இந்தியாவில் 33 லட்சம் குழந்தைகள் இன்னும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒன்றிய அரசின் தரவை சுட்டிக்காட்டி, மோடி ஆட்சியின் திறமையின்மைக்கு நாட்டின் குழந்தைகளை விலையாக கொடுக்கிறோம் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இந்தியாவில் 33 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதாகவும், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அவற்றில் முதலிடத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜூன் கார்கே, “பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆர்டிஐ பதிலில் இந்தியாவில் 33 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகக் கூறுகிறது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் தொடங்கி இந்தாண்டு அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 91 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
“ஸ்மிருதி இரானி தனது அமைச்சகம் வழங்கிய தரவுகளை மறுக்கப்போகிறாரா? அல்லது அவரது மோசமான தோல்வியை ஏற்றுக்கொள்வாரா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான நிதி 2020-21 பட்ஜெட்டில் ரூ.3,700 கோடியிலிருந்து 2021-22 பட்ஜெட்டில் ரூ.2,700 கோடியாக குறைக்கப்பட்டது. இது 27 விழுக்காடு குறைவு. அரசாங்க நடவடிக்கைகளின் வழியாக தினமும் 80 கோடி மக்களுக்கு உணவு வழங்கப்படுவதாக பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனாலும், உலகளாவிய பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தை விட பின்தங்கி, 101 வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்த ஆட்சியின் திறமையின்மைக்கு இந்தியாவின் குழந்தைகளை விலையாக கொடுத்து வருகிறோம்” என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.