Aran Sei

‘சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக்க சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும்’ – ஒன்றிய அரசுக்கு ரவிக்குமார் எம்.பி. வேண்டுகோள்

சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டுமென சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சரிடம் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும் – என்.எல்.சி நிறுவனத்துக்கு ரவிக்குமார் வேண்டுகோள்

இதுகுறித்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா பெருந்தொற்று பொது சுகாதாரப் பிரச்சனையாக மட்டுமின்றி, இந்த நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரது பொருளாதார பிரச்சினையாகவும் மாறியிருக்கிறது. அரசாங்கத்தின் சுகாதாரக் கட்டமைப்புகள் எவ்வளவுதான் சிறந்தவையாக இருந்தாலும் அனைவருக்கும் சுகாதாரம் என்பது தொலைதூரக் கனவாகவே இருக்கிறது. அதனால்தான் நமது அரசு தேசிய சுகாதார கொள்கை -2017ஐக் கொண்டுவந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்தக் கொள்கையில் ’மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை சுகாதாரத் துறைக்கு ஒதுக்குவது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அதன் பின்னர் வந்த மத்திய அரசு நிதிநிலை அறிக்கைகளில் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டே வருகிறது என்றும் கூறியுள்ளார்.

18 வயதிற்குமேல் மே 1 முதல் தடுப்பூசி: இரண்டு வாரத்தில் பெருந்தொற்று ஏற்படாதெபதற்கு என்ன உத்தரவாதம் – ரவிக்குமார் கேள்வி

அதுமட்டுமல்லாது, கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் 15வது நிதிக் குழுவின் கீழ் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு, ’சுகாதார வசதிகளுக்கான உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்க வேண்டும்’ என்று பரிந்துரை செய்துள்ளது என்றும், கடந்த மே மாதம் 21 ஆம் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்றம் குருசரன்சிங் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் தீர்ப்பளிக்கும்போது, ’போர், பஞ்சம், வெள்ளம், பெருந்தொற்று மற்றும் பேரழிவு காலங்களின்போது அரசு வரிகளைக் குறைத்து குடிமக்கள்மீதான சுமையை மட்டுப்படுத்த வேண்டும். அது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 21 இல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள கண்ணியமான வாழ்க்கை என்பதை ஒரு மனிதன் வாழ்வதற்கு வழிவகுக்கும்’ என்று தெளிவுபடுத்தி உள்ளதாகவும் ரவிக்குமார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இருபது ஆண்டுகளுக்கு முன்னால் 2002ஆம் ஆண்டு ஏ பி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் கல்வி அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டது போன்று, எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 21 இல் திருத்தம் செய்து, சுகாதாரத்துக்கான உரிமையை அடிப்படை உரிமையாக ஆக்குவதற்கு மசோதா ஒன்றை தாங்கள் கொண்டு வர வேண்டும் என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேவியானந்தல் பகுதியில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு வி.சி.க நிதி உதவி -குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை துணைநிற்போமென உறுதி

இக்கடிதத்தின் நகலொன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனுக்கு அனுப்பியுள்ளதாகவும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்