Aran Sei

அர்னாபுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பாஜக தலைவர்கள் – பிறருக்கு மௌனம் காப்பது ஏன்?

ரிபப்லிக் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்சுவாமி கைதிற்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஸ்மிருதி இராணி , பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உட்பட பல பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் .மகாராஷ்டிரா அரசு  தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், கருத்துச் சுதந்திரத்தைத் தகர்த்துவிட்டதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர் .

ஊடக சுதந்திரம் குறித்த தலைவர்களின் அக்கறை பாராட்டத்தக்கது என்றாலும் இந்தியா முழுவதும் உள்ள  பத்திரிகையாளர்களைக் குறிவைத்துப் பாஜக அரசுகள் ஏராளமான கைது நடவடிக்கை மேற்கொண்டதை ஏன் பா.ஜ.க. தலைவர்கள் கண்டிக்கவில்லை என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளதாக தி வயர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது . அர்னாபிற்கு ஆதரவு தெரிவித்துத் தங்களின் ஒற்றுமையைக் காட்டியுள்ள பா.ஜ.க. தலைவர்கள், கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

  1. சித்திக் கப்பன்

azhimukham.com என்ற மலையாள செய்தி ஊடகத்தின் நிருபர் கப்பன், ஹத்ராஸில்  கும்பல் வன்புணர்வு மற்றும் கொலை செய்யப்பட்ட தலித் பெண் குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற அவரை அக்டோபர் 5 ஆம் தேதி உத்தரபிரதேச போலீஸ் கைது செய்தது. அவர் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு எதிராகச் ‘சதி’ செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

  1. கிஷோர்சந்திர வாங்கேம்

பாஜக தலைவர் ஒருவரின் மனைவி, சமூக ஊடகத்தில் எழுதிய பதிவிற்குப் பதிலளித்ததற்காகத் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் மணிப்பூரி பத்திரிகையாளர் வாங்கேம் இந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டார்.  ஆர்எஸ்எஸ், மணிப்பூர் பா.ஜ.க முதலமைச்சர் என்.பிரேன் சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக 2018 ஆம் ஆண்டில் அவர் தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு ஆளானார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை 2019 ல் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

3. பிரசாந்த் கனோஜியா

தி வயர் இந்தி பத்திரிகையின் நிருபராக இருந்த சுயாதீன பத்திரிகையாளர் கனோஜியா, உத்தரபிரதேச காவல்துறையினரால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு முறையும் ட்வீட் செய்ததற்காக அரசாங்கம் ‘தேசத்துரோக’ வழக்கு பதிவு செய்தது . இரண்டு வழக்குகளிலும், அவரை விடுவிக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.

  1. ராஜீப் சர்மா

அஸ்ஸாமி பத்திரிகையாளரும், DY365 என்ற செய்தி நிறுவனத்தின்  நிருபர் சர்மா. ஒரு மாவட்ட வன அதிகாரியின் புகாரின் அடிப்படையில் ஜூலை 16, 2020 அன்று கைது செய்யப்பட்டார். கால்நடை கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத செயல்களுடன் அதிகாரியின் தொடர்புகள் குறித்து சர்மா விசாரித்தார். பத்திரிகையாளரின் கைது தொடர்பான வழக்கு குறித்து சிஐடி விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவிட்டது.

  1. தவல் படேல்

குஜராத்தி செய்தி இணையதளத்தின் ஆசிரியர் தவல் படேல் மீது தேசத் துரோக குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டு மே மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

  1. நரேஷ் கோஹல்

ஹரியானாவில் உள்ள  ஜஜ்ஜர் எனும்  இந்தி நாளிதழின் புகைப்படக்கலைஞர் கோஹல், மே 7 ம் தேதி அவரின் சுற்றத்தார் தங்கள் வீடுகளில் கல் வீசப்படுவதாகப் புகார் தெரிவித்ததால் அவர் கைது செய்யப்பட்டார் . “பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொண்டது மற்றும் COVID-19 விதிமுறைகளை மீறியது” ஆகிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார் . நீதிமன்ற விசாரணையில் அவரது கைது பொருத்தமானது அல்ல என்று கண்டறியப்பட்டது.

  1. ராகுல் குல்கர்னி

மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளரும் முன்னணி மராத்தி செய்தி சேனலான ஏபிபி மஜாவின் நிர்வாக ஆசிரியர்  குல்கர்னி. ஏப்ரல் மாதம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயணிகள் ரயில் குறித்து போலி செய்திகளை பரப்பியதாகவும், இதனால் பாந்த்ரா நிலையத்தில் மக்கள் கூடிவருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். இருப்பினும், நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

  1. ராஜீவ் சர்மா

சுயாதீன பத்திரிகையாளர் மற்றும் வெளியுறவுக் கொள்கை விமர்சகர் ராஜீவ் ஷர்மாவை அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் தில்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர் இரண்டு வெளிநாட்டினரை உள்ளடக்கிய ஒரு உளவு கூட்டத்தின் ஓர் அங்கம் என்று போலீசார் கூறினர். ஷர்மாவின் கைது பத்திரிகையாளர் அமைப்புகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

  1. சேவாக் ரிக்ஸின்.

ஸ்டேட் டைம்ஸ் எனும் பத்திரிகையின் நிருபர் ரிக்ஸின்,  34,000 உறுப்பினர்கள் உள்ள பா.ஜ.க  மக்களவை உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியாலின் ஃ பேஸ் புக் பக்கத்தில்  கருத்து தெரிவித்ததற்காகக் கைது செய்யப்பட்டார் .அவருக்கு அன்றே ஜாமீன் வழங்கப்பட்டது.

இத்தனைப் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காத பாஜக தலைவர்கள், அர்னாப் கோசாமி கைது செய்யப்பட்டதற்கு எதிராக மட்டும் குரல் கொடுத்திருப்பதை தி வயர் இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்