Aran Sei

`என் உயிருக்கு ஆபத்து உள்ளது; தயவுசெய்து உதவுங்கள்’ – அர்னாப் கோஸ்வாமி கோரிக்கை

பாதுகாப்புக் காரணங்களால் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உட்பட மூவரும் நவி மும்பையில் உள்ள தலோஜா மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

2018, மே 5-ம் தேதி 53 வயதான கட்டடக் கலைஞர் அன்வே நாயக் தற்கொலை செய்து கொண்டார். அன்வே நாயக், தனது தற்கொலைக்குக் காரணம் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநரும் தலைமை ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமிதான் என்று தன்னுடைய தற்கொலைக் குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.

“அர்னாப் கோசாமியை கைது செய்ததற்கு நன்றி” – தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பம்

“அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவர் தனக்குத் தர வேண்டிய 5 கோடியே 40 லட்சம் ரூபாயைத் தர மறுப்பதே இந்த முடிவிற்குத் தன்னைத் தள்ளியது.” என்று குறிப்பிட்டிருக்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு நாயக்கினுடைய மனைவி அக்ஷிதா அளித்த புகாரின் பேரில் அர்னாப் மீது அலிபாக் காவல்துறையினரால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நவம்பர் 4 ஆம் தேதி, காலை அர்னாப் கோஸ்வாமியை, அவர் வீட்டில் வைத்து மகாராஷ்ட்ரா காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். மேலும் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட ஃபெரோஸ் ஷேக் மற்றும் நிதேஷ் சர்தா இருவரையும் கைது செய்துள்ளனர்.

அர்னாப் கைது – கண்டனம் தெரிவிக்க மஹாராஷ்ட்ரா பத்திரிகையாளர் சங்கம் மறுப்பு

பின் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுப் பிறகு அலிபாக் சிறை – தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இது அலிபாக் நகராட்சியால் நடத்தப்படும் பள்ளியாகும்.

இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமி மற்றும் இருவரையும் பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி சிறை அதிகாரிகள் நவி மும்பையில் உள்ள தலோஜா மத்திய சிறைக்கு மாற்றியுள்ளனர்.

அர்னாப் சிறையில் – `ஊடகச் சுதந்திரம் பற்றிப் பேச பாஜகவுக்கு அருகதை இல்லை’ : காங்கிரஸ்

“இந்த மாற்றம் செய்யும் முடிவு சிறை அதிகாரிகளால் எடுக்கப்பட்டது. திங்கள்கிழமை, நாங்கள் தாக்கல் செய்த திருத்த மனு குறித்து அலிபாக் அமர்வு நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது. எங்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டால், அவர் மீண்டும் அழைத்து வரப்படுவார்.” என்று ராய்காட் காவல்துறைக் கண்காணிப்பாளர் அசோக் துதே கூறியுள்ளார் என்று ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தலோஜா மத்திய சிறைக்கு கொண்டுவரப்படும் அர்னாப் கோஸ்வாமி (நன்றி – The Hindu)

அலிபாக் சிறைக் கண்காணிப்பாளர் ஜெய்லர் உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், இது ஒரு உயர்மட்ட வழக்கு என்ற காரணத்திற்காகவும் அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஷேக் மற்றும் நிதேஷ் சர்தா ஆகியோரின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடித்த பின்னர், மூவரையும் தலோஜா சிறைக்கு மாற்றுமாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

டிஆர்பி-யில் முறைகேடு – ரிபப்ளிக் டிவி மீது குற்றச்சாட்டு

இதைத் தொடர்ந்து, அர்னாப் கோஸ்வாமி உட்பட மூவரும் அலிபாக் சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததை அடுத்து, தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ராய்காட் உள்ளூர்க் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜமில் ஷேக், ”அர்னாப் கோஸ்வாமி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் மொபைல் போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.” என்று கூறுயுள்ளார். மேலும் அவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருப்பதையும் கண்டுபிடித்துள்ள காவல்துறையினர், அலிபாக் ஜெயிலருக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளனர் என்று ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

“பொறுத்துக் கொள்ள முடியாது” – அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதி மன்றம் கண்டனம்

மேலும், “கைது செய்யப்பட்டபோது அவரது தனிப்பட்ட மொபைல் போன் எங்களால் கைப்பற்றப்பட்டது. பின் அவர் மொபைல் போனை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பது குறித்து நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்” என்று ஜமில் ஷேக் கூறியுள்ளார்.

அலிபாக்கைச் சேர்ந்த ஜெய்லர் , “கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில், கைதிகள் தங்கள் வழக்கறிஞர்களுடன் தொடர்பு கொள்ள தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதித்துள்ளோம். கைதிகளின் அழைப்புகள் மற்றும் அதன் நேரம் பற்றிய பதிவு எங்களிடம் உள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பால், அர்னாப்  கோஸ்வாமி எந்தத் தொலைபேசியையும் பயன்படுத்தியிருக்கிறாரா என்று நாங்கள் விசாரிக்கிறோம்.” என்று கூறியுள்ளதாக ‘தி இந்து’ என்று தெரிவித்துள்ளது.

டிஆர்பி வழக்கில் ரிபப்ளிக் டிவியைக் காப்பாற்ற முயல்கிறதா யோகி ஆதித்யநாத் அரசாங்கம்?

தலோஜா சிறைக்குக் கொண்டு வந்த போது பத்திரிகையாளர்களைப் பார்த்த அர்னாப் கோஸ்வாமி, “என் வழக்கறிஞர்களுடன் பேச என்னை அனுமதிக்கவில்லை. என் உயிருக்கு ஆபத்து உள்ளது. தயவுசெய்து எனக்கு உதவ வேண்டும் என்று  நீதிமன்றங்களிடம் சொல்லுங்கள். ” என்று கூறியுள்ளார்.

அப்போது, அங்கே நின்றிருந்தவர்கள் சிலர் அர்னாப்பிற்கு எதிராகவும் சிலர் ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்