Aran Sei

பேய்ச்சி நாவலைத் தடை செய்த மலேசிய அரசு – அதன் ஆசிரியரோடு ஓர் உரையாடல்

லேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள லுனாஸ் எனும் சிற்றூரில் மனோகரன் – பேச்சாயி தம்பதிக்குப் பிறந்தவர் ம.நவீன். அங்கு இடைநிலைப்பள்ளி வரை படித்துவிட்டு நாளிதழில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசையோடு கோலாலம்பூர் வந்துள்ளார்.

பத்திரிகையில் வேலை செய்வது ஒருவகையில் முழு நேர எழுத்தாளனாக இருப்பது என நம்பியவர், பிறகு பத்திரிகைகளுக்குள் இருக்கும் அரசியல், அரசியல்வாதிகள் வீசும் பணத்துக்கு எழுதும் நிருபர்கள், பத்திரிகை ஆசிரியரின் தேவைக்கு ஏற்ப எழுதும் ஊழியர்கள் எனக் கொஞ்ச நாளிலேயே அவருக்கு அத்துறைமீது ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு விண்ணப்பித்துத் தற்போது அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். கடந்த ஆண்டு வெளியான இவரது பேய்ச்சி நாவல் பரவலாகக் கவனம் பெற்றது. கோலாலம்பூரில் வசித்து வருபவர் சமீபத்தில் இலக்கியப் பணிக்காகச் சென்னை வந்திருந்தார். அவருடன் உரையாடியதிலிருந்து…

மலேசியாவில் நல்ல படைப்புகளையும் படைப்பாளிகளையும் இதற்கு முன் இருந்தவர்கள் அடையாளம் காட்டத் தவறிவிட்டார்கள் என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தீர்கள். ஏன்? எதற்காக அவ்வாறு செய்தார்கள் என்று உங்களால் அவதானிக்கமுடிகிறதா?

அது ஒரு திட்டமிட்ட நிகழ்வல்ல. தமிழகத்தில் முதன்மையாகக் கொண்டாடப்பட்ட வெகுசனப் படைப்பாளிகள் மட்டுமே மலேசியாவிலும் கவனப்படுத்தப்பட்டார்கள். மாறாக, தமிழகத்தில் நடந்த சிற்றிதழ் போக்கு குறித்து அங்கு எவ்வித அறிமுகமும் இல்லை. அப்படி அறிமுகம் செய்துகொண்ட படைப்பாளிகளும் ஓர் இயக்கமாக நல்ல இலக்கியங்கள்குறித்த உரையாடல்களை உருவாக்கவில்லை.

இதனால் நாடு முழுவதும் இலக்கியக் கூட்டங்களை நடத்த பலம் பெற்றிருந்த அமைப்புகளும் நவீன இலக்கியத்தைக் கல்விக்கூடங்களில் போதிக்கும் ஆளுமைகளும் பத்திரிகை நடத்த வசதி கொண்ட நிறுவனங்களும் மறுமறுபடி வெகுசன இலக்கியங்களை மட்டுமே பிரதானப்படுத்தின. அதை எழுதுபவர்கள் மட்டுமே படைப்பாளிகளாகக் கொண்டாடப்பட்டார்கள். அவர்கள் படைப்புகள் பாடங்களாகின. அந்த அளவுகோலில் உருவான மலேசியப் படைப்புகள் மட்டுமே முக்கியமெனக் கவனப்படுத்தவும் பட்டன.

மலேசியாவின் வல்லினம் – தமிழகத்தின் யாவரும்.காம் உடன் இணைந்து செயல்படுவதன் தேவை எந்தச் சூழலில் உருவானது? எப்படி சாத்தியமானது?

நான் இதற்கு முன்பே இன்னபிற தமிழகப் பதிப்பகங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளேன். மலேசியாவின் தரமான படைப்புகள் தமிழகத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இம்முயற்சி. இங்குப் பதிப்பிக்கப்படுவதன் மூலம் உலகின் இன்னபிற நாடுகளுக்கும் மலேசியப் படைப்புகள் சென்று சேர வழி அமைகிறது. யாவரும் பதிப்பகம் நான் எதிர்பார்க்கும் வேகத்துடன் செயல்படுகின்றது. இதற்கு முன் சில தமிழகப் பதிப்பகங்கள் நூல் அச்சுக்குப் பணம் வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றியுள்ளனர். தமிழக பதிப்பகங்களுடன் நிறைய கசப்பான அனுபவங்கள் உள்ளன. யாவரும் ஜீவகரிகாலன் நேர்மையாகச் செயல்படுகிறார். அவருடனான உறவு வணிகம் சார்ந்ததாக மட்டும் இல்லை என்பது உற்சாகமாகச் செயல்பட உதவுகிறது.

ஓர் உரையாடலின்போது ஏதோ ஒரு சோர்வில் கவிதைகள் வாசிப்பதை மனம் விட்டிருந்தது” என்று கூறினீர்கள். கவிஞரான உங்களுக்குக் கவிதை வாசிப்பின் மீதும் எழுவதன்மீதும் ஈடுபாடு இல்லாமல் போனதன் காரணம் என்ன?

உண்மையில் எனக்கு இதற்கான காரணம் தெரியவில்லை. ஒருமுறை நான் எழுதியவையெல்லாம் கவிதைகள்தானா எனத் தோன்றியது. அவற்றை நூலாகப் போட்டதையே சங்கடமாக உணர்ந்தேன். பின்னர் கொஞ்ச நாளில் சமகாலத்தில் வந்த சில கவிதை தொகுப்புகளை வாசித்தாலும் இதுவே தோன்றியது. மொழியைக் கலை வெளிப்பாடாகக்கொண்டிருக்கும் ஒருவன் கவிதைகளை வாசிக்காமல் இருப்பது கூடாதுதான். எனவே, கவிதை வாசிப்பை எனக்கு விருப்பமான ஆத்மாநாம், சுகுமாரன், தேவதச்சன் எனச் சுருக்கிக்கொண்டேன். அவ்வப்போது சில சங்கப்பாடல்களை வாசித்துப் பார்ப்பேன். புதிய எந்தத் தொகுப்பையும் தொடமுடியாத மனத்தடை இருந்தது. ஜெயமோகனின் ஊட்டி முகாம் அதை நீக்கியது.

ஊட்டி முகாம் அனுபவங்கள் பற்றிக் கூறமுடியுமா?

அவ்வனுபவம் குறித்து ‘கலையும் கடமாவும்’ எனும் தலைப்பில் விரிவாகவே பதிவொன்று எழுதியுள்ளேன். மூன்று நாள் நடக்கும் அந்த முகாமில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பமான ஒரு சிறுகதை அல்லது கவிதைகள் குறித்துப் பேச அழைக்கப்படுகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் முன்னமே ஒரு தனித் தளத்தில் பதிவிடப்படும். முகாமில் கலந்துகொள்ளும் அனைவரும் அனைத்துப் படைப்புகளையும் வாசித்திருக்க வேண்டும் என்பது விதி. முகாமின் விதிகளை அனைவருமே கடைப்பிடிக்கின்றனர். விவாதங்களில் உற்சாகமாகப் பங்கெடுக்கின்றனர். ஒரு புனைவுக்குள் உள்ள பல்வேறு வாசிப்பின் சாத்தியங்களை விவாதிக்கின்றனர்.

ஜெயமோகன் பிரதானமாக முகாமை வழிநடத்துவார். அவரிடம் எந்தக் கருத்தையும் ஒட்டிய மேம்பட்ட பார்வை ஒன்று அவ்வப்போது வெளிப்படுவது ஆச்சரியமாக இருக்கும். நான் முதன் முறை கலந்துகொண்டு மலேசியச் சிறுகதையை யொட்டிப் பேசினேன். கவிதைகள்குறித்த உரையாடலைக் கவனமாக உள்வாங்கினேன். தமிழகத்தில் ஊட்டி முகாம் மிக முக்கிய அறிவுச் செயல்பாடு.

வாசிப்பு அனுபவம், அதன் மூலம் நீங்கள் கருதும் முக்கியமான படைப்புகளாகக் கருதுபவை?

பெரும்பாலும் நான் முக்கியமாகக் கருதும் படைப்புகள் குறித்து விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளேன். ‘விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு’ மற்றும் ‘உலகின் நாக்கு’ ஆகிய இரு நூல்களும் நான் வாசித்த உலகின் சிறந்த புனைவுகள் குறித்த கட்டுரைகளே. மிகத் தாமதமாகவே நான் தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்கத் தொடங்கினேன். ‘அசடன்’ எனக்கு நெருக்கமாக உள்ளது. நெருக்கம் என்பது நாவலில் அல்ல; மிஷ்கின் என்ற கதாபாத்திரத்தின் மேல். அவன் வழி இந்த உலகை இன்னும் கொஞ்சம் கருணையுடன் பார்க்கப் பழகியுள்ளதாக உணர்கிறேன். அடிப்படையும் வன்மமும் உக்கிரமும் கொண்ட என் மனதை தஸ்தாயெவ்ஸ்கி சமன் செய்கிறார். அதற்காகவேனும் அவரைத் தொடர்ந்து வாசிக்கிறேன்.

என்னென்ன நூல்கள் எழுதியுள்ளீர்கள். இதுவரை உங்கள் படைப்புகளுக்காகப் பெற்ற விருதுகள்?

மூன்று கவிதைத் தொகுப்புகள். மண்டை ஓடி, போயாக் என்ற இரு சிறுகதை தொகுதிகள், இரு பத்திகளின் தொகுப்பு, புனைவுகள்குறித்த இரு கட்டுரைத் தொகுப்புகள், மலேசிய சிங்கை ஆளுமைகளின் நேர்காணல் தொகுப்புகள், மாணவர்களின் உளவியலைப் பேசும் கட்டுரைத் தொகுப்பு ஆகிய நூல்கள் வந்துள்ளன. இதுதவிர மலேசிய – சிங்கை ஆளுமைகள் 16 பேரை இதுவரை ஆவணப்படமாக  இயக்கியுள்ளேன்.

மலேசிய – சிங்கையின் சமகால இலக்கிய, அரசியல், சமூக சூழலைப் பதிவிடும் வண்ணம் 470 பக்கங்களுக்கு ‘வல்லினம் 100’ என்ற பெருந்தொகுப்பைக் கொண்டுவந்துள்ளேன். படைப்புகளுக்கு விருதுகள் என எதுவும் கிடைத்ததில்லை. சில வருடங்களுக்கு முன் மாநில அரசு இளம் கவிஞர் என்ற விருதைக் கொடுத்தது. கனடா இலக்கிய தோட்ட அமைப்பு இவ்வாண்டு ‘சிறப்பு விருது’ வழங்கியது. போட்டிகள் என எதிலும் நான் பங்கெடுப்பதில்லை.

பத்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் வல்லினம் மலேசியச் சூழலில் உண்டாக்கிய முக்கியமான ஆக்கமும் தாக்கமும் என்னென்ன?

நான் 2007-ல் வல்லினம் தொடங்கியபோது அதுகுறித்துப் பரிதாபக் குரல்களே இருந்தன. இங்கு இலக்கியச் செயல்பாடு பொருளாதாரத்தோடு பொருத்திப் பார்க்கப்படுகிறது. அது ஒருவகையில் உண்மைதான். பொருளாதாரத்துக்கு அதிகார மையங்களை நாட வேண்டும் என்ற நிலைதான் மலேசியாவில் பலருக்கும் உண்டு. இந்த நிலையில் சிற்றிதழ் மனப்பான்மையுடன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தினோம். கடந்த பத்து ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருக்கிறோம். ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்கள், முகாம்கள் நடத்தியுள்ளோம். தமிழின் தலை சிறந்த படைப்பாளிகளை மலேசியாவுக்கு அழைத்து வந்து உரையாடல்கள் நிகழ்த்தியுள்ளோம். கண்காட்சிகள், பயணங்கள், போட்டிகள், வல்லினம் விருது என மலேசியாவில் நவீன இலக்கிய வளர்ச்சிக்கான தொடர் செயல்பாடுகளுடன் வல்லினம் இயங்கி வந்துள்ளது.

இதன் விளைவாகப் பல புதிய எழுத்தாளர்கள் உருவாகி வந்துள்ளனர். எழுத்தாளனாக இருக்க அமைப்புகளின் கரிசனமோ அரசியல்வாதிகளின் நல்லுறவோ அவசியம் இல்லை என்பதை இன்றைய தலைமுறையினர் வல்லினம் வழி உணர்ந்துள்ளனர். இதனால் மூத்த எழுத்தாளர்களைக் காட்டிலும் தனித்துவமாகச் செயல்படுகிறார்கள். வல்லினம் இணைய இதழைத் தொடர்ந்து வெளிக்கொணர்வதன் வழி மலேசியாவின் தரமான படைப்புகளைப் பிற நாட்டு வாசகர்களுக்கு எடுத்துச்செல்ல முடிகிறது. அதுபோலவே வல்லினம் பதிப்பகம் வழி தரமான ஆக்கங்களைப் பதிப்பித்து மலேசியாவைத் தாண்டிய வாசகர்களைச் சென்றடைந்துள்ளோம்.

மலேசியாவின் லுனாஸ் எனும் சிற்றூரில் எண்பதுகளில் பல தமிழர்களின் உயிரைக்குடித்த சாராய உயிரிழப்புதான் பேய்ச்சி நாவலின் களமாக உள்ளது. அக்கதைக்களத்துக்கும் உங்களுக்குமான இணைப்பைப் பற்றிச் சொல்லுங்கள். இந்த நாவல் எழுதத் தூண்டுகோலாக இருந்தது எது?

1981-ல் அச்சம்பவம் நடக்கும்போது நான் இன்னமும் பிறந்திருந்திருக்கவில்லை. ஆனால் நான் கோலாலம்பூருக்குக் குடிபெயர்ந்தபோதுதான் அச்சம்பவம் மலேசியா முழுவதும் எத்தகைய கவனத்தைப் பெற்றிருந்தது என்பதை அறிய முடிந்தது. என் ஊர் பெயரைச் சொன்னாலே என்னைக் குடித்துச் செத்தவர்களின் அடையாளத்துடன் விளித்தனர். நான் அதனை முழுமையாக அறிய என் ஊருக்குச் செல்ல வேண்டி இருந்தது. அப்போது வாழ்ந்தவர்களை, சாவிலிருந்து மீண்டவர்களை, சம்பவத்தைப் பார்த்தவர்களையெனப் பலரையும் நேர்காணல் செய்தேன். பல தகவல்கள் கிடைத்தன. ஆனால் இந்தத் தகவல்கள் மட்டும் நாவலாவதில்லை. இச்சம்பவத்தை மையமாகக் கொண்டு மேலும் சிலவற்றைப் பேச முனைந்துள்ளேன்.

அடுத்து என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

வாசித்துக்கொண்டிருக்கிறேன். ‘பேய்ச்சி’ நாவல் எழுதிய பின் மீண்டும் அதிகச் சொற்களால் என்னை நிறைக்க வேண்டியுள்ளது. பெரும் படைப்புகளை வாசிப்பதன் வழி நம்மை நாமே சிறியதாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. மலேசியச் சிறுகதை வரலாறுகுறித்து ஒரு நூல் எழுதும் திட்டம் உண்டு. அது ஆய்வாளர்களால் இன்னும் சொல்லப்படாத வரலாறு. அதற்காகவும் கொஞ்சம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழக ரப்பர் தொழிலாளர்கள் குறித்த நாவல் – தடை விதித்த மலேசிய அரசு

பொது ஒழுக்கம் மற்றும் பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கொண்டிருக்கின்றன என்று  பேய்ச்சி நாவலை மலேசிய அரசு தடை செய்துள்ளது  குறிப்பிடதக்கது.

நேர்காணல் : பச்சோந்தி

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்