Aran Sei

மீண்டும் நாடாளுமன்றத்தில் வெடித்தெழுந்த மஹுவா – அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

credits : indian express

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, குடியரசுத்தலைர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசியதன் சிறு பகுதி.

அவைத் தலைவருக்கு வணக்கம்.

குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் என்னுடைய கட்சி கொண்டு வந்துள்ள திருத்தங்கள் குறித்து பேசப்போகிறேன்.

இந்த அரசு குறித்து கேள்வி எழுப்பியதற்காகவும், அரசின் நடவடிக்கைகள் குறித்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்தற்காகவும், நம்முடைய பல சக குடிமக்கள் இன்று, நீதித்துறை மற்றும் காவல்துறையின் அடக்குமுறையை எதிர்கொண்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, நாடாளுமன்றம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், மக்கள் கொடுத்த இந்தத் தளத்தை பயன்படுத்தி, மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கவும், அவர்களுடைய எண்ணங்களுக்கு குரல்கொடுக்கவும் உள்ளேன்.

இதன் மூலம், அடக்குமுறையை செலுத்துவதாலும், சிறைப்படுத்துவதாலும், இந்தக் குரல்களை ஒடுக்க முடியாது என்பதை இந்த அரசு தெரிந்துகொள்ளட்டும்.

சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான் பேசும்போது கூச்சலிட மாட்டார்கள் என்றும், நீங்கள் (சபாநாயகர்) எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம்வரை என்னை பேச அனுமதிப்பீர்கள் என்றும், மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் மக்களவை தொலைக்காட்சி, இந்த ஒளிபரப்பை நிறுத்தாது என்றும் நம்புகிறேன்.

அமெரிக்க பத்திரிகையாளர் எல்மா டேவிஸ், அமெரிக்கா குறித்து தெரிவித்த கருத்தை, 72வது குடியர தினத்தை கொண்டாடும் இந்தத் தருணத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

“இந்த குடியரசு கோழைகளால் உருவாக்கப்பட்டதல்ல. கோழைகள் இதை பாதுகாக்க முடியாது”

இன்று நான், கோழைத்தனம் குறித்தும், வீரம் குறித்தும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடு குறித்தும் பேசவுள்ளேன்.

பொய்யான அதிகார மமதை, வெறுப்பு, மதவெறி, பொய்மை ஆகியவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் கோழைகள், அதை வீரம் என்று தைரியமாக கூறுகிறார்கள்.

இந்த அரசு, தனது பிரச்சாரத்தின் மூலமும், பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலமும், கோழைத்தனத்தை, வீரம் என்று காட்டுவதே இதன் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறது. பல்வேறு விவகாரங்களில் இந்த அரசு வெளிப்படுத்திய வீரத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

யார் இந்தியன்?, யார் இந்தியன் இல்லை? என்ற ஒருதலை பட்சமான கேள்வியை எழுப்பும், அம்சங்களை உள்ளடக்கிய சட்டத்தை கொண்டு வந்ததில் இந்த அரசு வீரத்தை காட்டியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ம் ஆண்டு இந்த அவையில் நிறைவேற்றப்பட்டது. அண்டை நாடுகளில், ஒடுக்குமுறைக்குள்ளாகும் இந்துக்கள் மற்றம் பிற சிறுபான்மை மதத்தினரை பாதுகாப்பதற்காகவே இந்த சட்டம் என்று கூறப்பட்டது. அதேநேரம், (இந்தச் சட்டம்) இந்திய மண்ணில், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் லட்சக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது.

2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த சட்டத்திற்கான விதிகள் வகுக்கப்படும் என்று உள்துறை அமைச்சகத்தால் கூறப்பட்டது. ஆனால் இதுவரை விதிகள் வகுக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து (விதிகள் வகுப்பதற்கான) காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

இந்த அரசு உண்மையில், அண்டைநாடுகளில் ஒடுக்கப்படும் மக்களுக்காக கவலைப்பட்டால், விதிகளை வகுப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துக் கொண்டே போவதன் காரணம் என்ன?

இதற்கிடையில், நம்மில் பலர் இந்த அரசிடம் “காகிதத்தை காட்டாதீர்கள்” (இந்தியில்) என்று கூறுவதற்கு நம்முடைய தைரியத்தை ஒன்றுகூட்டினோம்.

கடவுளின் வீடான, சாந்தினிகேதன் மீது மத்திய அரசின் ஆதிக்கத்தை செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உங்கள் நிறத்தை மாற்ற அது போதுமானதாக இல்லை.

ஜனகணமன பாடலில் ஓரு பகுதி மட்டும்தான் நம்முடைய தேசிய கீதமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. நான் இந்த அரசை மீதுமுள்ள அந்த பாடலை படிக்கும்படி கேட்கிறேன். ஒருவேளை அது, (ரவீந்திரநாத்) தாகூரையும், மேற்கு வங்காளத்தையும் கொஞ்சம் சரியாக புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.

என்னுடைய சக நாடாளுமன்ற உறுப்பினரும் மதிப்பிற்குரிய, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரும் இதை அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளார். இருந்தபோதும், இதை திரும்ப, திரும்ப கூறுவது நமது நாட்டிற்கு ஒரு நல்லதைத் தரும் என்று நான் நினைக்கிறேன்.

(ரவீந்திரநாத் தாகூரின் பாடலை, வங்காள மொழியில் பாடுகிறார்)
ஒற்றுமையை உயர்த்திப்பிடிப்போம். மத நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிப்போம்.

ஒரு ஒற்றை பொய் புகாரின் அடிப்படையில், மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் இந்தியாவின் மதிப்பு மிக்க மூத்த பத்திரிகையாளர் மீதும் தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, மிகப்பெரிய ஜனநாயகத்தை, மறைமுக அதிகாரத்துவ அரசாக மாற்றியதில் இந்த வீரம் காட்டப்பட்டுள்ளது.

ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும், ஒவ்வொரு மாநில அரசையும் குறுக்கு வழியின் மூலம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் வீரம் காட்டப்பட்டுள்ளது.

நீங்கள் கூட்டாசியையும், மாநில உரிமைகளையும் பற்றிப் பேசுகிறீர்கள்.

மாநில அரசுகளுடன் இணைந்த செயல்படுதற்கு பதிலாக, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அவர்களை மிரட்டி பணியவைக்கிறீர்கள்.

இந்த ஆளும் அரசு, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை ஆண்டது அல்லது ஒற்றை கட்சி ஆட்சிமுறையை திணித்தது என இவை இரண்டில் எதை தன்னுடைய மரபாக நினைவுகூர விரும்பிகிறது? நீங்களே உங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.

எண்ணிக்கை தெரியாத மரணங்களையும், உணவும், பணமும் இன்றி ஆயிரக்கணக்கான மக்களை நூற்றுக்கணக்கான மைல் தூரம் நடக்க வைத்த, வெறும் நான்கே மணி நேர முன்னறிவிப்பில் அமல் படுத்தப்பட்ட பொது முடக்கத்தை அறிவித்ததில் வீரம் காட்டப்பட்டுள்ளது.

இந்த அரசு 2 சதவீதத்திற்கும் குறைவாகவே சமூக நலத்திட்டங்களுக்கு செலவிட்டுள்ளது. பொருளாதார ஒத்துழைப்பிற்கான அமைப்பில் (OECD) உள்ள பிற நாடுகள் 20 சதவீதத்தை இதற்காக செலவு செய்கின்றன. மத்திய வருவாய் பிரிவில் உள்ள நாடுகள் (சமூக நலத்திட்டங்களுக்கு) 6 சதவீதத்தை செல்விடுகின்றன.

வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில், 2020-ம் ஆண்டில் இந்தியா மட்டுமே மிக மோசமாக நிலையில் இருந்துள்ளது. நீங்கள் இந்த அரசின் பொருளாதார ஆய்வறிக்கையை நம்புவதாக வைத்துக்கொண்டாலும், 2020-ம் ஆண்டு பொருளாதாரம் 7.7 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது, 2021-ம் ஆண்டு 11 சதவீதம் உயரவுள்ளது.

ஆகவே, 2022-ம் ஆண்டு, அதாவது அடுத்த இரண்டு ஆண்டுகளில், 2019-ம் ஆண்டில் இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவுடன், பொருளாதாரம் கிடை மட்டத்தை அடையும்.

வளர்ச்சியே, வறுமையை ஒழிப்பிற்கான குறியீடு என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. மாண்புமிகு அவை உறுப்பினர்களே, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நமக்கு எந்த வளர்ச்சியும் இருக்கப்போவதில்லை. இந்த கொண்டாட்டத்திற்கான காரணம் என்னவென்று எனக்கு புரியவில்லை.

இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொகுதியிலிருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை. இந்த பொருளாதார மீட்சியில், மிகப்பெரிய நிறுவனங்கள், மேலும் வலுவடைந்துள்ளன. இது ‘வி’ வடிவ வளர்ச்சியல்ல, இது ‘கே’ வடிவ வளர்ச்சி.

குடிமக்களில், பணம்படைத்த 1 சதவீதத்தினர் மட்டும் பெரும் வளர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், சிறு, குறு தொழில்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது.

ரூ 1.13 லட்சம் கோடி, நேரடிப் பணப் பலனாக வழங்கப்பட்டுள்ளது என்று அரசு வீரத்துடன் கூறுகிறது. எந்த மக்களுக்கு அந்த பணம் கொடுக்கப்பட்டதோ, எந்த மத்தியத் தர வர்க்கம் அதனால் பயன் அடைந்ததோ, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டதன் மூலம், அந்தப் பணம் அவர்களிடமிருந்து மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது.

வளங்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நாட்டில் நாம் வாழவில்லை ஆனால், வறுமையை பகிர்ந்தளிக்கும் நாட்டில் வாழ்கிறோம்.

பட்ஜெட்டிற்கு பிறகு உயர்ந்தது சென்செக்ஸ் (மும்பை பங்குச் சந்தை) மட்டும்தான். 6 கோடி பேர் மட்டுமே, அதாவது ஒட்டு மொத்த மக்களில் 4.6 சதவீதத்தின்ர் மட்டுமே வரி செலுத்தும் இந்த நாட்டில், எத்தனை பேர் சென்செக்சில் (பங்குச் சந்தையில்) முதலீடு செய்திருப்பார்கள், ஆகவே சென்செக்ஸ் உயர்ந்ததால் அவர்களும் துள்ளி குதித்து மகிழ்வதற்கு?

18 வயதுடைய சூழலியல் செயல்பாட்டாளர் மற்றும் அமெரிக்க பாப் இசைக் கலைஞரின் சமூக வலைதள பதிவிற்கு பதிலளிப்பதற்கு, வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ கட்டமைப்பு பயன்படுத்தப்பட்டதில் வீரம் காட்டப்பட்டுள்ளது.

கடந்த 90 நாட்களாக டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகளின் உண்வு, தண்ணீர் மற்றும் அடிப்படை சுகாதார தேவையை நிறைவேற்ற, இதுவரை, எந்த அமைச்சகமும் பொறுப்பாக நியமிக்கப்படவில்லை.

இறுதியாக, விவசாயிகள், எதிர்காட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மூன்று விவசாய சட்டங்களை கொண்டு வந்ததில் வீரம் காட்டப்பட்டுள்ளது.

ஒரு விஷயத்தை நான் இந்த அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, அகாலி தளத்தின் தலைவருக்கு மூன்று வாக்குறுதிகளை அளித்தார். பஞ்சாபி மொழி பேசுபவர்களுக்கான மாநிலத்தை உருவாக்குவது, வெளிப்படையான அரசு கொள்முதல், விவசாய பொருட்களுக்கான நியாயமான விலையை உறுதி செய்வது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள விவசாய சட்டங்கள் இதில், இரண்டு வாக்குறுதிகளை பிடுங்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்தச் சட்டங்கள் எந்த வித ஆலோசனைகளையும் கேட்காமல் எழுதப்பட்டன. எந்த வித திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ளாமல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதிகாரத்தை பயன்படுத்தி சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இது அறநெறிக்கு பதிலாக அரசின் மூர்க்கத்தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

விவசாயிகள், மாணவர்கள் மற்றும் ஷாஹின் பாக்கின் வயதான பெண்மணிகள் என, இந்த நாட்டின் ஒவ்வொரு நபரும் ஒன்று கோழைகள் அல்லது தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இதைத்தான் வீரம் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

7.17

https://fb.watch/3xsZoyt2ew/

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்