மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, ஒன்றிய அரசு மாநிலத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டது போன்ற பிரச்சனைகளைக் குறித்து விவாதிக்க உள்ளார்.
இதுதொடர்பாக, இன்று(நவம்பர் 16), பிடிஐயிடம் பேசிய அம்மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர், “மம்தா பானர்ஜி நவம்பர் 22 ஆம் தேதி டெல்லிச் சென்று நவம்பர் 25 ஆம் தேதி கொல்கத்தா திரும்புவார். டெல்லியில் அவர் மூன்று நாள் தங்கியிருக்கும்போது, பிரதமரை சந்திக்க உள்ளார். மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
மோடியுடனான அவரது சந்திப்பின் நோக்கம் குறித்து கேட்டதற்கு, “மேற்கு வங்க மாநிலத்தின் நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு செலுத்த வேண்டும் என்ற தனது நீண்டகால கோரிக்கைக்கு முதலமைச்சர் அழுத்தம் கொடுப்பார். மேலும் எல்லைப் பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை சர்வதேச எல்லையில் இருந்து 15 கிமீ தொடங்கி 50 கிமீ வரை அதிகரிக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு அவர் தனது ஆட்சேபனையை எழுப்புவார்” என்று அவர் கூறியுள்ளார்.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை சாமானிய மக்களை சித்திரவதை செய்வதாக மட்டுமே உள்ளது என்று மம்தா பானர்ஜி முன்பு கூறியதுடன், இந்த விவகாரம் குறித்து ஆட்சேபனைகளை எழுப்பி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.