Aran Sei

சென்னை: ‘குடிநீர் வாரியத்தில் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யுங்கள்’ – கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியத்தில் தற்காலிக பணியாளராக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பணியாளர்கள் எழுதியுள்ள கடிதத்தில், நாங்கள் பல வருடங்களாக சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றும் வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றிக்கொண்டு வருகிறோம். நாங்கள் பணி நிரந்தரம் கோரி பல கட்டங்களாக போராடி வந்துள்ளோம், ஆனால் எங்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படவில்லை. பணிநிரந்தரம் சம்பந்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கடந்த 14/03/2022 திங்கள் மனு அளித்துள்ளோம். இது சம்பந்தமாக முதலமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

பாரதிய கிசான் சங்கத்தில் பிளவு ஏற்பட பாஜகதான் காரணம் – ராகேஷ் திகாயத் குற்றச்சாட்டு

இந்நிலையில், தாங்களும் எங்களை பணிநிரந்தரம் செய்திட பரிந்துரைக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இத்துறையில்,  சில்ட் ஆட்டோ ஓட்டுனர்கள், களப்பணியாளர்கள், ஜெட்ராடிங் டிரைவர்கள் / ஆப்ரேட்டர்ஸ், சூப்பர் சக்கர் ஒட்டுனர்கள்/ஆப்ரேட்டர்ஸ், ஏரியா என்ஜினீயர் டிரைவர்கள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

எங்களைப் போன்ற தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்பதை நீங்களே கண்கூடாக பார்த்திருப்பீர்கள். போதுமான இயந்திர வசதிகள் இல்லாததையும் சகித்துக்கொண்டு தான் கழிவுநீர் அடைப்புகளை அகற்றி வருகிறோம். நூற்றாண்டுகள் கடந்தும் நவீனமயமாக்கப்படத்தாத பழுதடைந்த கழிவுநீர் கட்டமைப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும்போதெல்லாம், உடனுக்குடன் தலையிட்டு சீர்செய்கிறோம். விஷவாயுக்களாலும் மனிதக்கழிவு கலந்த படிமண்ணின் தாக்கத்தாலும் எங்கள் உடலில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. பணிபுரியும் இடத்தில் விபத்துகளையும் அவமரியாதைகளையும் சந்திக்காத நாட்களே இல்லை.

இப்படி முழு நேர ஊழியர்களாய் தொடர்ந்து பல ஆண்டுகள்  பணியில் நீடித்தாலும், நாங்கள் இன்றும் “தற்காலிக” ஊழியர்களாகவே நடத்தப்படுகிறோம். எங்களுக்கு ஊதியத்துடனான விடுப்பு, ESI, PF, ஓய்வூதியம், பணிக்கொடை ஆகிய தொழிலாளர் நலச் சட்டங்களின் பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை. வேலை நாட்களுக்கேற்ப ஊதியம் முறையாக கணக்கிடப்பட்டு வழங்கப்படுவதில்லை, குறிப்பிட்ட தேதிக்குள்ளும் வழங்கப்படுவதில்லை. எங்களுக்கென்று ஒரு அடையாள அட்டையோ அதிகாரபூர்வமான சான்றிதழோ கூட அளிக்கப்பதுவதில்லை. எங்களது சீருடைகளையும் நாங்களே செலவு செய்து வாங்க வேண்டிய அவலம் நிலவுகிறது. வேலையின் தன்மை காரணமாக நோய்வாய் பட்டு எங்களில் பலர் உயிரையும் உடல் திறனையும் இழந்துள்ளனர். சிலர் மன உளைச்சலால் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாங்கள் பணிபுரியும் போது இறந்தால், எங்கள் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்பும் இல்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இத்தகைய வேலையில், பணி நிரந்தரம் ஒன்றே எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் குறைந்தபட்ச அரணாக இருக்கும் என்பதை உணர்ந்து, பல ஆண்டுகளாக CMWSSB நிர்வாகிகளிடம் மன்றாடி வருகிறோம். ஆனால், அவர்கள் எங்களை துச்சமாக எண்ணுகிறார்கள்.

புதிய அரசாங்கம் பதவி ஏற்ற பிறகு, எங்களுக்கும் “விடியல் ஆட்சியில்” நல்லதொரு மாற்றம் ஏற்படும் என்று காத்திருந்தோம். நமது முதல்வர், CMWSSB இன் மேலாண்மை இயக்குனர் மற்றும் எங்கள் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு என அனைவரையும் சந்தித்து மனு அளித்துள்ளோம். எங்கள் மனு பரிசீலக்கப்படும் என்று மூவரும் உத்தரவாதம் அளித்தனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக எங்களை மாதாந்திர ஒப்பந்தத்திற்குள் கொண்டுவந்து தினக் கூலிகளைப்போல நடத்துகிறார்கள். இப்பின்னணியில் தான், நிரந்தர பணி மட்டுமே எங்களுக்கு ஒற்றைத்தீர்வு என்று வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளோம்

சிதம்பரம்: நடராஜர் கோயிலில் பட்டில் சாதி பெண்ணுக்கு வன்கொடுமை இழைக்கப்பட்டதற்கு வழக்கு பதிந்தும் கைது செய்யாதது ஏன்? – சிபிஎம் கேள்வி

வெயிலிலும், மழையிலும், புயலிலும், வெள்ளத்திலும் மற்றும் கடுமையான கொரோனா காலத்தில் மூன்று அலைகளிலும் இரவு பகல் பாராமல் எங்கள் குடும்பங்களையும் மறந்து மிகவும் கடுமையாக உழைத்துக் கொண்டு வருகிறோம். தாங்கள் இந்த மனுவை பரிசிலித்து எங்களுக்கு வேண்டிய பணிநிரந்தர ஆணை கேட்டுக்கொள்ளுகிறோம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரை சுத்தி தெரிஞ்சுகிட்ட உண்மை I Tales of Kadodi I Kalai Selvan

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்