Aran Sei

அசாம் மக்கள் மீதான துப்பாக்கி சூடு: தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் ஏன் அசாமிற்கு செல்லவில்லை என மம்தா பானர்ஜி கேள்வி

credits : the indian express

சாமில் பொதுமக்கள் மீதான காவல்துறையின் தாக்குதல் விவகாரத்தில், அம்மாநில பாஜக அரசிற்கு மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 23 ஆம் தேதி, அசாம் மாநிலம் தர்ராங் மாவட்டம் சிபஜ்கார் பகுதியில் வாழ்பவர்களை அம்மாநில அரசு வெளியேற்றுவதற்கு எதிராகப் போராடிய மக்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மாநில அரசின் விவசாயத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

நிலத்தில் இருந்து வெளியேற மறுத்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு – காவல்துறையோடு இணைந்து மக்களை தாக்கிய புகைப்பட கலைஞர் கைது

மேலும், நூற்றுக்கணக்கானக் காவல்துறையினர் மரங்களுக்குப் பின்  ஒளிந்து கொண்டு, பல்வேறு திசைகளில் துப்பாக்கி சூடு நடத்தியது குறித்த காணொளியும் சமுகவலைதளங்களில் பரவியது.

காவல்துறையின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். மேலும், காவல்துறையினர் உட்பட 20 பேர் காயமடைந்தனர்.

மேலும்,  இந்தச் சம்பவத்தைப் படம் பிடிக்க மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பிடிஐ செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர்  பிஜய் சங்கர் பனியாவும்  காவல்துறையோடு இணைந்து சுடப்பட்ட ஒருவரை தாக்கினார்.

நேற்று (செப்டம்பர் 25), செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள மம்தா பானர்ஜி, “வெளியேற்றம் என்ற பெயரில் அஸ்ஸாமில் மனிதாபிமானமற்ற கொடுமைகள் நடந்துள்ளன. அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடும் கொலைவெறி தாக்குதலும் நடந்துள்ளது. ஆனால், தேசிய மனிதஉரிமை ஆணையம் அம்மாநிலத்திற்கு சென்று ஆராயவில்லை. தேசிய மனிதஉரிமை ஆணையம் அடிக்கடி மேற்கு வங்கத்திற்கு மட்டுமே வருகை தருகின்றன. இது வெட்கக்கேடானது.” என்று விமர்சித்துள்ளார்.

அசாம் மக்கள் மீதான காவல்துறையின் துப்பாக்கி சூடு: நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க கபில் சிபல் கோரிக்கை

பாஜக ஆளும் அசாம், திரிபுரா மற்றும் உத்தரபிரதேசத்தில் ரவுடிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது என்றும் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் கட்சியின் நிர்வாகிகள் பாஜகவினரால் தடுக்கப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசிய குடிமக்களின் பதிவேடு குறித்து மம்தா பானர்ஜி பேசுகையில் “அசாமில் தேசிய குடிமக்களின் பதிவேட்டை உருவாக்குவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்களின் பெயர்களை தேர்ந்தெடுத்து நீக்குகிறார்கள். இச்செயல் பாஜகவின் மக்கள் விரோத தன்மையைக் காட்டுகிறது. மாறாக வங்காளத்தில் தேசிய குடிமக்களின் பதிவேடு இருக்காது என்று நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம்.” என்று நினைவூட்டியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்