போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுப்பது ஒன்றிய அரசின் கடமை என்று கூறியுள்ள மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, அரசியலை விட மனிதாபிமானமே முக்கியம் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அமைதிப் பேச்சுவார்த்தையை ஒன்றிய அரசு தலைமை ஏற்று முன்னகர்த்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
“உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்டெடுப்பது ஒன்றிய அரசின் பொறுப்பு. அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். நான் அமைதிக்கே ஆதரவாக இருக்கிறேன், போருக்கு அல்ல. கொரோனா தொற்றுநோய் ஏற்கனவே பலவற்றை அழித்துவிட்டது. உலக அமைதியை நிலைநாட்ட இந்தியாவால் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நடத்த முடியும்” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
“அரசியலை விட மனிதாபிமானம் முக்கியம். இதை ஒன்றிய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். அரசியலை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான அவரது கோரிக்கைக்கு ஏதேனும் பதில் கிடைத்ததா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் எனது கடமையைச் செய்துவிட்டேன். அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை இப்போது அவர்கள் தேர்தலில் பிஸியாக இருக்கலாம்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.