Aran Sei

‘கிராம சபையின் உரிமையை பறிக்கும் புதிய வனப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவை தமிழ்நாடு அரசு எதிர்க்க வேண்டும்’- மதிமுக தீர்மானம்

திமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில், வேளாண் சட்டங்கள், வனப் பாதுகாப்புச் சட்ட முன்வரைவுக்கு போன்றவற்றை எதிர்த்து 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இன்று(அக்டோபர் 20), சென்னையில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில், நீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்தீர்மானத்தில்,

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, அமைதியாகப் போராடிக் கொண்டு இருந்த விவசாயிகள் மீது தனது காரை ஏற்றி நான்கு விவசாயிகளைப் படுகொலை செய்து இருக்கின்றார்.

இத்தகைய கொடூரச் செயல்களைக் கண்டிக்காமல், பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கின்றார். விவசாயிகள் மீது கொலை வெறி வன்முறைகளை ஏவுவதற்குக் காரணமாக இருக்கும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கும், ஆர்எஸ்எஸ், சங் பரிவார் வன்முறைக் கூட்டத்துக்கும் மதிமுக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

கொலைக் குற்றவாளிகளைச் சட்ட நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும்; பாஜக அரசு மூன்று வேளாண் பகைச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

கிராம சபைக்கு வழங்கப்பட்டு இருக்கும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் தற்போது ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புதிய வனப் பாதுகாப்புச் சட்ட முன் வரைவை, தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும், இச்சட்டத் திருத்தத்துக்கு எதிராக வலுவான குரல் எழுப்ப வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தமிழக மக்களுக்குப் பச்சைத் துரோகம் இழைத்து வரும் பாசிச பாஜக அரசு, இனப் படுகொலை நடத்திய இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிப்பதையும் நிதி உதவி மற்றும் கூட்டுப் படைப் பயிற்சி நடத்துவதையும் மதிமுக கடுமையாகக் கண்டிக்கின்றது. ஒன்றிய பாஜக அரசு தமிழக மக்களின் உணர்வுகளுடன் உரசிப் பார்க்க வேண்டாம்; உடனடியாக இத்தகைய முயற்சிகளைக் கைவிட வேண்டும் என இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.

புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்ற ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைத்திட ஆணையிட்ட, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இதுபோன்ற தொடர் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது”

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்