Aran Sei

ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா போலி பரிசோதனை – குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது

ரித்வார் கும்பமேளாவின் போது போலி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த புகாரில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் முக்கியமானவர்களான மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் உரிமையாளர் ஷரத் பந்த் மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகியோர் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநில ஹரித்வார் கும்பமேளாவின் போது மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனைகளில் மோசடி நடைபெற்றதாக பதியப்பட்ட வழக்கை விசாரிக்க, ஜூன் 18 அன்று  ஹரித்வார் மாவட்ட காவல்துறை சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.

அதற்கு முன்னர், ஜூன் 17 ஆம் தேதி, ஹரித்வார் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியின் புகாரின் பேரில், அம்மாவட்டத்தில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீஸ் நிறுவனம் (எம்.சி.எஸ்), டெல்லியைச் சேர்ந்த லால் சந்தானி ஆய்வகம், ஹிசாரை சேர்ந்த நல்வா ஆய்வகம் ஆகிய இரண்டு ஆய்வகங்கள் மீது கொரோனா சோதனைகளில் மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் சதித்திட்டம் – லிபர்ஹான் கமிஷன் கூறியது என்ன?

இந்த ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு லட்சம் கொரோனா பரிசோதனைகளில், 90,000 பேருக்குத் தொற்று இல்லை என்று சான்று அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள், ஏறத்தாழ 36,000 சான்றுகள் போலியானவை என்று கூறப்படுகிறது.

ஹரித்வார்  கும்பமேளாவில் நடத்தப்பட்ட கொரோனா போலி பரிசோதனை மோசடிகள் தொடர்பாக, டெஹ்ராடூன், ஹரித்வார், டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள நோவஸ் பாத் லேப்ஸ், டிஎன்ஏ லேப்ஸ், மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ், டாக்டர்.லால்சந்தனி லேப், நால்வா லேப்ஸ் ஆகியவற்றின் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

முதலமைச்சராக இருந்த மோடி தேசப்பாதுகாப்பு பற்றி பேசினார்; பிரதமர் மோடி சீனா குறித்து பேச மறுப்பது ஏன்? – ஒவைசி கேள்வி

இதுதொடர்பாக, அறிக்கை வெளியிட்ட அமலாக்கத்துறை, “30.9 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள், மடிக்கணினிகள், மொபைல் போன்கள், போலியான பில் மற்றும் குற்றத்திற்கு ஆதாரமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. போலியான அலைபேசி எண்கள் மற்றும் போலியான முகவரிகளை ஆய்வகங்கள் பயன்படுத்தியுள்ளன.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, மேக்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸின் இரண்டு பங்குதாரர்களும் தம்பதிகளுமான சரத் மற்றும் மல்லிகா பந்த், நால்வா லேப்ஸின் பங்குதாரர் ஆகியோருக்கு எதிராக பிணையில் வெளிவரமுடியாத வகையிலான வாரண்டுகளை வாங்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) திட்டமிட்டிருந்தது.

இதுதொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழுவை சேர்ந்த அதிகாரி கூறுகையில், “தற்போது, ​​அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களின் அலைபேசிகளும் அணைக்கப்பட்டுள்ளன. நாங்கள் பிணையில் வெளிவரமுடியாத வகையிலான வாரண்டுகளை நீதிமன்றத்தில் கோர திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று(நவம்பர் 8), கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நொய்டாவில் உள்ள சரத் மற்றும் மல்லிகா பந்த் ஆகியோரின் இல்லத்திற்கு சென்ற சிறப்பு விசாரணைக் குழு, அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளது. அவர்கள் தங்கள் இல்லத்தில் சில பொருட்களை எடுக்க வந்தபோது கைது செய்யப்பட்டதாக ஹரித்வார் காவல்துறை தெரிவித்துள்ளது.

பொய் வழக்குகள், காவலில் வன்முறை: ஸ்டான் சுவாமிகளை உருவாக்குகிறதா கேரளா?

“குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான விதிமுறைகளை மீறியுள்ளனர். அரசிடமிருந்து பணத்தைப் பெறுவதற்காக, நடத்தப்படாத கொரோனா பரிசோதனைகளை நடத்தியதாக போலி பில்களை சமர்பித்துள்ளனர். 1,24,031 பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ததாக பொய்யான ஆவணங்களை தயாரித்து, ஒரு சோதனைக்கு 354 ரூபாய் வீதம் 4 கோடி ரூபாய்க்கு மேல் அரசிடம் இருந்து பெற்றுள்ளனர்” என்று காவல்துறை கூறியுள்ளது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்