Aran Sei

காந்தியின் கொள்கைகள் மறைந்து கோட்சேவின் சித்தாந்தம் மேலெழுகிறது – துஷார் காந்தி

மீப காலங்களாக நாட்டில் காந்தியக் கொள்கை தேய்ந்து, அவரை சுட்டுக்கொன்ற கோட்சேவின் கொள்கை மேலோங்கி வருகிறது என்றும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று(ஜனவரி 30), மகாராஷ்டிரா மாநிலம் ஜெஇஎஸ் கல்லூரியில் காந்தி வாசிப்பு வட்டம் நடத்திய இணையவழி கருத்தரங்கில் துஷார் காந்தி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, “ஒன்றிய அரசானது இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டில், முற்போக்கு இந்தியாவையும் அதன் வளம்மிக்க வரலாற்றையும் கொண்டாடும் வகையில் ஆசாதி கா அமிர்த மஹோத்சவத்தைக் கொண்டாடுகிறது. ஆனால், அமிர்தம் இன்று நஞ்சாகிவிட்டது. எங்கும் வெறுப்பு பரப்பப்பட்டுக்கொண்டிக்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“மகாத்மா காந்தியின் படிப்பினைகள் மறைந்து வருகின்றன. மறுபுறம், அவரைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் சித்தாந்தம் மேலெழுந்து வருகிறது. ஒரு சாரார் தேசத்தின் வரலாற்றை சிதைத்து, அதை அவர்களின் தேவைக்கேற்ப மாற்றி எழுதுகின்றனர். அதனால், நாம் நம்முடைய உண்மையான வரலாற்றை மீட்டெடுத்து, வெறுப்புக்கும், பிரிவினைவாதத்துக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?

“நாம் தற்போது வன்முறை, வெறுப்பு, பிரிவினைவாதத்தின் பண்பாட்டை ஏற்கத் தொடங்கிவிட்டோம். மதம், சாதி, பிராந்திய அடிப்படையில் பிரிந்துக்கிடக்கிறோம். நாடு என்பது வெறும் எல்லைகளால், கொடியால், ஒரு வரைபடத்தால் ஆனது அல்ல. மாறாக, ஒரு நாடு என்பது மக்கள் வாழும் இடம். மக்கள் தான் அந்நாட்டின் ஆன்மா” என்று துஷார் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

“மகாத்மா காந்தி அன்று, தண்டி யாத்திரையத் தொடங்கிய போது பலரும் புருவங்களை உயர்த்தியதோடு, இது காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை உருவாக்கும் என்றனர். ஆனால், மகாத்மா காந்தி அனைவருக்கும் ஒரே பதிலைதான் சொன்னார். செய்து பாருங்கள் என்றார். அவர் தண்டி யாத்திரையில் வெற்றி கண்டார். இன்றும் நாம் செய்து பார்க்க வேண்டிய சூழலில் உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

நாம் வெறுப்பு, பிரிவினை, சமத்துவ இன்மைக்கு எதிராக நாம் முடிந்ததை செய்து பார்ப்போம் என்றும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதே நாம் அவருக்குச் செய்யும் நன்றி என்றும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்