Aran Sei

அர்னாப் கோஸ்வாமிக்கு முன்னுரிமை – 6 மனுக்களை ஒரே வாரத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம்

டந்த ஒன்பது மாதங்களில் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த ஆறு வழக்குகளை உச்சநீதிமன்றம் முன்னுரிமை கொடுத்து விசாரித்துள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அர்னாப் கோஸ்வாமியின் பெரும்பாலான வழக்குகளை ஒரே வாரத்தில் விசாரித்து தீர்ப்பளித்துள்ளதாகவும், அதில் ஒரு வழக்கு மறுநாளே முடித்து வைக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், மகாராஷ்ட்ரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கொரோனா பீதி காரணமாக, இரண்டு இந்து சாதுக்கள் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ரிபப்ளிக் தொலைகாட்சியில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தூண்டுதல்பேரிலேயே இந்த கொலை நடைபெற்றதாக அர்னாப் கோஸ்வாமி கூறினார். இதைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

அந்த முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக் கோரி, அர்னாப் கோஸ்வாமி, ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை மறுநாளே உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மூன்று வாரங்களுக்கு அர்னாப் கோஸ்வாமியை கைது செய்வதற்கு தடை விதித்தது.

இதேபோல், ரிபப்ளிக் தொலைக்காட்சி, டிஆர்பி மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், அக்டோபர் 10ஆம் தேதி, அர்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அக்டோபர் 15ஆம் தேதியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடித்து வைக்கப்பட்டதாக தி வயர் கூறுகின்றது.

இதேபோல், நவம்பர் மாத இறுதியில், அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் மறுநாளே விசாரணைக்கு எடுத்துக்கொண்டதுடன், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக, அர்னாபின் ஜாமீன் மனுவை எதன் அடிப்படையில், உச்சநீதிமன்றம் மறுநாளே விசாரணைக்கு எடுத்துக்கொண்டது என்பதை விளக்க வேண்டும் என்று கோரி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் துஷ்யந்த் தவே, நீதிமன்ற செயலாளருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்