Aran Sei

‘காங்கிரஸின் நோக்கம் பாஜகவை தோற்கடிப்பது; சிலர் பாஜகவுக்கு உதவுகிறார்கள்’ – மம்தா பானர்ஜியை விமர்சித்த மல்லிகார்ஜுன் கார்கே

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அழிந்துவிட்டது என்று கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கருத்தை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பாஜகவை தோற்கடிப்பதே காங்கிரஸின் நோக்கம் என்றும் ஆனால் சிலர் பாஜகவிற்கு உதவுகிறார்கள் என்றும் இலைமறைக் காயாக மம்தா பானர்ஜியை குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று(நவம்பர் 1), மகாராஷ்ட்ரா மாநில தலைநகர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை சந்தித்த பின் செய்தியாளர்களை மம்தா பானர்ஜி சந்தித்து பேசியுள்ளார். “இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லை. அக்கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது பாஜகவை எதிர்க்கும், மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக போராட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ள மம்தா பானர்ஜி, “வெளிநாட்டில் தங்கியபடி இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது. ஒருவர் அதிக நேரம் வெளிநாட்டிலேயே தங்க விரும்பினால், பின் அரசியலில் எப்படி அவரால் செயலாற்ற முடியும்? நீங்கள் களத்தில் இல்லை என்றால், பாஜக உங்களை தோற்கடிக்கும்” என்று எச்சரித்திருந்தார்.

மம்தா பானர்ஜியின் விமர்சனம் குறித்து, இன்று(டிசம்பர் 2), ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள மல்லிகார்ஜுன கார்கே,  “ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லை என மம்தா பானர்ஜி கூறுவது முற்றிலும் தவறு. அதேபோல், ராகுல் காந்தி மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவதும் தவறு. ராகுல்ஜியை எங்குமே காண முடியவில்லை என்ற மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு தவறு. காங்கிரஸ் ஒவ்வொரு பிரச்சினைக்கும் குரல் கொடுத்து வருகிறது. அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் போராடி வருகிறது. எங்கள் நோக்கம் பாஜகவை தோற்கடிப்பதே. ஆனால் சிலர் அந்த கட்சிக்கு மட்டும் உதவுகின்றனர். காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. சில மாநிலங்களில் எதிர்க்கட்சியாகவும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் போராடி வரும் பல்வேறு சமூக-அரசியல் பிரச்சினைகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரையும் இணைத்துக்கொள்ள நாங்கள் முயன்றோம். எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் பிளவுபட்டு சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது. பாஜகவிற்கு எதிராக நாம் ஒன்றாக போராட வேண்டும்” என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்