பால்கோட் விமானத் தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளதாக வட இந்திய ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்ததை, பூம் இணையதளத்தின் செய்தி சரிபார்ப்பு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
2019 பிப்ரவரி 26 அன்று இந்திய விமானப் படை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அங்கு உள்ள ஒரு பயங்கரவாத பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
அந்த மாதம் 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் 40 இந்திய படைவீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்தத் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பில் சொல்லப்பட்டாலும் பாகிஸ்தான் அதை மறுத்து வந்தது.
சென்ற சனிக்கிழமை அன்று, ஏஎன்ஐ செய்தி நிறுவனம், பால்கோட் தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக. பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி கூறியுள்ளதாக ஒரு வீடியோவை வெளியிட்டது.
இந்தச் செய்தியை
இந்தியா டுடே
என்டிடிவி
ஏபிபி நியூஸ்
டைம்ஸ் நவ்
ரிபப்ளிக் டிவி
வியன் நியூஸ்
டைம்ஸ் ஆஃப் இந்தியா
லைவ் மின்ட்
தி குவின்ட்
டிஎன்ஏ
லைவ் ஹிந்துஸ்தான்
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
ஜீ நியூஸ்
ஸ்வராஜ்யா
மணிகன்ட்ரோல்
ஒடிசா டிவி
ஜாக்ரன்
என்ஈ நவ்
டெக்கான் ஹெரால்ட்
ஒன் இந்தியா
நியூஸ் 18
நவபாரத் டைம்ஸ்
ஆகிய ஊடகங்கள், அப்படியே வெளியிட்டன. பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா பகுதியில் 300 பேர் கொல்லப்பட்டதாக, ஜாஃபர் ஹிலாலி என்ற பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரி பேசியது, பாகிஸ்தானுக்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
ஆனால், அந்த வீடியோ, “ஹம் டிவி” என்ற தொலைக்காட்சியில் ஒரு விவாதத்தில் ஜாஃபர் ஹிலாலி பேசியதை வெட்டி ஒட்டி, போலியாக தயாரிக்கப்பட்டது என்று ஜூம் இணையதளம் நடத்திய செய்தி சரிபார்ப்பு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமீர் ஜியா என்பவர் நடத்திய “அஜெண்டா பாகிஸ்தான்” என்ற அந்த விவாத நிகழ்ச்சியின் வீடியோ, டிசம்பர் 23, 2020 அன்று யூடியூபில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜாஃபர் ஹிலாலி 4 நிமிடம் 15 விநாடிகள் பேசுகிறார்.
“உங்கள் இலக்கு ஒரு மதரசாவைத் தாக்குவது. அதில் 300 பேர் படித்து வந்ததாக நீங்கள் சொன்னீர்கள். அங்கு தாக்குதல் நடத்துவதாகச் சொன்னீர்கள். அதாவது, நீங்கள் 300 பேரைக் கொல்லத் திட்டமிட்டிருந்தீர்கள், 300 பேரை!” என்று அவர் பேசியுள்ளார்.
“அங்கு யாரும் அப்படி இல்லை. அப்படி நடக்கவில்லை… அவர்கள் (இந்திய விமானப்படை) 300 பேரை கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள். அது நடக்கவில்லை என்பதால் ஒரு கால்பந்து மைதானத்தைத் தாக்கினார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
“யாருமே கொல்லப்படவில்லை, காக்காய்களும், 11 மரங்களும்தான் கொல்லப்பட்டன” என்று அவர் பேசுகிறார்.
இந்த வீடியோவை வெட்டி ஒட்டியதை, பூம் செய்தி சரிபார்ப்பு ஆய்வு கண்டறிந்துள்ளது. வெட்டி ஒட்டிய வீடியோவில், விவாதத்தில் பங்கேற்பவர்களின் இடங்கள் மாறியுள்ளன. இந்த வீடியோவில் ராணுவ உடை உடுத்திய, இந்திய பிரதமர் மோடியின் படமும் உள்ளது, ஆனால் அது, ஒரிஜினல் வீடியோவில் இல்லை.
இதை அடிப்படையாக வைத்து, இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் இந்தப் பொய்ச் செய்தியை பரப்பியுள்ளன.
ஒரிஜினல் வீடியோவை வெளியிட்டு ட்வீட் செய்துள்ள ஜாஃபர் ஹலாலி, தான் 300 பேர் கொல்லப்பட்டதாக சொல்லவேயில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
“இந்திய அரசு, நான் ஹம் டிவியில் பேசிய வீடியோவை வெட்டி ஒட்டி மாற்றி பிரச்சாரம் செய்வது, அவர்கள் செய்யத் தவறியதை நிரூபிப்பதற்கு அவர்கள் மிக மோசமாக விரும்புவதும் தெரிகிறது” என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.