மியான்மரில் இருந்து வரும் அகதிகளுக்கு உணவு, தங்குமிடம் வழங்கத் தடை விதிக்கும் உத்தரவை, ஐநா அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று மணிப்பூர் அரசு திரும்பப் பெற்றுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
மார்ச் 26 ஆம் தேதி, மியான்மரிலிருந்து அடைக்கலம் கேட்டு வரும் அகதிகளை ‘மரியாதையாகத் திருப்பி’ அனுப்புமாறு எல்லைப்புற மாவட்ட அதிகாரிகளுக்கு மணிப்பூர் அரசு உத்தரவிடப்பட்டிருந்தது.
மாநில உள்துறை அதிகாரிகள் சார்பில் சந்தேல், டெங்னோபால், கம்ஜோங், உக்ருல் மற்றும் சூரசந்த்பூர் மாவட்டங்களின் துணை ஆணையர்களுக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தில், ஆதார் பதிவு பணி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த நடைமுறைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகளைப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை இன்றைக்குள் (மார்ச் 30) சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை வாபஸ் பெறுவதாக மணிப்பூர் மாநில உள்துறை அதிகாரிகள் நேற்று (மார்ச் 29) மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
“கடிதத்தின் உள்ளடக்கங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, வேறு விதமாக விளக்கப்பட்டுள்ளன என தோன்றுகிறது. இந்தத் தவறான புரிதலைத் தவிர்க்கும் பொருட்டு, மேலே குறிப்பிட்ட 26.03.2021 தேதியிட்ட கடிதத்தை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது.” என்று மாநில அரசின் சிறப்பு உள்துறைச் செயலர் எச்.ஞானபிரகாஷ் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாக என்டிடிவி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அச்செய்தியில், “காயமடைந்த மியான்மர் நாட்டினருக்கு (அகதிகள்) சிகிச்சை அளிக்க இம்பால் நகருக்கு அழைத்துச் செல்லவது உட்பட அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்து வருகிறது. மாநில அரசு அனைத்து உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மியான்மருக்கான தூதர், அங்கு ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி காரணமாக, அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குமாறு இந்தியா உள்ளிட்ட மியான்மரின் எல்லைபுற நாடுகளின் அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மணிப்பூர் மாநில அரசின் முந்தைய உத்தரவு சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்களை எழுப்பியது. பலர் இது மனிதாபிமானமற்றது என்றும், இந்தியாவின் நீண்டகால விருந்தோம்பல் பாரம்பரியத்திற்கு எதிராகச்சென்று விட்டனர் என்றும் விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.