Aran Sei

மத்திய படையின் துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி : ‘உங்களின் ஒரு வாக்கு ஒரு தோட்டாவிற்கான பதிலடி’ – மம்தா

credits : the hindu

க்களின் ஆதரவை இழந்துவிட்டோம் என்று பாஜகவுக்குத் தெரிந்துவிட்டதால், மக்களைக் கொல்லும் சதியில் ஈடுபடுகிறார்கள் என்றும் இதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க சட்டபேரவைக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி, இம்மாதம் 29 ஆம் தேதிவரை, எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மூன்று கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், நேற்று (ஏப்ரல் 10) 44 சட்டபேரவை தொகுதிகளுக்கான நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 10) கூச் பெஹர் மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாக்குபதிவின்போது, வாக்குசாவடிக்கு வெளியே மத்திய ஆயுத காவல் படையான சிஐஎஸ்ஃப் காவலர்களின் துப்பாக்கியை அப்பகுதி மக்கள் பறிக்க முயன்றதால் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

மேற்குவங்க தேர்தல்: மத்திய பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் நால்வர் பலி

இச்சம்பவம் குறித்து, வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மத்தியப் படைகள் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேரின் உயிரிழப்புக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்க வேண்டும். மத்தியப் படையினர் செய்துவரும் செயல்களை எல்லாம் நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“இந்தக் கோட்பாடு (தற்காப்புக்காக மக்களைச் சூடுதல்) எங்கிருந்து வருகிறது? அவர்களில் (சிஐஎஸ்ஃப்) யார் காயமடைந்தனர்? ஏதேனும் புட்டேஜ்கள் உள்ளதா? அந்த மக்களைக் கொலை செய்தபிறகும், அவர்கள் இந்தச் செயலை எப்படி ஆதரிக்கின்றனர்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘நாம் என்ன சாப்பிட வேண்டுமென்று ஆணையிடும் சர்வாதிகார பாஜகவை வங்கத்தில் நுழையவிடாதீர்’ – மம்தா எச்சரிக்கை

மேலும், “அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வருமாறு மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். ஒரு வாக்கு ஒரு தோட்டாவிற்கான பதிலாக இருக்கும். மக்களின் ஆதரவை இழந்துவிட்டோம் என பாஜகவுக்குத் தெரிந்துவிட்டதால், மக்களைக் கொல்லும் சதியில் ஈடுபடுகிறார்கள். இதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்.” என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

“தேர்தல் தொடங்கியதிலிருந்து எத்தனை பேர் கொலைச் செய்யப்பட்டுள்ளனர் என்று பாருங்கள். ஏறக்குறைய 18 பேர் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இப்போது நிர்வாகத்திலும், அதிகாரத்திலும் இல்லை, தேர்தல் ஆணையம்தான் அதிகாரத்தில் இருக்கிறது.” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்