மகாராஷ்ட்ரா மாநிலம் கட்ச்ரோலி மாவட்டத்தில், கயரபட்டி காட்டுப் பகுதியில் நேற்று (13.11.21) மஹாராஷ்ட்ர மாநில காவல்துறை மற்றும் C-60 கமாண்டோக்கள் இணைந்து நடத்திய தாக்குதலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில், மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு (Central Committee) உறுப்பினரும், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் சத்திஸ்கர் (MMC) பிராந்தியத்தின் பொறுப்பாளர் மிலிந்த் டெல்டும்பே-யும் ஒருவர் என்பது உறுதியாகியிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிலிந்த் டெல்டும்பே-வின் மனைவி ஏஞ்சலா-வுக்கு, அவருடைய கணவரின் மரணம் குறித்த தகவலை, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்பேவின் மூத்த சகோதரர் மிலிந்த் டெல்டும்பே. இந்தியஅரசியல் சாசனத்தின் தந்தையான டாக்டர் அம்பேத்கரின் பேத்தியை ஆனந்த் டெல்டும்பே திருமணம் செய்துள்ளார்.
ஆனந்த் டெல்டும்பேவின் சகோதரர் மிலிந்த் டெல்டும்பே, 1980களில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில், கோல் இந்தியா நிலக்கரி பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனத்தில், தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில், அகில மஹாராஷ்ட்ரா கம்கார் சங்கத்தில், மிலிந்த டெல்டும்பே தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த மிலிந்த் டெல்டும்பே, 1980களின் இறுதியில் அப்போதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) (மக்கள் யுத்தம்) அமைப்பில் இணைந்து செயல்பட்டுள்ளார்.
மக்கள் யுத்தம் கட்சியின் அப்போதைய தலைவர் கொண்டபள்ளி சீதாராமையா, கருத்து வேறுபாடு காரணமாக மகாராஷ்ட்ரா மாநிலத்தின் அனைத்து நிர்வாகிகளையும் கூண்டோடு கட்சியை விட்டு வெளியேற்றியதை தொடர்ந்த, மிலிந்த் டெல்டும்பேவும் மற்றும் சிலரும் இணைந்து மகாராஷ்ட்ரா (மக்கள் யுத்தம்) என்ற பெயரில் சில காலம் தனியாக செயல்பட்டு வந்துள்ளனர். 1992 ஆம் ஆண்டு மிலிந்த் டெல்டும்பே மீண்டும மக்கள் யுத்தம் கட்சியில் இணைந்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு மக்கள் யுத்தம் கட்சியும், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் (MCC) என்ற அமைப்பும் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்த மாவோயிஸ்ட் கட்சியின் மையக் குழு உறுப்பினராக மிலிந்த் டெல்டும்பே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது, மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் சத்திஸ்கர் (MMC) பிராந்தியத்தின் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த மிலிந்த் டெல்டும்பேவின் தலைக்கு, காவல்துறை தரப்பில் 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
2017ஆம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகே பீமா கோரேகான் என்ற இடத்தில், பேஷ்வா படைகளை, தாழ்த்தப்பட்டவர்களை கொண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ‘மஹர் படைகள்’ வெற்றி கொண்டதன் 200 ஆம் ஆண்டு விழா நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வையொட்டி நடைபெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். இதில் மாவோயிஸ்ட் கட்சிக்கு தொடர்பிருப்பதாக கூறிய காவல்துறை, பீமாகோரேகான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த, அதற்கு ஆதரவளித்த மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் உட்பட 16 பேரை கைது செய்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மிலிந்த் டெல்டும்பே உட்பட மேலும் 5 பேர் தலைமறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், கட்ச்ரோலி காட்டுப் பகுதியில் காவல்துறையினரால் மிலிந்த் டெல்டும்பே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.