Aran Sei

நாவலுக்குத் தடை – சிந்தனையாளர்களை சுயத்தணிக்கையில் வீழ்த்தும் அரசு – தமுஎகச கண்டனம்

தற்கால மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ம.நவீன் எழுதிய “பேய்ச்சி” என்கிற நாவலை மலேசிய அரசின் உள்துறை அமைச்சகம் தடைசெய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதன் மாநிலத் தலைவர், மற்றும் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தனது வாழ்வனுபவங்களை வரலாற்றோடும் சமகாலத்தோடும் இணைத்தும் விலக்கியும் ஒருவர் எழுதும் புனைவை – அதன் முழுமையால் மதிப்பீடு செய்யவேண்டும். மொழியும் சித்தரிப்பும் தான் புனைவுக்கு வலுவையும் நம்பகத்தையும் வழங்குகின்றன. எனில், தனது கதைக்குத் தேவையெனக் கருதி நாவலாசிரியர் பயன்படுத்தியுள்ள சில சொற்களையும், சித்தரிப்புகளையும் அவற்றின் சூழமைவுக்குள் பொருத்திவைத்துப் பார்க்காமல் தனியே துண்டித்துப் பார்த்து அந்நாவல் ஆபாசமானது, ஒழுக்கக்கேட்டை ஆதரிக்கிறது என்று ஒருதலைப்பட்சமாக தீர்ப்பிட்டு தடை செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல” என்று தெரிவித்துள்ளனர்.

பேய்ச்சி நாவலைத் தடை செய்த மலேசிய அரசு – அதன் ஆசிரியரோடு ஓர் உரையாடல்

மேலும், “குறிப்பிட்ட சொற்களோ சித்தரிப்போ நாவலின் நோக்கத்திற்கு இழையாமல் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக வலிந்து திணிக்கப்பட்டதாகவே இருக்கும்பட்சத்திலும்கூட அதை விமர்சித்துக் கடப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.  நிலைநிறுத்தப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் உலகியல் கண்ணோட்டங்களையும் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குவது இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்றாக இருப்பதை மலேசிய அரசு கவனத்தில் கொண்டிருந்தால் இத்தடையுத்தரவை பிறப்பித்திருக்காது என தமுஎகச கருதுகிறது. என்றும் அறிக்கையில் கூறியுள்ளனர்.

தமிழக ரப்பர் தொழிலாளர்கள் குறித்த நாவல் – தடை விதித்த மலேசிய அரசு

மேலும் “இத்தடையின் தன்மைக்கான விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் அபராதமானது, கலை இலக்கிய ஆக்கவாதிகளின் சுதந்திரமான சிந்தனையையும் கற்பனாசக்தியையும் கட்டுப்படுத்தி சுயதணிக்கைக்குள் வீழ்த்துவதோடு மட்டுமன்றி வாசகர்களின் கருத்தறியும் உரிமையையும் பறிக்கிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதும் வரையறைக்கு உட்பட்டதுதான் என்கிற வாதம் அந்த வரையறையை எவ்வாறு யார் உருவாக்குவது என்பதோடு தொடர்புடையது. ஜனநாயக வழிமுறைகளின் ஊடான வரையறை என்பது நிச்சயமாக இத்தகு தடையாக இருக்கமுடியாது என்பதால் பேய்ச்சி நாவலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக்கொள்ள வேண்டுமென மலேசிய அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது. Gay is Ok! A Christian Perspective என்ற நூலின் மீதான தடைக்கும் இது பொருந்தும்.” என்று தமுஎகச வின் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர்  ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்