Aran Sei

‘மோடியால் இந்நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவருக்கு விற்க முடியாது’ – மம்தா பானர்ஜி கண்டனம்

மோடியால் நாட்டின் சொத்துக்களையும் பொதுமக்களின் சொத்துக்களையும் வெளிநாட்டவருக்கு விற்பனை செய்ய முடியாது என்று மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் திட்டத்தைப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் அண்மையில் வெளியாயின.

இது தொடர்பாக நன்கு அறிந்த நபர் ஒருவர், “எல்ஐசியின் பங்குகளை பெரிய அளவில் விற்க முடிவு செய்யப்பட்டிருப்பதால், ஒரு வெளிநாட்டு முதலீட்டாளரால் அதிக எண்ணிக்கையிலான பங்குகளை வாங்க முடியும். இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அரசு நிர்வகிக்கும் வங்கிகளில் 20 விழுக்காடு வரை அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வழங்கல் நிகழ்வான எல்.ஐ.சியின் பங்கு விற்பனையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், ஓய்வூதிய நிதிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை பங்குகள் வாங்க அனுமதிக்க முடியும்.

10 விழுக்காட்டிற்கு அதிகமான பங்குகள் வாங்கப்படுவதை அன்னிய நேரடி முதலீடு என்று ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.

எல்ஐசியில் 100 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு, 2022 ஆம் ஆண்டு வரையிலான நிதிநிலையில் ஏற்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இடைவெளியை 6.8 விழுக்காடாக குறைக்கும் வகையில் இந்த பங்கு விற்பனையைப் பார்க்கிறது.

இதுதொடர்பாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் தனது டிவிட்டர் பக்கத்தில், பங்கு விற்பனை குறித்து மம்தா பானர்ஜி பேசும் காணொளியை வெளியிட்டுள்ளார்.

அக்காணொளியில், “இது மோடியின் சொத்துக்கள் அல்ல. இது இந்நாட்டின் சொத்து. மோடியால் நாட்டின் சொத்துக்களை, பொதுமக்களின் சொத்துக்களை இதுபோல விற்பனை செய்ய முடியாது. இது பாஜக என்ற ஒரு கட்சியுடைய விவகாரம் அல்ல. மாறாக, இது இந்நாட்டின் விவகாரம். இது ஒரு கெடுவாய்ப்பான முடிவு. இதற்கு கண்டனம் தெரிவிக்க நம் நாடு முழுவதும் என்னுடன் இணைய வேண்டும்.” என்று மம்தா பானர்ஜி அழைப்புவிடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்