Aran Sei

ஆல்ட் நியூஸ் ஜுபைர் கைதுக்கு இடைக்காலத் தடை

Image Credits: Opindia

நேற்று, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம், ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர், முகமது ஜுபைர் கைது செய்யப்படுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

நீதிபதி சஞ்சய் குமார் அகர்வாலின் அமர்வு, எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜுபைர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்து வருகிறது. புகார் அளித்த ஜெகதீஷ் சிங் மற்றும் சத்தீஸ்கர் அரசாங்கத்திற்கும் நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆகஸ்ட் 6-ம் தேதி, ட்விட்டர் பயனாளி ஜெகதீஷ் சிங்கின் (@JSINGH2252) இணையவழி வசவுக்கு ஜுபைர் பதிலளித்தார். அப்போது, ஜெகதீஷ் ஒரு சிறுமியுடன் எடுத்துக்கொண்ட ட்விட்டர் புகைப்படத்தை (சிறுமியின் முகத்தை மறைத்து) பகிர்ந்து, “ஹலோ ஜெகதீஷ் சிங். சமூக ஊடகங்களில் மக்களை வசைபாடும் உங்களது பகுதி நேர வேலை பற்றி உங்கள் அழகான பேத்திக்குத் தெரியுமா? உங்கள் ப்ரோஃபைல் படத்தை மாற்ற நான் பரிந்துரைக்கிறேன்,” என்று பதிவிட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் ஒரு சிறுமியை ‘துன்புறுத்தியது மற்றும் சித்திரவதை செய்ததாக’ குற்றம் சாட்டப்பட்டதற்காக ஐடி சட்டம் மற்றும் போக்ஸோ சட்டம் ஆகியவற்றின் கீழ் டெல்லி மற்றும் ராய்ப்பூர் காவலர்கள் ஜுபைருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.

இந்த இரண்டு முதல் தகவல் அறிக்கைகளும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509 பி (மின்னணுத் தொழில்நுட்பம் பயன்படுத்திப் பாலியல் துன்புறுத்தல்) கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டம், பிரிவு 12 (ஒரு குழந்தை மீது பாலியல் துன்புறுத்தலுக்குத் தண்டனை) மற்றும் தகவல் தொழில்நுட்பச் (ஐடி) சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான பொருட்களை மின்னணு வடிவத்தில் வெளியிடுவதற்கு அல்லது கடத்துவதற்கான தண்டனை) ஆகும்.

இதே ட்வீட் தொடர்பாக இதே போன்ற வழக்கில் ஜுபைர் மீது கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று டெல்லி உயர்நீதிமன்றமும் கடந்த மாதம் காவல்துறையிடம் கோரியிருந்தது. இதில் சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் புகார் அளித்தது.

ஜுபைர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், “எஃப்ஐஆர் சட்டத்தின் செயல்முறையை அரசு தவறாக பயன்படுத்துகிறது. கூறப்படும் எந்தவொரு குற்றமும் அந்த ட்வீட்டில் இல்லை” என்று வாதித்ததாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

“குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தாலும், இந்தக் குற்றங்கள் ஐபிசி, போக்ஸோ அல்லது ஐடி சட்டங்களின் கீழ் வராது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த முதல் தகவல் அறிக்கைகள் அற்பமானவை என்று கூறிய ஜுபைர், தனக்குத் துணையாக ஆல்ட் நியூஸ் இருப்பதாகவும் கூறியுள்ளார். எங்களது நிறுவனம் செய்யும் பணியின் காரணமாக ஜுபைர் குறிவைக்கப்படுகிறார் என்று ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா ​​தி வயரிடம் கூறியுள்ளார்.

“இதே போன்ற வேலைகளைச் செய்யும் பிற அமைப்புகள் இருந்தாலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களும் மற்றவர்களும் தங்கள் சமூக ஊடகக் கணக்குகள் மூலம் தவறான தகவல்களை எவ்வாறு பரப்புகிறார்கள் என்பதை நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம் என்பதன் காரணமாக ஆல்ட் நியூஸின் பணி தனித்துவமானது என நான் நம்புகிறேன்” என்றும் பிரதிக் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்