Aran Sei

மகாராஷ்டிரா: பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்க வலியுறுத்திய பாஜக எம்எல்ஏ

சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா மாநில அரசு, பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை உறுப்பினர் மங்கள் பிரபாத் லோதா கோரியுள்ளார்.

நேற்று (மார்ச் 22), மகாராஷ்ட்ர கீழ்சபையில் இக்கோரிக்கையை மங்கள் பிரபாத் லோதா முன் வைத்துள்ளார். அப்போது, “பாடப்புத்தகங்களில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசுகிறார். ஸ்ரீமத் பகவத் கீதை மத நூல் மட்டுமல்ல, வாழ்க்கையின் சாரத்தை பேசும் நூல் அது. இந்தியா முழுவதும் பள்ளிகளில் உள்ள பாடத்திட்டங்களில் பகவத் கீதை இணைக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

“பகவத் கீதையை மகாராஷ்ட்ர அரசு பள்ளி பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துமா? மகாராஷ்டிராவின் கல்வி முறையில் பகவத் கீதையின் ஒரு அத்தியாயத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் அரசிடம் கோரிக்கை வைக்கிறேன்” என்று மங்கள் பிரபாத் லோதா கூறியுள்ளார்.

’மும்பை பள்ளிகளில் காயத்ரி மந்திரம், பகவத்கீதை பாட வேண்டும்’ -பாஜக கோரிக்கை

முன்னதாக, மகாராஷ்டிராவின் மும்பை மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளில் ‘காயத்ரி மந்திரம்’ மற்றும் ‘பகவத்கீதை’ பாட வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்திருந்தது.

மார்ச் 18 அன்று, குஜராத் சட்டப்பேரவையில், கல்வித்துறைக்கான  நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தின்போது பேசிய அம்மாநில கல்வி அமைச்சர் ஜிது வகானி, 2022-23 கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் உள்ள 6 முதல் 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதை இணைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து மார்ச் 18 அன்று, பகவத் கீதையை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்ப்போம் என்று கர்நாடக மாநிலத்தின் தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்தார்.

பகவத் கீதை, ராமாயணத்தை கட்டாயமாக்கும் புதிய கல்வி கொள்கை – எதிர்ப்பு தெரிவிக்கும் உத்திரபிரதேச மதராஸாக்கள்

மார்ச் 19 அன்று பேசிய ஒன்றிய அரசின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “பள்ளிப்பாடத்திட்டத்தில் பகவத் கீதையை அறிமுகப்படுத்தும் குஜராத் மாநில அரசின் முடிவை, தங்கள் மாநிலங்களிலும் அமல்படுத்துவது குறித்து ஒவ்வொரு மாநில அரசும் சிந்திக்க வேண்டும்” என்று வலியுறித்தி இருந்தார்.

கர்நாடகா மற்றும் குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்