Aran Sei

‘செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும்’ – மே பதினேழு இயக்கம் கோரிக்கை

மிழ்நாட்டின் எதிர்கால தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மேலும், ஒன்றிய அரசு நிறுவனத்தை ஒரு தனியார் நிறுவனம் ஏற்று நடத்த முடியுமெனில், மாநிலம் அந்த உரிமையற்றிருக்க இயலாது என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இன்று (மே 14), மே பதினேழு இயக்கம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு அருகிலேயே தடுப்பூசி ஆலைகளை கொண்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் செங்கல்பட்டில் பல ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது என்னும் செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதில் தாமதம் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் – ஃபிட்ச் மதிப்பீடு நிறுவனம் எச்சரிக்கை

“இந்திய அரசிற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல். லைஃப்கேர் (HLL LifeCare) நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்.எல்.எல். பயோடெக் (HLL BioTech) நிறுவனத்தின் கீழ் செயல்படும் செங்கல்பட்டு தடுப்பூசி வளாகம், ரூ.903 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த நவீன தடுப்பூசி உற்பத்தி கட்டமைப்புடன் 2019-இல் உருவாக்கப்பட்டதாகும். எச்.எல்.எல். லைஃப்கேர் பொதுத்துறை நிறுவனத்தை மோடி அரசு 2018-இல் தனியார்மயமாக்க முடிவு செய்து விட்ட நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தையும் தனியாரிடம் கையளிக்க இயக்காமல் வைத்திருந்தது. தற்போது கொரானா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தடுப்பூசி ஆலை ஏன் இயக்கப்படவில்லை என்ற கேள்வி இப்போது மக்களிடையே எழுந்துள்ளது.” என்று அவ்வியக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், “தமிழ்நாடு அரசு சர்வதேச டெண்டர் முறையில் தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டமிடுதலில் இந்த தடுப்பூசி கொள்முதல் என்று அறிந்துகொள்ள முடிகிறது. குறுகிய கால தீர்வுக்கு இது சிறந்த முறையாக இருக்கலாம். ஆனால், இயக்கப்படாமல் இருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்திலுள்ள தடுப்பூசி ஆலைகளை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தினால், தமிழ்நாட்டின் நீண்ட கால தடுப்பூசி தேவையை நிவர்த்தி செய்துகொள்வதற்கும், மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யவும் முடியும்.” என்று மே பதினேழு இயக்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

“தடுப்பூசி தாருங்கள், நாங்கள் தன்னார்வலர்களை தருகிறோம்” – சுகாதாரத்துறைக்கு சு.வெங்கடேசன் கடிதம்

மேலும், கொரானா வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கும் நிலையில், தற்போதைய தடுப்பூசிகள் செயலிழந்து போகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தனக்கான தடுப்பூசி ஆய்வு கூடத்தையும், உற்பத்தி ஆலையையும் வைத்திருப்பது நீண்டகால சிக்கல்களுக்கு நிரந்த தீர்வாக அமையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

“செங்கல்பட்டு தடுப்பூசி ஆலைகள் இயக்கப்படுமானால், ஒரு சுழற்சியில் 40,000 தடுப்பூசி மருந்து குப்பிகள், அதாவது ஒரு நாளைக்கு மூன்று சுழற்சியில் 12,000 குப்பிகள் தயாரிக்க முடியும் என்றும், ஒரு குப்பி மருந்தில் 10 தடுப்பூசிகள் போட முடியும் என்றும், ஒரு தடுப்பூசிக்கான உற்பத்தி விலை வெறும் 8 ரூபாய்க்குள் முடியும் என்றும் தடுப்பூசி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தனியார் நிறுவங்களுக்கு ரூ. 4,500 கோடிகள் அளித்து தடுப்பூசி பெறமுடியாத முடியாத நிலையில், வெறும் 300 கோடியில் இந்த ஆலைகளை இயக்க முடியும் என்கின்றனர். தமிழ்நாடு அரசே இதனை ஏற்று நடத்துமானால், தற்போது தடுப்பூசி தயாரிக்கும் இரண்டு நிறுவங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் விலையை விட பல நூறு மடங்கு குறைவான விலையில் அதே தடுப்பூசிகளை பெற முடியும்.” என்று மே பதினேழு இயக்கம் கூறியுள்ளது.

‘கோவிட்ஷீல்டு’ தடுப்பூசி பற்றாக்குறை ஜூலை மாதம்வரை நீடிக்கும் – அதார் பூனாவாலா அறிவிப்பு

மேலும், குஜராத் மார்வாடி-பனியா கூட்டத்தின் நலனுக்காக தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களின் லாபத்தில் எவ்வித தடையும் ஏற்படக்கூடாது என்றே, செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை இயக்க ஒன்றிய அரசு முன்வரவில்லை என்றும் ஆலை இயக்கம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு முன்வந்து ஆலையை இயக்க விருப்பம் தெரிவிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவ்வியக்கம் குறிப்பிட்டுள்ளது.

“தமிழ்நாட்டின் எதிர்கால தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசு நிறுவனத்தை ஒரு தனியார் நிறுவனம் ஏற்று நடத்த முடியுமெனில் , மாநிலம் அந்த உரிமையற்றிருக்க இயலாது.” என்று மே பதினேழு இயக்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இவ்வாறு மக்கள் தேவைக்காகவும், நெருக்கடியை எதிர்கொள்ளவும் மக்கள் நல கொள்கை அடிப்படையில் இந்நிறுவனத்தை துணிந்து கையில் எடுப்பது வரலாற்று சிறப்பு மிக்க கொள்கை முடிவாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம். இவ்வாறான கொள்கை முடிவினை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் கொள்கை முடிவாக எடுக்க வேண்டுமெனவும், இம்முயற்சிக்கு அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு தமிழக அரசின் கொள்கையாக வலுப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கையை முன்வைக்கிறோம்.” என்று மே பதினேழு இயக்கம் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்