Aran Sei

வெள்ளத்தில் பலியான உயிர்கள்: கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வது எப்போது? – கௌரவ் விவேக் பட்நாகர்

சாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத்தில் நந்ததேவி பனியாற்றின் பனிப்பாறையில் ஒரு பகுதி உடைந்து, கீழே நகர்ந்து தவளிகங்காவில் உள்ள தபோவன் நீர்மின்திட்டத்தை நோக்கி வந்தது. ஞாயிறு காலைச் சூரிய ஒளியில், மலையில் உலா வந்துக் கொண்டிருந்த சிலர் மிகப் பெரிய அளவு சிதைக் கூளங்கள்(debris) ஆற்றில் அடித்துக்கொண்டு வருவதைப் முதலில் பார்த்தனர். சத்தம்போட்டும், விசிலடித்தும் கீழே இருந்தவர்களை எச்சரித்தனர்.

இந்த விபத்திலிருந்து தப்பித்த மணீஷ் குமார் தண்ணீர் ஆரவாரத்துடன் உருண்டோடிவரும் உரத்த சத்தத்தைக் கேட்டபின் மலைமேலே சென்று பார்த்தார்; முறையான எச்சரிக்கை அமைப்பு இருந்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்று பின்னர் அவர் தெரிவித்தார். அதற்குள், சில கி.மீ. தொலைவில் இருந்த ரிஷி கங்கா நீர்மின் திட்டமும் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

‘யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்’: மோடியின் அரசும் பொதுநலனும் – ரவி ஜோஷி

எச்சரிக்கைச் செய்ய எந்த வழியும் இல்லை.

சில கி.மீ. தூரத்தில் ஆற்றின் மேல் பகுதியில் புகைப்படக் கருவியோ, உணரிகளோ(சென்சார்) நிறுவப்பட்டிருந்தால் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு முன்பே எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டிருக்கும், அதன்மூலம் மேலும் ஏராளமான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அது அவ்வாறு நடக்கவில்லை.

கடந்த 15 ஆண்டுகளில் இந்தத் தபோவன் நீர்மின் திட்டம் மூன்று முறை மிகப் பெரிய வெள்ளப் பெருக்கிற்கு உள்ளானபோதும் இதுவரை முன்னறிவிப்பு – எச்சரிக்கை அமைப்பு நிறுவப்படவில்லை‌. அது இருந்திருந்தால் தொழிலாளர்களுக்கு வரவிருக்கும் வெள்ளம் பற்றிய அபாய எச்சரிக்கையைக் கொடுத்து இருக்கலாம். மத்திய அரசு தன் பங்கிற்கு கடந்த காலத்திலிருந்து எந்தப் படிப்பினையையும் கற்றுக் கொள்ளாமல், எந்தவித மேற்பார்வையும் இன்றி, சாதாரண பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கூட எடுக்கவில்லை என்பதையே சாமோலி துயரம் மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. தாக்கர் என்பவர்,” ரெய்னி கிராமத்தில் முதலில் கண்டதும் கீழே உள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்ய ஒரு அமைப்பு இருந்திருக்க வேண்டும். அது தபோவன் மற்றும் பிற பகுதிகளில் உயிரிழப்பைத் தடுத்திருக்கும்,” என்று கூறுகிறார். பாதிக்கப்படக்கூடிய இடங்களில்  உள்ள ஓடைகளில் புகைப்பட கருவியை நிறுவ முடியும் என்று கூறும் தாக்கர்,” ஆனால் இது பேரழிவு மேலாண்மை தகவலின் ஒரு பகுதியாகும். இந்த நிகழ்வு விளக்குவது போல, நாம் பேரழிவு மேலாண்மையின் முதல் படியிலேயே தவறு செய்கிறோம். அதாவது தகவலைப் பெறுவது மற்றும் அதனைப் பயன்படுத்துவது என்பதில் தவறு செய்கிறோம்,”என்கிறார் அவர்.  தெற்காசிய அணைகள், ஆறுகள் மற்றும் மக்களின் வலைப்பின்னலின் ஒருங்கிணைப்பாளராக உள்ள தாக்கர்,” நேரடியாக ஒட்டுமொத்தப் பகுதியையும் கண்காணிப்பது இயலாததாகும்” என்பதை ஏற்றுக்கொள்கிறார்.” எனினும் செயற்கைக்கோள் கண்காணிப்பிற்கு வாய்ப்புள்ளது. மேலும் ரேடார்கள் கூட இழப்புகளைக் குறைக்க உதவும்,” என்கிறார்.

’சீனா என்ற வார்த்தையை உச்சரிக்க அஞ்சுகிறாரா பிரதமர் மோடி?’ – கார்த்திக் சிதம்பரம்

இந்தியா குறிப்பிடத் தகுந்த அளவு செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தும் திறமைப் பெற்றிருந்தும், அந்தப் படங்களை முன்னறிவிப்பு எச்சரிக்கைக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்த இயலாமல் உள்ளது என்பது வியப்பிற்குரியது. இந்த நிகழ்வில், துயரம் நடந்து 48 மணிநேரம் ஆனபின்பும்கூட, அமெரிக்காவின் ப்ளானட் ஆய்வகம் போன்ற உலக நிறுவனங்களிடமிருந்துதான் செயற்கை கோள் படங்களைப் பெற்றுளோம். நமது அமைப்புகளிடமிருந்து படங்களைப் பெறவில்லை‌.மேலும் இவ்வாறு இந்திய நிறுவனங்களிடமிருந்து படங்களைப் பெற இயலாமல் போவது இது முதன்முறை  அல்ல. கடந்த காலங்களிலும் கூட, தொலைதூர பகுதிகளில் நடந்த இது போன்று  நிகழ்ந்த போதும், வெள்ளத்தால் கீழே இருக்கும் உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்ட போதும், இந்திய செயற்கைக்கோள் தரவுகள் இதுவரை உதவவே இல்லை. நாட்டின் மற்றப் பகுதிகளைவிட இந்தப்பகுதி திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படும்  உயர் அபாயத்தில் இருப்பதை கருத்தில் கொண்டால் உத்தரகன்ட்டில் டோப்ளர் ரேடார்களை நிறுவும் எண்ணம் வெகுகாலத்திற்கு முன்பே வந்திருக்க வேண்டும். ” அவைகள் 2013 ஜூன் பேரழிவிற்கு  மிகவும் முன்பே வந்திருக்க வேண்டும். ஏற்கனவே இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு விட்டதால் அதுகுறித்து விவாதமும் கூட நடந்தது,” என்கிறார் தாக்கர். ஆனால் அவற்றில் ஒன்று முதலாவதாக 2020 ஆம் ஆண்டில்தான் நிறுவப்பட்டது என்கிறார் அவர். இந்தக் கருவிகள் மேக வெடிப்பு, கடுமையான பனி அல்லது இது போன்ற திடீர் நிகழ்வுகள் குறித்து அவை நடப்பதற்கு ஒரே சில மணி நேரத்திற்கு முன்பே எச்சரிக்கைச் செய்யும் வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஐடி-களில் அநியாயமாக மறுக்கப்படும் இட ஒதுக்கீடு –  ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்

தெற்காசிய அணைகள், ஆறுகள் மற்றும் மக்களின் வலைப்பின்னல் அமைப்பின் ஒரு பகுப்பாய்வு, தீவிர வானிலை நிகழ்வுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்துள்ளது. 2019 ம் ஆண்டின் பருவமழைக் காலத்தில் மட்டும் 23 மேக வெடிப்புகள் இந்த மாநிலத்தில் நடந்துள்ளதாகக் கண்டுள்ளது. இது முன்னறி- எச்சரிக்கை கருவிகள் இல்லாமையைத் தெளிவாகக் காட்டுகிறது.

எல்லையில் இராணுவத்திற்கு பனியின் அளவை அறிந்து கூறும் இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கீழுள்ள பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு நிறுவனத்தைத் தவிர, வேறு சில நிறுவனங்களும் பனிப் பொழிவு பற்றிய ஆய்வை மேற்கொள்கின்றன என்கிறார் தாக்கர். “இந்தத் துயரத்தில் பனிப்பொழிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பிப்ரவரி 4,5 தேதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. அதனுடன் பனி உருகுவதும் நிலச்சரிவிற்கு வாய்ப்பை உண்டாக்கி, இந்தத் துயரம் நிகழக் காரணமாகியது,” என்கிறார் அவர். அச்சுறுத்தலை நினைவுகூர்ந்த தாக்கர் மேல்பகுதியில் கண்காணிப்பு அச்சுறுத்தலுக்கு ஆற்றில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களைப் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்பார்ப்பது கூடாது. அதற்குப் பதிலாக, திட்ட முன்னெடுப்புகள் அச்சுறுத்தலை நினைவில் கொண்டிருக்க வேண்டும் என்று மேலும் கூறுகிறார். “தபோவன்னில் இது போன்ற ஒரு பெரிய அணையைக் கட்டும் போது நீர்பிடிப்பு பகுதியில் பேரழிவுச் சாத்தியங்கள் மற்றும் பாதிப்புகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் மக்கள் மற்றும் திட்டம் இரண்டின் பாதுகாப்பிற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.

ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த, மேலும் பலர் காணாமலே போன, பல கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நாசமாக்கிய 2013 ம் ஆண்டின் கேதார்நாத் வெள்ளத்திற்குப் பிறகு முன்னெச்சரிக்கை அமைப்புகளை நிறுவ சட்டமியற்றுபவர்கள் தேவையான அளவு பேசி இருக்கிறார்கள். ஆனால் களத்தில் மிகமிகக் குறைவாகவே நடந்துள்ளது.

2017 ல் மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய அணுமின் சக்தி மற்றும் விண்வெளித்துறை மாநில அமைச்சர் ஜிதேந்திர சிங், உத்தரகன்ட்டில் கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் செல்லும் யாத்ரீகர் பாதையிலும், பித்ரோகர்- மால்பா வழித்தடத்திலும் மழையால் ஏற்படும் நிலச்சரிவு குறித்து முன்னெச்சரிக்கை செய்யும் அமைப்புகள்  சோதனை ரீதியாக பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் நிலப்பகுதி(புவியியல், உருவவியல்) மற்றும் தற்காலிக (முதன்மையாக  நீண்டகால மழை பொழிவுகள்) காரணிகளுக்கிடையிலான உறவுகள் அடிப்படையில் முன்னறிவிப்பு உருவாக்கப்படும்,” என்று கூறினார். அவரது பதில்,” கடுமையான மழை/ மேக வெடிப்புகள் எச்சரிக்கை”  செய்யும்  கருவிகள் அகமதாபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விண்வெளி பயன்பாட்டு மையத்தில் இந்திய நிலப்பகுதியில்  பயன்படுத்தும் சோதனை மாதிரியை உருவாக்கி உள்ளது என்றும் கூறுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் – நாடாளுமன்றத்தில் அமித் ஷா வாக்குறுதி

அதிகரித்து வரும் தீவிர மழை, பனிப் பொழிவுகள்

 இமயமலையின் கீழ் பகுதிகளில் தீவிர மழை மற்றும்/அல்லது பனி, அதே போல திடீர் வெள்ளம் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டில் வெளிவந்த ஒரு அறிக்கையின் படி, ஐஐடி பாம்பே மற்றும் ரூர்க்கி தேசிய நீரியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்  இமாச்சலப் பிரதேசத்தின் சட்லெஜ் ஆற்றுப் படுகையிலும், உத்தரகண்டின் கங்கையின் தலைப்பகுதியிலும் 1980-1991 மற்றும் 1992-2003 ஆகிய ஆண்டுகளுக்கிடையே தீவிர மழை பொழிவு நிகழ்வு நடை பெறுவது இருமடங்காகி இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

அது ஐஐடி கோரக்பூர் நீரியலாளர்களின் மற்றொரு ஆய்வையும் சுட்டிக் காட்டி, தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் தென்னிந்தியாவிலும், இமயமலையிலும்  தீவிர மழை பொழிவு நிகழ்வு கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

போராட்ட களத்தில் பூங்கா அமைத்த விவசாயிகள்: சட்டங்களைத் திரும்ப பெறாமல் ஒரு அங்குலம் கூட நகர முடியாது – விவசாயிகள் திட்டவட்டம்

இந்த ஆய்வில் உடன் பங்கேற்ற ரஹீம் மெய்தியை மேற்கோள் காட்டி உள்ள அந்த அறிக்கை, தீவிர மழைப் பொழிவுகளை  தவிர்க்க முடியாது என்பதால்,” வெள்ளத்தை கட்டுப்படுத்தும் உத்திகளை நாம் மேற்கொள்ள வேண்டும்,” என்று கூறுகிறது. ஐஐடி பாம்பே பேராசிரியரும், ஆய்வின் மற்றொரு துணை ஆசிரியருமான சந்திமால் கோஷ்,”  இமயமலைகளுக்கும் அதே போல அந்தப் பகுதியில் வாழும் 170 லட்சம் மக்களுக்கும் நன்மை பயக்கும்  முன்னெச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டிய நேரம் இது,” என்று கூறுகிறார்.

www.thewire.in இணையதளத்தில் கௌரவ் விவேக் பட்நாகர் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

https://thewire.in/environment/joshimath-nanda-devi-early-warning-system

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்