Aran Sei

‘பாஜக தோல்வியுற்றால், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போலதான் செய்வார்கள்’ – மம்தா பானர்ஜி

பாஜக தான் நாட்டின் மிகப்பெரிய ‘குப்பை’ கட்சி என்றும் விவசாய சட்டங்கள் விவகாரத்தில், பாஜக இப்படியே பிடிவாதம் பிடித்தால், கண்டிப்பாக நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லி எல்லைகளில், கடந்த 45 நாட்களுக்கு மேலாக, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா மட்டுமின்றி, நாட்டில் உள்ள பல மாநிலங்களில் இருந்தும் இந்த போராட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.

‘விவசாயச் சட்டங்களை நீங்கள் நிறுத்தி வைக்கறீர்களா? அல்லது நாங்கள் செய்யவா?’ – உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி

இதுவரை, 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிரிழந்துள்ளனர். மறுபுறம், போராடும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன.

இந்நிலையில், இன்று (ஜனவரி 11) மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தின் நடியா மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “நாடு ஒரு உணவு பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளது. விவசாய சட்டங்கள் விவகாரத்தில், பாஜக இப்படியே பிடிவாதம் பிடித்தால், கண்டிப்பாக நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும். விவசாயிகள் நம் நாட்டின் சொத்து. இப்போது அவர்களுக்கு நாம் எதுவும் செய்யவில்லை என்றால், எல்லாம் அவர்களுக்கு எதிராகவே சென்று முடியும்.” என்று கூறியுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

’விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்றால், மோடி பதவி விலக வேண்டும்’ – காங்கிரஸ்

மேலும், “பாஜக தான் நாட்டின் மிகப்பெரிய குப்பை கட்சி. ஊழல்கள் மிகுந்த அழுகிய தலைவர்களை கொண்டுள்ள குப்பைத் தொட்டி கட்சி.  திரிணாமூல் காங்கிரஸில் இருந்து சில தலைவர்கள் பாஜகவிற்கு தாவியதை பார்த்திருப்பீர்கள். மக்களின் பணத்தை கையாடல் செய்து, அந்த குற்றத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பாஜகவிற்கு தாவியவர்கள் அவர்கள். பாஜக ஒரு சலவை இயந்திரத்தை போல தன் கட்சியை நடத்துகிறது. ஊழல்கரைப் படிந்தவர்கள் பாஜகாவில் சேர்ந்தமாத்திரத்தில் ஞானிகள் ஆக்கப்படுகிறார்கள்.” என்று மம்தா பானர்ஜி கிண்டல் செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

‘பஞ்சாபின் நிலமற்ற தலித்துகள், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்’ – காரணம் என்ன?

”பாஜக தேர்தலில் தோல்வியடையும் நாள் வரும்போது, ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் எப்படி நடந்துகொண்டார்களோ, அதே போல் தான் பாஜக கட்சிக்காரர்களும், அதன் அபிமானிகளும் நடந்துக்கொள்வார்கள்.” என்று மம்தா விமர்சித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், விவசாயிகள் போராட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி, “முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு அவரது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துங்கள். ‘ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க’ என்ற தூண்டுதலான முழக்கத்தை அவர் நமக்குக் கொடுத்தார். விவசாயி சகோதர, சகோதரிகளை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம். விவசாயிகள் நம் தேசத்தின் கதாநாயகர்கள். விவசாயிகளுக்கு எதிரான விவசாய சட்டங்களை, இப்போதாவது மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்