Aran Sei

‘உடலுறவிற்கு மனைவியின் சம்மதம் கட்டாயமா?’- எங்களுக்கு திருமணமே வேண்டாமென ட்வீட் செய்யும் ஆண்கள்

திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வது பாலியல் வல்லுறவு குற்றம் என இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 யை மாற்றியமைக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜனவரி 11ஆம் தேதி முதல் டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

திருமணத்திற்குப் பின்பு கணவனாக இருந்தாலும் கூட உடலுறவிற்கு விருப்பம்  இல்லை என்றால் அதனை மறுக்கும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் நேற்று(ஜனவரி 20) #MarriageStrike ஹேஷ்டேக் டிரெண்டானது. திருமணத்திற்கு பின்பான உடலுறவுகளில் பெண்களின் சம்மதம் வேண்டும் என்பது பெண்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பல ஆண் ட்விட்டர் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே, நாங்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

#MarriageStrike ஹேஸ்டாக் டிரெண்டிக்கு பதிலளிக்கும் விதமாக அனைத்திந்திய முற்போக்கு மகளிர் சங்க செயலாளர் கவிதா கிருஷ்ணன் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், #MaritalStrike இல் ஈடுபடும் ஆண்கள் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது. ஏனெனில் திருமணத்தில் பெண்களின் சம்மதம் தேவையில்லை என்று நினைக்கும் எந்த ஆண்களும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கவிதா கிருஷ்ணன் அதில் தெரிவித்துள்ளார். மேலும் பல பெண்களும் இந்த ட்விட்டர் ட்ரெண்டிங்கிற்கு பதிலளித்துள்ளனர்.

ஒரு ஆண் தனது 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மனைவியுடன் அவளது அனுமதியின்றி உடலுறவு மேற்கொண்டால் அது பாலியல் வன்மொடுமை குற்றமாகாது என பாலியல் வல்லுறவை வரையறுக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 கூறுகிறது.

“திருமணத்திற்குப் பின்பு மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவன் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதை பாலியல் வல்லுறவு குற்றம் எனக் கூறும் 50 நாடுகள் இந்த விவகாரத்தைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்களா?” என்று டெல்லி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசு, டெல்லி உயர் நீதிமன்றத்தில், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தனது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தது. அதில், மனைவியைக் கணவன் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வதால், திருமணம் என்ற சமூகக் கட்டமைப்பே கேள்விக்குறியாகும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

“திருமணத்திற்குப் பிறகு பெண் என்பவள் ஆணின் “சொத்து” என்றும், திருமணத்தின் நோக்கம் குழந்தை பெறுதல் என்பதால், திருமணத்தின் பாலியல் கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு பெண் கட்டுப்பட்டவள்” என்ற அடிப்படையில் இது ஒன்றிய அரசால் நியாயப்படுத்தப்படுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வது பாலியல் வல்லுறவு குற்றமா இல்லையா என்பதைப் பற்றிய தனது நிலைப்பாட்டை முடிவு செய்ய “கால அவகாசம்” தேவை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஜனவரி 17 அன்று கூறியுள்ளது.

Source: The Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்