Aran Sei

இணைய ஊடக விதிமுறைகள் – விவாதித்த மணிப்பூர் ஊடகவியலாளர்களுக்கு ஆயுதப் படை மூலம் நோட்டீஸ்

Image Credit : thewire.in

த்திய அரசின் மின்னணு ஊடகங்களுக்கான புதிய நடத்தை விதிகளின் கீழ், முதன்முறையாக மணிப்பூரைச் சேர்ந்த 2 ஊடகவியலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. இந்த நடவடிக்கை கடும் கண்டனத்தை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, நோட்டீசை மாவட்ட நிர்வாகம் திரும்பப் பெற்றிருக்கிறது என்று தி வயர் செய்தி தெரிவிக்கிறது.

மணிப்பூரைச் சேர்ந்த “The Frontier Manipur (TFM)” என்ற இணைய செய்தி ஊடகம் கடந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி 28) “முற்றுகையிடப்படும் ஊடகங்கள் : ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலின் கீழ் செயல்பட போகிறார்களா?” என்ற தலைப்பில் ஒரு இணைய விவாதத்தை நடத்தியது. இந்த விவாதம், “கானாசி நய்னாசி” என்ற அந்த ஊடகத்தின் வார இறுதி நிகழ்ச்சியில் நடைபெற்றது என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, திங்கள் (மார்ச் 1) அன்று, இம்பால் மேற்கு மாவட்ட (இம்பால் மணிப்பூரின் தலைநகரம்) துணை ஆணையர் நவ்ரெம் பிரவீன் சிங், மேற்கண்ட விவாதத்தில் பங்கேற்ற TFM-ன் நிர்வாக ஆசிரியர் பாவ்ஜல் சாவ்பாவுக்கும், அதன் இணை ஆசிரியர் கிஷோர்சந்திர வாங்கேம்சாவுக்கும் மின்னணு ஊடகங்களுக்கான நடத்தை விதிகளின் கீழ் நோட்டீஸ் வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களையும், மின்னணு ஊடகங்களையும், ஓடிடி தளங்களையும் கண்காணிப்பதை அதிகரிக்கும் விதமாக, மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் “தகவல் தொழில்நுட்பம் (ஊடகங்களுக்கான வழிமுறைகளும், மின்னணு ஊடக நடத்தை விதிகளும்) விதிகள் 2021”-ஐ சென்ற வாரம் சனிக்கிழமை அறிவித்திருந்தது.

தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாதும் இது தொடர்பான சந்திப்பில் பேசினர்.

இந்த புதிய விதிகள் மின்னணு செய்தித் தளங்களின் உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கு இதுவரை இல்லாத அதிகாரத்தை அரசுக்குக் கொடுக்கிறது. அச்சு ஊடங்களுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் இருப்பதைப் போல அல்லாமல், இணைய ஊடகங்கள் மீது வெளியிடுபவர் தரப்பை கேட்காமலேயே, இந்த விதிகளின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். இவை மின்னணு ஊடக செயல்பாட்டாளர்களின் கண்டனத்துக்கு உள்ளாகின

இந்த புதிய விதிகளின்கீழ் மணிப்பூர் ஊடகவியலாளருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில் மின்னணு ஊடகங்களுக்கான நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறும், “அவ்வாறு செய்யத் தவறினால் மறு அறிவிப்பு இன்றி, அவர்கள் மீது பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.

இந்த நோட்டீசை, நேற்று (மார்ச் 2) காலை சுமார் 9 மணி அளவில், 6-7 ஆயுதம் தாங்கிய காவலர்கள் மூலம் பாவ்ஜல் சாவ்பா வீட்டில் கொண்டு கொடுத்திருக்கின்றனர்.

“புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் ஊடகவியலாளர்களை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன” என்று பாவ்ஜல் சாவ்பா கூறியுள்ளார்.

இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்துக்குள்ளாகியது.

கிஷோர்சந்திர வாங்கேம்சா, சமூக வலைத்தளங்களில் தனது அரசியல் கருத்துக்களை வெளியிட்டதற்காக ஏற்கனவே இரண்டு முறை சிறையிலிடப்பட்டிருக்கிறார்.

“புதிய மின்னணு ஊடக விதிகள் பற்றிய ஒரு விவாதத்துக்கே நோட்டீஸ் அனுப்பப்படுவது வேடிக்கையானது” என்று அவர் கூறியுள்ளார்.

“மணிப்பூரில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியான நிலைமையின் பின்னணியில் தகவல் தொழில்நுட்ப விதிகளைப் பற்றி விவாதித்தோம்” என்று அவர் கூறியுள்ளார்.

புதிய ஊடக விதிகளை பயன்படுத்துவதற்கான அதிகாரம் “மாநிலங்களுக்கும்/மாவட்ட நிர்வாகங்களுக்கும்/காவல்துறை ஆணையர்களுக்கும் இன்னும் தரப்படவில்லை” என்று தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், மணிப்பூரின் தலைமைச் செயலர் ராஜேஷ் குமாருக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து மேற்சொன்ன நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திரும்பப் பெறும் அறிவிப்பு  வீட்டின் கதவில் ஒட்டப்பட்டிருந்ததை தனது குடும்பத்தார் நேற்று மாலையில் பார்த்ததாக பாவ்ஜல் சாவ்பா கூறியுள்ளார்.

“உங்களுக்கு தரப்பட்ட, மார்ச் 1, 2020 தேதியிட்ட நோட்டீஸ் உடனடியாக திரும்பப் பெறப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்