Aran Sei

தமிழகத்தில் காவல்துறை தொடர்புடைய இரண்டு மரணங்கள் – என்ன செய்கிறார் டிஜிபி சைலேந்திர பாபு?

காவல்துறை அதிகாரிகள் நடத்திய தாக்குதலில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உலகநாதன் என்பவர் மரணமடைந்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், வடகரைத்தாழனூர் கிராம எல்லையில், டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்குப் பக்கத்தில் சு.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் (63) என்பவர் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

உலகநாதனின் கடைக்கு, அரகண்டநல்லூர் காவல் நிலையத்தின் பயிற்சி டிஎஸ்பி மற்றும் அவருடன் இருந்த சில காவலர்கள் சென்றுள்ளனர். அப்போது, காவலர்களுக்கும் உலகநாதனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காவலர்கள் உலகநாதனை கடுமையாகத் தாக்கியதாகவும், சவுக்கு கட்டையால் அவரது மார்பில் குத்தியதால் அவர் மயங்கி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், உடனிருந்த உலகநாதனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள், தாங்கள் அடித்து உலகநாதன் உயிரிழக்கவில்லை என்றும் அவர் வலிப்பு வந்தோ அல்லது மாரடைப்பு ஏற்பட்டோ உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

இதையடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கையில், கடுமையாகத் தாக்கியதில் உலகநாதன் இறந்தார் என்று முடிவு வந்தால், சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார். சமீபத்தில், முதுகளத்தூர் மாவட்டம், நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன், காவல்துறை விசாரணைக்கு பின்னர் மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்விரண்டு மரணங்களுக்கும், காவல்துறையின் மெத்தனப் போக்கே காரணம் என்று அதிமுகவின் ஒருங்கிணப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியுள்ள அவர், குற்றம் புரிந்த நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை சரி செய்வதற்காக, ஸ்டார்மிங் ஆப்ரேஷனுக்கு உத்தரவிட்ட டிஜிபி சைலேந்திர பாபு, இந்த இரண்டு சம்பவங்களிலும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பாரா? காவல்துறையினர் தங்களின் தற்காப்புக்காக துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது என்று கூறியர், காவல்துறையினால் பாதிக்கப்பட்டிருக்கும் எளிய மக்களிடத்தில் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செய்தியாளர்: தேவா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்