உத்தரகாண்ட் மாநிலம், டெஹ்ராடூனிற்கு அரசு விமானத்தில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிருந்த மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மாநில அரசு அனுமதி மறுத்தையடுத்து, தனியார் விமான மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிப்ரவரி 12 ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் நடைபெற இருக்கும் விழாவில் கலந்துகொள்ள, இன்று (பிப்ரவரி 11) காலை 10 மணிக்கு மும்பை விமான நிலையத்திலிருந்து டெஹ்ராடூனிற்கு, அரசு விமானத்தின் மூலம் பயணம் மேற்கொள்ள கோஷ்யாரி திட்டமிருந்தார்.
இந்தப் பயணத்திற்கு மாநில அரசு இறுதி வரை அனுமதி வழங்காததால், பகல் 12.15 மணிக்குப் புறப்பட்ட தனியார் விமானத்தில், ஆளுநர் பயணம் செய்துள்ளார்.
ஆளுநருக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாகப் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார், ”என்னிடம் இது தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை… தலைமை செயலகத்திற்கு சென்று தகவலைப் பெற்ற பிறகே இது தொடர்பாகப் பதிலளிக்க முடியும்” என கூறியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார், ”ஆளுநருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை மாநில அரசு திட்டமிட்டே செய்திருந்தால், இது அரசாங்கத்தின் மீது ஏற்பட்டிருக்கும் கறை என்றும், ஒருவேளை இதில் உள்நோக்கமில்லை என்றால், ஆளுநருக்கு அனுமதி வழங்காத அதிகாரிகளை இடை நீக்கம் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
சார்புடன் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு – மத்திய அரசு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம்
உத்தவ் தாக்ரே தலையிலான அரசு, இதற்கு மன்னிப்பு கேட்டு, பிரச்னை மேலும் பெரிதாவதை தவிர்க்க வேண்டும் என்றும் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற மேலவைக்கு, ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் நியமிக்கப்படும் 12 உறுப்பினர்களுக்கான பெயர்களை, ஆளும் அரசு, 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பரிந்துரைந்திருந்த நிலையில், ஆளுநர் அவர்களை நியமிக்க காலதாமதம் செய்து வருவதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நவீன் பட்டோலே, நேற்று (பிப்ரவரி 10) கூறியிருந்தார்.
மஹாராஷ்ட்ராவில், ஆளும் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் இடையில், இதுபோன்ற பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவியது குறிப்பிடத்தக்கது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.