ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி, சுங்க வரி ஆகியவற்றை தள்ளுபடி செய்யக் கோரி, பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (மே 9) மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், “ஆக்ஸிஜன் செறிவூட்டும் சாதனங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், க்ரையோஜெனிக் சேமிப்பு தொட்டிகள், ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் கொரோனா தொற்று தொடர்பான மருந்துகளை நன்கொடையாக வழங்க, தொண்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமான நிறுவனங்களும், தனிநபர்களும் முன்வந்துள்ளனர். இந்த உதவிகள் மாநில அரசுக்கு பேருதவியாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.
“இருப்பினும், பல நன்கொடையாளர்களும் நிறுவனங்களும் இவற்றுக்கு சுங்க வரி / எஸ்ஜிஎஸ்டி / சிஜிஎஸ்டி / எல்ஜிஎஸ்டி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மாநில அரசை அணுகியுள்ளனர். இவை ஒன்றிய அரசின் கீழ் வருகிறது. அதனால், மேற்சொன்ன பொருட்களுக்கு ஜிஎஸ்டி / சுங்க வரி மற்றும் இதர வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என அக்கடிதத்தில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
வரி விலக்கு அளிப்பதன் காரணமாக, மேற்கூறிய உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் தடையின்றி கிடைக்கப்பெறும் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Source: Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.