Aran Sei

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்கக்கூடாது – தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்

மிழ் மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மதிக்காமால் ஒன்றிய அரசு கொண்டு வரும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்கக்கூடாதென தமிழ்நாடு அரசுக்கு மாநிலங்களவை மதிமுக தலைவர் வைகோ வேண்டுகோள்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் கருங்கற் பாறையை வெட்டி எடுத்துக் குகை குடைந்து, அங்கே நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில், கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதனால் முல்லைப் பெரியாறு, இடுக்கி ஆகிய அணைகளில் விரிசல் ஏற்படும்”.என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் வினோத் துவா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு: மதவாத பாசிசத்தை எதிர்பவர்களை ஒடுக்கும் பாஜகவுக்கு கிடைத்த சவுக்கடி என வைகோ கருத்து

மேலும், இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் சான்று செல்லும் என்ற பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீடு மனு, விசாரணையில் உள்ள நிலையில், கடந்த மே 20ஆம் தேதி, இத்திட்டத்திற்கான காட்டு உயிர்கள் பாதுகாப்பு வாரியத்தின் தடை இன்மைச் சான்று கோரி, தமிழ்நாடு அரசின் வனத்துறையிடம் டாடா நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, “இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அணைகளின் பாதுகாப்பு கேள்விக் குறி ஆகும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, இத்திட்டத்தை, Category A யின் கீழ்தான் பரிசீலிக்க முடியும் என்று அப்போதைய மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) கூறிய போதிலும், திட்டத்தை வெறும் கட்டுமானம் கட்டும் பிரிவில் அதாவது Category B என மாற்றி, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று அறிவித்து, ஒன்றிய அரசே நேரடியாக சுற்றுச்சூழல் சான்று வழங்கி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

‘நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லையா? அவர்களை கொரோனா தாக்காதா?’ – வைகோ கேள்வி

மேலும், தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் தமிழ்நாடு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியை மட்டும் தவிர்த்து விட்டு, பிற பகுதிகள் அனைத்தையும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளதாகவும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்து அந்த அறிக்கையில் கூறியுள்ள அவர், “2018 ஆம் ஆண்டு, மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என் தலைமையில் 13 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டோம். இந்த நடைபயணத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார் என்பதையும், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியூட்ரினோ திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று அறிக்கை வாயிலாக அவர் வலியுறுத்தி இருந்தார் என்பதையும் நினைகூர விரும்புகின்றேன்”. என்று நினைவு கூர்ந்துள்ளார்.

இந்தியக் கடற்பகுதிக்கு அருகில் சீனா தன் ராணுவத்தை நிறுத்துவது தமிழகத்திற்கு ஆபத்து – வைகோ எச்சரிக்கை

எனவே, காட்டு உயிர்களுக்குக் கேடு இல்லை என, மாநில அரசிடம் சான்று கோரி இருக்கின்ற விண்ணப்பத்தை, தமிழ்நாடு அரசு ஏற்காது; ஏற்கெனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்பப் பெற வேண்டுமெனவும் ; உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்து உரைத்துச் சுற்றுச்சூழல் சான்றுக்குத் தடை விதிக்கும் தீர்ப்பைப் பெற, தமிழ் நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

.
மேலும், “தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல், ஒன்றிய அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றது. எனவே, இந்தத் திட்டத்திற்காகத் தமிழக அரசு வழங்கிய நிலத்தையும் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என்று மதிமுக தலைவர் வைகோ தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்