உத்தரகாண்ட் கும்பமேளா மற்றும் சார் தாம் யாத்திரை குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில உயர் நீதிமன்றம், மாநில அரசு தனது சொந்த மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருவதாகவும், மாநில அரசு ஏன் தனது தவறுகளிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
நேற்று (மே 20), இதுதொடர்பாக தொடுக்கப்ட்ட பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி ஆர்.எஸ். சவுகான் மற்றும் நீதிபதி அலோக் குமார் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது கருத்துரைத்த நீதிபதிகள் “முதலில் நாம் கும்பமேளா என்ற தவறை செய்தோம். பின்னர் சார் தாம் நடத்தினோம். நாம் நம் மக்களுக்கே வீணான சங்கடங்களை ஏற்படுத்துகிறோம். உங்கள் மாநிலத்தில் என்னதான் நடக்கிறது என்று எனது நண்பர்கள் என்னிடம் கேட்கையில் எனக்கு வெட்கமாக இருக்கிறது. எனக்கு அவர்களிடம் சொல்வதற்கு எந்த விளக்கமும் இல்லை. காரணம், நான் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை. ஆனால், அந்த அதிகாரத்தை பெற்ற நீங்கள் இதை கவனக்குறைவாக விட்டுவிடுகிறார்கள்.” என்று மாநில அரசிடம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் கோடைகாலத்தில், உத்தரகாண்ட்டில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு இந்து மதத்தினர் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அது ‘சார் தாம் யாத்ரா’ என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு சமூக வலைதளங்களில் காணக்கிடைக்கும் சார் தாமின் காணொளிகளும் புகைப்படங்களாலும் எரிச்சலூட்டுவதாக கூறிய நீதிபதிகள், “சார் தாம்மை யாராவது மேற்பார்வையிடுகிறார்களா அல்லது அது பூசாரிகளிடம் விட்டுவிட்டீர்களா? கொரோனா தொற்று அந்த பூசாரிகளுக்குப் பரவினால் என்ன ஆகும்? என்னதான் அது கடவுள் வழிபாடு நடத்தபப்டும் இடமாக இருந்தாலும், கருவறை போன்ற சிறிய அளவிலான அறையில் இருபது பூசாரிகளை நீங்கள் அனுமதிக்க கூடாது.” என்று கண்டித்துள்ளார்கள்.
மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 27 ஆம் தேதிவரை, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாது நடத்தப்பட்ட கும்பமேளாவால், அம்மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்ததாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
கும்பமேளாவில் பங்கேற்ற 30-க்கும் மேற்பட்ட இந்து துறவிகளுடன் 2000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, கும்பமேளா விழா முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டது.
Source; new indian express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.