கோவில்களில் தமிழ்வழியில் பூசை செய்ய சட்டம் இயற்ற வேண்டுமெனவும், ஈஷா மையத்தை அரசுடைமை ஆக்க வேண்டுமெனவும் கோரி தமிழ்நாடு தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெய்வத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெய்வத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில்களில் அன்றாடக் கருவறைப் பூசைகள், விழாக்கால சிறப்புப் பூசைகள், வேள்விச் சாலைகள், கோபுரக் குடமுழுக்குகள் அனைத்திலும் தமிழ் மந்திரம் சொல்லியே வழிபாடும் அர்ச்சனையும் நடைபெற வேண்டும். விரும்பிக் கேட்பவர்களுக்கு மட்டுமே கருவறைப் பூசையில் சமற்கிருதம் பயன்டுத்தப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், திருக்கோயில்களில் பூசை / அர்ச்சனை செய்வதற்குரிய மொழி மற்றும் சாதி என்று எதையும் எந்த ஆகமமும் நிபந்தனையாக்கவில்லை; பரிந்துரைக்கவில்லை என உச்ச நீதிமன்றம் 2015 தீர்ப்பில் கூறியுள்ளதாகவும், இத்தீர்ப்பைச் செயல்படுத்திடத் தமிழ்நாடு அரசு முதல் கட்டமாக மாவட்டத்திற்கொரு பூசகர் / அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியைத் திறக்க வேண்டும். அனைத்துச் சாதியிலிருந்தும் தகுதியுள்ள மாணவர்களைச் சேர்த்து, தமிழ்வழிப் பூசகர் / அர்ச்சகர் பயிற்சி கொடுத்து, சான்றிதழ் அளித்து, அவர்களை இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் பூசகராக / அர்ச்சகராகப் பணியமர்த்த வேண்டும். தகுதியுள்ள பெண்களையும் சேர்த்துப் பயிற்சி கொடுத்துப் பூசகராக / அர்ச்சகராக அமர்த்த வேண்டும் எனவும் . ஏற்கெனவே தமிழ்நாடு அரசு பயிற்சி கொடுத்துப் பட்டயம் பெற்றுள்ளவர்களை உடனடியாகப் பணியமர்த்தம் செய்ய வேண்டும் என்றும் தெய்வத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது, “இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம், திருக்கோயில்கள் செயல்பாடுகள் முதலியவற்றில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கத் தமிழ் இந்து சமயத்தில் மெய்யான ஈடுபாடுள்ள ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்துப் பரிந்துரைகள் பெற வேண்டும். அப்பரிந்துரைகளில் செயல்படுத்த வேண்டியவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
மேகேதாட்டுவில் அணை என்பது தமிழகத்தை சுடுகாடாக்கும் செயல் – சூர்யா சேவியர்
மேலும், “சக்கி வாசுதேவ் ஒரு போலிச் சாமியார்; யோகா மையம் என்ற பெயரில் அவர் நடத்துவது, போலி ஆன்மிகப் பெருங்குழும வேட்டை நிறுவனம். பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல்வழியில் திரட்டியுள்ளதாகவும், எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக சக்கியின் ஈசா மையத்தை அரசுடைமையாக்கி, இந்து அறநிலையத்துறையில் சேர்த்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும்” தெய்வத் தமிழ்ப் பேரவை கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெய்வத் தமிழ்ப் பேரவையினர் அறிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.