தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், எனக்கு எதிராக நோட்டீஸுகள் அனுப்புவதில் எந்தப் பலனும் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையம் எத்தனை நோட்டீஸுகளை அனுப்பியுள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று (ஏப்ரல் 9), மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ளார்.
அப்போது,“எனக்கு எதிராக நீங்கள் பத்து குற்றச்சாட்டுகளைப் புனைந்து நோட்டீஸ் அனுப்பினாலும், அதனால் எவ்வித பயனுமில்லை. அந்நோட்டீஸுகளுக்கான என்னுடைய பதிலும் இதுபோலதான் இருக்கும். வாக்குகள் பிளவுறா வண்ணம் அனைவரும் வாக்களியுங்கள் என்று சொல்கிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களிடையே வகுப்புவாதத்தை தூண்டி, அவர்களை பிரிப்பதாக பிரதமர் மோடி மீது குற்றஞ்சாட்டியுள்ள மம்தா பானர்ஜி, “நரேந்திர மோடிக்கு எதிராக எத்தனை நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்கள்? ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியின் முன்வந்து, இந்து-இஸ்லாமியர்களிடையேயான விவாதத்தையே தூண்டி வருகிறார். நந்திகிராமில் உள்ள இஸ்லாமியர்களைப் பாகிஸ்தானியர்கள் என்று அழைத்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுபான்மை வாக்காளர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குகளை பிரிக்க வேண்டாம் என்று மம்தா பானர்ஜி விடுத்த வேண்டுகோளானது, மேற்கு வங்கத்தில் அமலில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்று தேர்தல் ஆணையம் அவருக்கு அனுப்பிய நோட்டீஸில் குற்றஞ்சாட்டியுள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.