மேற்கு வங்கத்தில் கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாகப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஹால்தியாவில் நடைபெற இருக்கும் எண்ணெய், எரிவாயு, பெட்ரோலியம் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களைத் திறந்து வைக்கப் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்காமல் புறக்கணிப்பார் என்று தி குவிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
புர்பா மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஹால்தியா நகருக்கு இன்று பிரதமர் மோடி செல்லவுள்ளார். ஹால்தியா நகரில் அமைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலை உள்ளிட்ட 4 கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இன்று மாலை 7 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்பாரென முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவருடன் மேடையில் திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திபேண்டு ஆதிகாரி, ஆளுநர் ஜகதீப் தங்கர் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிப்பதாகவும் இதற்கான காரணம்குறித்து ஏதும் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் தி குவிண்ட் கூறியுள்ளது.
முன்னர், கடந்த மாதம் 23-ம் தேதி கொல்கத்தாவில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்றபோது அவருக்கு அவமரியாதை நடந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி பேச எழுந்தபோது, அவரை நோக்கி ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பிச் சிலர் இடையூறு செய்தனர்.
விவசாய போரட்டத்தில் பேருந்தை தாக்கும் சீக்கியர்கள் – உண்மை சரிபார்ப்பு
கோபமடைந்த மம்தா பானர்ஜி, அது அரசின் சார்பில் நடக்கும் நிகழ்ச்சி, ஒரு கட்சியின் சார்பில் நடக்கும் நிகழ்ச்சியல்ல. என்னை அழைத்துவந்து அவமானப்படுத்துவது ஏற்கமுடியாதது எனத் தெரிவித்து பேச மறுத்து அமர்ந்துவிட்டார்.
இந்நிலையில், கடந்தகால சம்பவத்தால் மிகவும் அதிருப்தி அடைந்திருக்கும் மம்தா பானர்ஜி, இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க வாய்ப்புள்ளது எனதி குவிண்ட் வெளியிட்டுள்ள செய்தி கூறியுள்ளது.
பிரதமர் மோடியின் மேற்குவங்க வருகையும் அவரது கட்சியான பாஜகவும் வருகிற 2021 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.