்பரவலின் விளைவாக நிலைமை மேலும் மோசமடைந்ததாகவும் கூறுகிறார்கள்.

இவ்வழக்கை கையாள நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.பாலன் கூறும்போது, 10,000 பக்கங்களை உள்ளடக்கிய முதன்மை மற்றும் துணை குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது முதலே, விசாரணையை துவங்குவதற்காக நீதிமன்றம் காத்துக்கொண்டிருந்ததாக கூறுகிறார். “வழக்கின் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிறது, இன்னும் நீதிமன்றம் அதனை பதிவு செய்யவில்லை. விசாரணை வெகு தொலைவில் உள்ளது” என்கிறார் பாலன்.

தற்போது, இந்த வழக்கு பெங்களூரு அமர்வு நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தின் நிர்வாகத் தலைவராகவும் உள்ளார். நீதிமன்றத்தின் அன்றாட நிர்வாகப் பணிகளையும் சிறப்பு சட்டங்களின் கீழ் பதியப்பட்டுள்ள பல்வேறு வழக்கு விசாரணைகளையும் கையாண்டு வருகிறார். கௌரி லங்கேஷ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது காவலர்கள் கர்நாடக மாநிலத்தின் ‘திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் சிறப்புச்சட்டத்தின்’ கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் வழக்கை கையாள சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படவில்லை.

”நீதிபதி அவரது நிர்வாக பணிகள் முடிந்த பிறகு, ஓரிரு மணிநேரங்களே நீதிமன்றத்தில் செலவிட முடிகிறது. அப்போது அவர் கையாள வேண்டிய பல வழக்குகளில் ஒன்றாக மட்டுமே கௌரி லங்கேஷுடைய வழக்கு இருக்கிறது.” என அரசு வழக்கறிஞர் பாலன் கூறுகிறார்.

காவல்துறை 17 பேருக்கு எதிராக கொலை, சதித்திட்டம், ஆதாரங்களை அழித்தல் உட்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு சிறப்புச்சட்டம் ஆகிய பிரிவுகளையும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மார்ச் 2018ல் இந்து யுவ சேனா கட்சியின் 37 வயது உறுப்பினர் கே.டி.நவீன் குமாரின் கைதுதான் இந்த வழக்கின் முதல் திருப்புமுனை. இரண்டுபேர் வீடு புகுந்து கௌரி லங்கேஷை சுட்டதில் அவர் இறந்து ஏழு மாதங்கள் கழித்த பிறகே இந்த கைது நிகழ்ந்தது. பின்னர் பிற கைதுகள் தொடர்ந்தன.

குற்றப்பத்திரிக்கையில் பரசுராம் வாக்மோர், மூளையாக செயல்பட்ட அமோல் காலே, சுஜித் குமார் என்கிற பிரவீன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். சனாதன் சன்ஸ்தா பல பகுத்தறிவாளர்களின் கொலைகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்பட்டு வந்தாலும், கௌரி லங்கேஷின் கொலை வழக்கில்தான் முதன்முறையாக அதன் நேரடி தொடர்பு நிறுவப்பட்டது.

ஆனால் இதுபோன்ற முக்கியமான திருப்புமுனைகளுக்கு பிறகும் உண்மையில் ஒன்றுமே நிகழவில்லை என்று கௌரி லங்கேஷின் தங்கை கவிதா கூறுகிறார். விசாரணை தொடங்குவதற்காக காத்திருந்து அலுத்துப்போய், ஆண்டின் தொடக்கத்தில், கவிதா மற்றும் இதுபோல கொல்லப்பட்ட கன்னட அறிஞர் – பகுத்தறிவாளர் எம்.எம்.கல்புர்கியின் குடும்பத்தினரும் (இவரது வழக்கும் ஒரு அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாமல் உள்ளது) உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தினர். அவர்கள் கூறியதை பசவராஜ் செவிமடுத்து கேட்ட போதிலும் தற்போதுவரை விரைவு நீதிமன்றம் அமைக்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்று லங்கேஷின் தங்கை கூறுகிறார்.

மாநில அரசு அல்லது நீதிமன்றம் மட்டுமே இதில் முடிவெடுக்க முடியுமென கூறும் பாலன், ”கௌரி லங்கேஷ் மற்றும் கல்புர்கியின் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள தீவிரவாத அமைப்பு ஆகிய இரண்டும் பொதுவாக இருப்பதால், இரு வழக்குகளும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதுதான் சரியாக இருக்க முடியும்.” என்கிறார்.

நீதிக்கான பிரச்சாரம்

திரைப்பட இயக்குநரும் கவிஞருமான கவிதா, சகோதரிக்கு நீதி கிடைக்கவேண்டி தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இன்றளவிலும், நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகளை புரிந்துகொள்வதற்கான தைரியத்தை திரட்ட முடியவில்லை எனக்கூறுகிறார். ”அது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது” என்கிறார் கவிதா. எனினும், கௌரி லங்கேஷின் நண்பர்களும் ஆதரவாளர்களும் வழக்கு சரியாக வழிநடத்தப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு அதனை உறுதிப்படுத்தியும் வருகின்றனர்.

அதில் ஒருவர், கௌரி லங்கேஷின் நெருங்கிய நண்பரும்  பத்திரிக்கையாளருமான சிவசுந்தர். லங்கேஷுடன் பத்திரிக்கை மற்றும் செயல்பாட்டு ரீதியில் நீண்ட காலம் தொடர்பில் இருந்ததாக சிவசுந்தர் கூறுகிறார்.

வழக்கின் போக்கை சிவசுந்தர் அதன் தொடக்கம் முதலே உற்றுநோக்கி வருகிறார். எல்லா நீதிமன்ற விசாரணையிலும் கலந்துகொண்டு, வழக்கறிஞருடன் ஒருங்கிணைந்து, தனது நண்பருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய தேவைப்படும் அனைத்து முயற்சிகளையும் அவர் மேற்கொள்கிறார். ”ஆரம்பம் முதலே வழக்கு வெகு சிறப்பாக கையாளப்பட்டு வந்தது. அதிர்ஷ்டவசமாக எங்களால் நல்ல அணியை கண்டறிய முடிந்தது. ஆனால், சட்டப் போராட்டங்கள் அங்கு முடிவடைவதில்லை. நீதிமன்றத்திலும் வழக்கு சரியாக வழிநடத்தப்பட வேண்டும்” என்கிறார்.

கர்நாடக சிறப்பு விசாரணை குழு, இந்த வழக்கில் இணைப்புகளை திறமையாக தொடர்புபடுத்தியதாக சிவசுந்தர் கூறுகிறார் மேலும் “எந்த தலையீடுமின்றி செயல்பட குழு அனுமதிக்கப்பட்டதால் மட்டுமே (அப்போதைய காங்கிரஸ் அரசால்) இது சாத்தியப்பட்டதாக கர்நாடக சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் பலரும் சொல்கிறார்கள்” என்கிறார்.

கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மட்டும் கிடைக்கவில்லை. அவை மும்பை – தானே நெடுஞ்சாலை அருகே வசாய் ஓடையில் வீசப்பட்டுவிட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். “அங்கே ஆயுதங்களை தேடுவற்காக தனிக்குழுக்களை சிறப்பு விசாரணைக் குழு ஈடுபடுத்தியுள்ளது. காவலத்துறை வேறு பல ஆயுதங்களை கண்டெடுத்தது, ஆனால், கௌரி லங்கேஷ் கொலையில் பயன்படுத்திய ஆயுதம் கிடைக்கவில்லை” என்கிறார் சிவசுந்தர்.

கர்நாடகாவில் ஜூலை 2019ல் காங்கிரஸ்-ஜனதா தள கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து பா.ஜ.க தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றபோது இந்த வழக்கு முடிவுக்கு வரும் நிலையில் இருந்தது. ”தொடர்ந்து தினமும் வழக்கினை நடத்த ஒரு நீதிமன்றம் நியமிக்கப்பட்டிருந்தால் மட்டும் போதும். ஆனால் அது நடைபெறவில்லை.” என்கிறார் அவர்.

விசாரணை தாமதமானதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பலமுறை பிணை கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். “அவர்களுக்கு உரிமை இருக்கிறது, விண்ணப்பிக்கிறார்கள். நாங்கள் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.” என்று பாலன் கூறுகிறார். மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்த எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் பல ‘தந்திரங்களை’ கையாண்டார்கள் என்கிறார் அவர்.

லங்கேஷின் கொலை மேலும் மூன்று பகுத்தறிவாளர்களின் கொலையோடு ஒப்பிடப்பட்டது. புனேயில், 2013 ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் (மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கம்) நிறுவனர் நரேந்திர தபோல்கர், காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது கொல்லப்பட்டார். பின்னர், மகாராஷ்டிரா கோலாப்பூரில், 2015 பிப்ரவரி 16 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, 2015 ஆகஸ்டு 30ம் தேதி கர்நாடக மாநிலம் தார்வத்தில் கல்புர்கி கொல்லப்பட்டார்.

கௌரி லங்கேஷ் வழக்கில் மட்டும் விசாரணை தாமதப்படவில்லை. தபோல்கர், பன்சாரே வழக்குகளில் விராரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், கல்புர்கி வழக்கு விசாரணை இன்னும் தொடங்கப்படவே இல்லை. பெல்லாரி மாவட்டத்தின், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராக பதவிவகித்த பகுத்தறிவாளார் கல்புர்கி, 2015 ஆகஸ்டு மாதம் இரண்டு நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிறப்பு விசாரணைக் குழு கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் கணேஷ் மிஸ்கின் என்பவர் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. கௌரி லங்கேஷ் வழக்கிலும் மிஸ்கின் பெயர் கொலையாளியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமோல் காலே, பிரவீன் பிரகாஷ் சதுர், வாசுதேவ் பகவான், சூர்யவம்சி, சரத் கலாஸ்கர் மற்றும் அமித் ராமச்சந்திரபாதி ஆகிய 6 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

(தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

https://thewire.in/rights/gauri-lankesh-third-death-anniversary-trial-investigation

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்