Aran Sei

வாழ்க மக்கள் தலைவன் சுலைமான் அலி அகமது!’ – ‘மாலிக்’ பேசும் அரசியல் என்ன?

கேரள வரலாற்றில் அரசு நிகழ்த்திய மிக மோசமான அடக்குமுறை நிகழ்வுகளுள் ஒன்று பீமாபள்ளி படுகொலை. 2009ஆம் ஆண்டு, மே 17 அன்று ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் படுகொலையை எதிர்கொண்டிருந்த அதே நாளின் போது, கேரளாவின் பீமாபள்ளியின் இஸ்லாமியர்கள் சி.பி.எம் அரசின் துப்பாக்கிக் குண்டுகளை எதிர்கொண்டனர். ஒரே பகுதியில் வாழ்ந்த இஸ்லாம் – கிறித்துவ மதத்தினரிடையே வெடித்த மோதலை அடக்குவதற்காகத் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக அரசு இந்த விவகாரத்தை முடித்துக் கொண்டது. இதில் 6 இஸ்லாமியர்கள் சுடப்பட்டு இறந்தனர், ஏறத்தாழ 30 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ராமகிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை சி.பி.எம் அரசும், காங்கிரஸ் அரசும் வெளியிடவில்லை.

சுதந்திர இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசு நிகழ்த்திய பல்வேறு அடக்குமுறைகள் ஆவணப்படுத்தப்படாத நிலையில், மிகப்பெரிய பட்ஜெட்டில் கமர்ஷியல் திரைப்படமாக பீமாபள்ளி படுகொலைகளை மையப்படுத்திய திரைப்படமாக வெளிவந்திருக்கிறது ‘மாலிக்’. கேங்க்ஸ்டர் திரைப்படங்களுக்கே உரிய பாணியில், அரசுக்கு எதிராக மக்களைக் காப்பாற்றும் தனி நபர் குறித்த திரைப்படமாக இருந்தாலும், பின்னணியில் பீமாபள்ளி – சேரத்துரா பகுதி மக்களின் கதை சொல்லப்பட்டுள்ளது. பீமாபள்ளி ரமடாபள்ளியாகவும், சேரத்துரா எடவத்துராவாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இந்தத் திரைப்படம் புனைவுக்கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

சுலைமான் அலி அகமதுவாக ஃபகத் ஃபாசில்; ரமடாபள்ளியின் காட்ஃபாதர். ஹஜ்ஜுக்குப் புறப்படுவதற்காகத் தனது மீனவ கிராமத்தை விட்டு வெளியேறும் சுலைமானைக் கைதுசெய்து தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கிறது காவல்துறை. ஒட்டுமொத்த அரசு எந்திரமும் சுலைமானைச் சிறையில் வைத்துக் கொலை செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. காவல்துறையின் உயரதிகாரிகள் முதல் சிறைத்துறையின் அதிகாரிகள் வரை, அதற்கான தகுதியான நபரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்குகிறார்கள். சுலைமானின் மைத்துனனின் 17 வயது மகனான பிரெட்டி தேர்ந்தெடுக்கப்படுகிறான். அவனுக்கு சுலைமானின் கதை சொல்லப்படுகிறது.

ஜகமே தந்திரம்; திரைப்பிரதியும் அதன் பின்னணி அரசியலும் – முகமது இல்யாஸ்

கேங்க்ஸ்டர் கதைகளைப் பொறுத்தவரை, கேங்க்ஸ்டர்கள் உருவாவதும், வளர்வதும் ஒரே பாணியிலானவை. தங்கள் நிலத்தில் நிகழும் ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதும், அரசு சட்டவிரோதம் எனக் கருதும் தொழில்களைச் செய்வதும் கேங்க்ஸ்டர்கள் வளர்வதற்கும், மக்கள் ஆதரவைப் பெறுவதற்கும் பெரிதும் உதவுகின்றன. இதன் மூலம், சர்வ வல்லமை பொருந்திய இறையாண்மை கொண்ட அரசுகளை நம்பாத மக்கள், கேங்க்ஸ்டர்களின் பாதுகாப்பில் வாழ்வதை ஏற்றுக்கொள்கின்றனர். மக்கள் ஆதரவு கொண்ட கேங்க்ஸ்டர்களின் முடிவு என்பது அரசுக் கட்டமைப்பிற்கு ஆதரவாகக் கட்சிகளில் இணைந்து, தேர்தல் அரசியலில் ஈடுபடுவதாக இருக்கும். அரசுக் கட்டமைப்பிடம் வளையாத கேங்க்ஸ்டர்கள் ஏதேனும் ஒரு வகையில் அரசு தலையீட்டால் கொல்லப்படுவதாக முடியும். காலனியத்திற்குப் பின் உருவான தேசியங்கள் முதலாளிகளின் நலனுக்காகச் செயல்படத் தொடங்க, அரசுக்கு எதிராக மக்களைக் காக்கும் நிழல் அரசுகள் நடத்தும் கேங்க்ஸ்டர்களின் கதைகள் அனைத்தும் இதே பாணியில் அடங்கும்.

கேங்க்ஸ்டர் திரைப்படங்களின் மாஸ்டர்பீஸ் என்று கருதப்படும் ‘தி காட்பாதர்’ படத்தின் முதல் பாகத்திலும், இரண்டாம் பாகத்திலும் இதே மாதிரியான கதையைப் பார்க்க முடியும். மார்டின் ஸ்கார்சிஸ் இயக்கிய பெரும்பாலான கேங்க்ஸ்டர் படங்கள் (Casino, Goodfellas, Gangs of New York, The Irishmen), பிரேசில் நாட்டின் ரியோ நகரத்தின் கதையான City of God, கொலம்பியாவின் போதைப் பொருள் மன்னன் பாப்லோ எஸ்கோபாரின் கதையான Narcos தொடர், இஸ்ரேலின் நடுவில் இருக்கும் பாலஸ்தீன கிராமத்தின் கேங்க்ஸ்டர்கள் பற்றிய Junction 48, வாசேபூர் என்ற ஊரில் நிகழும் கேங்க்ஸ்டர் குழுக்கள் இடையிலான மோதல் பற்றிய Gangs of Wasseypur, கொச்சினில் நிகழும் ’கம்மட்டிப்பாடம்’, தமிழில் வெளிவந்த ‘வடசென்னை’ முதலான படங்களின் பின்னணியிலும் மேலே சொன்ன கதையம்சத்தைப் பொருத்திப் பார்க்க முடியும்.

ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

’மாலிக்’ படத்தின் ரமடாபள்ளி ஒரு பள்ளிவாசலையும், தர்காவையும் சுற்றி மக்கள் வாழும் மீனவ கிராமம். அருகில் இருக்கும் எடவத்துரா கிறித்துவ மீனவர்கள் வாழும் பகுதியாக இருக்கிறது. இரு சமூகத்தினரும் நண்பர்களாக இருக்கின்றனர். பொதுவாக இயங்கும் கிறித்துவப் பள்ளியில் இரு சமூகங்களையும் சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்கின்றனர். எழுபதுகளில் காட்டப்படும் ரமடாபள்ளியில் மசூதியும், அதனைச் சுற்றி பொட்டல் காடும் மட்டுமே இருக்க, இறுதிக்காட்சியில் 2010களில் இறுதியில் காட்டப்படும் ரமடாபள்ளியில் அதே மசூதி வளர்ச்சியடைந்து அப்பகுதியே வளர்ந்திருப்பதாகக் காட்டப்படுகிறது. இதே போன்ற காட்சி City of God, கம்மட்டிப்பாடம், வடசென்னை போன்ற படங்களிலும் காட்டப்பட்டிருக்கின்றன.

மீனவ கிராமமான ரமடாபள்ளியின் இளைஞர்கள் உயர்சாதியைச் சேர்ந்த சந்திரனுக்காக கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். ஊருக்குள் வாழும் மக்களின் குப்பைக் கிடங்காக ரமடாபள்ளி பயன்படுத்தப்பட அதை எதிர்க்கிறான் சுலைமான். சந்திரனோடு முரண்பட்டு, தனியாகவே கடத்தல் தொழிலில் ஈடுபட, ரமடாபள்ளி படிப்படியாக வளர்கிறது. உயர்சாதியினர் வாழும் ஊருக்கு இது உறுத்தலாகப்படுகிறது. சுலைமானின் வியாபாரம் மீது சந்திரன் தாக்குதல் நடத்த, எதிர்த் தாக்குதல் நடத்தி தனது நிலத்தைக் காக்கத் துணிகிறான் சுலைமான். அரசு ரமடாபள்ளியையும், சுலைமானையும் கண்காணிக்கத் தொடங்குகிறது.


சுலைமானுக்கும் அவனது சகாக்களுக்கும் இடையில் மோதலை வளர்த்துவிடுகிறது அரசு. அரசின் பிரதிநிதிகளாக ஐ.ஏ.எஸ் அதிகாரி அன்வராக வரும் ஜோஜு ஜார்ஜ், சுலைமானின் நண்பனாக இருந்து, சுலைமானின் மக்களின் வாக்குகளைப் பெற்று எம்.எல்.ஏவாக மாறும் அபூபக்கர் கதாபாத்திரமாக வரும் திலீஷ் போத்தன் ஆகிய இருவருமே இஸ்லாமியர்கள் என்ற போதும், அரசுக்கும் அதன் நலன்களுக்கும் ஆதரவாகச் செயல்படுபவர்களாக இருக்கின்றனர். எம்.எல்.ஏ அபூபக்கர் ரமடாபள்ளியின் இஸ்லாமியர்களுக்கும், எடவத்துராவின் கிறித்துவர்களுக்கும் மோதலைத் தூண்டி அதன் மூலம் கடற்கரையில் துறைமுகம் கட்டும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறார். அதற்குத் தடையாக சுலைமான் இருக்கிறார். சுலைமானின் அரசியல் என்பது அரசு எதிர்ப்பாகவும், மக்களுக்கு ஆதரவானதாகவும் இருக்கிறது.

பெரியார் : இந்துத்துவத்திற்கு எதிரான பாதுகாப்பு அரண் – ர.முகமது இல்யாஸ்

நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடையே வெறுப்பைப் பரப்பவும், அதன் மூலம் தனது நலன்களை நிறைவேற்றிக் கொள்ளவும் அரசு எந்திரம் நிகழ்த்தும் முயற்சிகள் அனைத்தையும் ‘மாலிக்’ முன்வைத்திருக்கிறது. சிறிய வழக்குகளில் இருந்து விடுதலை செய்வதாக ஆசைகாட்டி, கலவரங்களை அரசு உற்பத்தி செய்யும் விதத்தை, தற்போதைய நாஜி ஆட்சியில் படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

சுலைமான் கதாபாத்திரம் ‘தி காட்ஃபாதர்’ விட்டோ கார்லியோன் போலவும், ‘நாயகன்’ வேலு நாயக்கர் போலவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையின் வன்முறைக்குப் பிறகு, மகனின் இறுதிச் சடங்கின் போது எதிரிகளைப் பழிதீர்க்கும் அந்தக் காட்சியை ஏற்கனவே ‘தி காட்ஃபாதர்’ படத்திலும், ‘நாயகன்’ படத்திலும் பார்த்திருந்தாலும், அவற்றைப் போன்ற க்ளாசிக் அம்சம் இதில் பிடிபடாமல் போகிறது. முந்தைய கேங்க்ஸ்டர்களின் தாக்கத்தைக் குறைத்திருந்தாலும், சுலைமான் பலமான கதாபாத்திரமாகவே இருந்திருக்கும்.

கண்காணிப்பின் அரசியல் – அமேசானும் தொழிலாளர் பிரச்சினையும்

‘நாயகன்’ திரைப்படத்தோடு ‘மாலிக்’ ஒப்பிடப்பட்டாலும், என்னைப் பொருத்தவரை இது ‘வடசென்னை’ படத்தோடு ஒப்பிடுவது சிறந்தது. சுலைமானை ’வடசென்னை’ ராஜனாகப் பல்வேறு காட்சிகளில் பார்க்க முடிந்தது. கடலில் பயணித்து கப்பல்களில் இருந்து கடத்தல் பொருட்களை இறக்கி, தனது கிராமத்தை வளர்த்துவது, குழந்தைகளுக்காகப் பள்ளிக்கூடம் கட்டுவது, தனது சகாக்களுடனான மாறாத நட்பு, நிமிஷாவுடனான காதல் முதலான பல்வேறு காட்சிகளும் ராஜனை நினைவூட்டின. கடற்கரை கிராமங்களைக் காலி செய்து துறைமுகம் கட்டும் அரசு, எம்.எல்.ஏவை எதிர்க்கும் தலைவன், கொலை செய்யும் அசைன்மெண்ட்டுடன் சிறைக்குச் செல்லும் இளைஞன் என ‘வடசென்னை’ சாயல் இதில் இருந்தது.

பீமாபள்ளி படுகொலை, அரசு நிகழ்த்தும் மத மோதல்கள், இஸ்லாமியர் – கிறித்துவ உழைக்கும் மீனவ மக்களைக் காப்பாற்றும் இஸ்லாமிய கேங்க்ஸ்டர் என ‘மாலிக்’ தேர்ந்தெடுத்திருக்கும் களம் புதியது. இந்திய சினிமாவில் எண்பதுகளில் கடத்தல்காரர்களாக, தொண்ணூறுகளிலிருந்து தற்போது வரை ஆயுதம் வைத்திருப்பவர்களாக, வில்லன்களாக சித்தரிக்கப்படும் சமூகங்கள் – மீனவர்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள். இந்த மூன்று சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, அரசு எதிர்ப்பை மிக லாவகமாகச் செய்துகாட்டியிருக்கிறது ‘மாலிக்’.

பெருமையோடு திரியும் ஜாமியா துப்பாக்கிச் சூடு நடத்தியவன் – கவலையற்று இருக்கும் காவல்துறை

மணிரத்னம் பாணியில், முன்னணி கேங்க்ஸ்டருக்கு ‘நல்லவனா, கெட்டவனா?’ என்று பொதுச் சமூகம் முன்வைக்கும் குழப்பமான டைலெமா எதுவும் இதில் இல்லை. சுலைமான் அலி அகமது தன் மக்களுக்கு நண்பன்; சிறந்த தலைவன். மக்களைக் காப்பதாகவும், பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கூறும் அரசுக்கு மட்டும் மணிரத்னத்தின் கேங்க்ஸட்ர் படத்திலிருக்கும் இந்தக் கேள்வியைப் பொருத்திப் பார்க்கலாம்.

(கட்டுரையாளர் ர. முகமது இல்யாஸ் தனியார் கல்லூரியில் இதழியல்துறை ஆசிரியராக பணியாற்றுகிறார்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்