Aran Sei

கும்பமேளா – ஹரித்துவாரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 நாட்களில் 1800% அதிகரிப்பு

த்தரகண்ட் மாநில ஹரித்துவாரில் கடந்த மார்ச் 31 முதல் ஏப்ரல் 24 வரை கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1800% உயர்ந்திருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஹரித்துவார் கும்பமேளாவில் அதிக அளவிலான பக்தர்கள் ஒன்று கூடிய நிகழ்வு அம்மாநிலத்தில் அதிதீவிர கொரோனா பரவலுக்கு காரணமாகி இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கும்பமேளா 2021: மக்கள் வாழ்க்கை மீது தலைவர்கள் காட்டிய அலட்சியம்

கடந்த மார்ச் 31 அன்று கும்பமேளாவிற்கு முன் ஹரித்துவாரில் 1863 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ஏப்ரல் 1 அன்று கும்பமேளா தொடங்கியதற்கு பின்னர், ஏப்ரல் 24 அன்று 33,330 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசின் புள்ளிவிவரப்படி கடந்த ஏப்ரல் 12 அன்று 35 லட்சம் பேர் கும்பமேளாவில் கலந்துகொண்டதாகவும், ஏப்ரல் 14 அன்று 13.51 லட்சம் பேர் கலந்துகொண்டதாகவும், அந்த இரண்டு தினங்களும் மதசடங்குகளை செய்ய உகந்த நாள் என்பதால் லட்சக்கணக்கில் கூட்டம் கூடியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கும்பமேளாவில் பங்கேற்ற பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் – கொரோனா தொற்றால் உயிரிழப்பு

கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவது குறித்து தெரிவித்துள்ள அம்மாநில அரசு செய்தி தொடர்பாளரும், அம்மாநில அமைச்சருமான சுபோத் உனியல், “சுற்றுலா பயணிகளின் மனநிறைவும் வருகையுமே இந்தத் தொற்று அதிகரிப்புக்குக் காரணம். கும்பமேளா விரைவில் முடிவடைய உள்ள நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து கும்பமேளாவை நடத்தும் அமைப்பை சார்ந்த மஹந்த் ரவீந்திர பூரியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, “புனிதக் குளியல் குறியீடாக நடைபெற வேண்டும் என்று ஏற்கனவே நாங்கள் அறிவித்திருந்தோம்” என்று கூறியுள்ளார்.

” சார் தாம் யாத்திரையை இன்னொரு கும்பமேளாவாக அனுமதிக்க முடியாது ” – உத்தரகாண்ட் நீதிமன்றம் கண்டிப்பு

மேலும், அடுத்த மாதம் உத்தரகண்டில் நடைபெறவுள்ள சார் தாம் யாத்திரை குறித்து தெரிவித்த அவர், “சார் தாம் யாத்திரை அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இது மற்றொரு கும்பமேளாவாக மாறாமல் பார்த்துக் கொள்ளுமாறு மாநில அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் யாத்திரைக்கான வழிகாட்டுதல்களை வகுக்குமாறும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

இந்நிலையில் கடைசி புனித நீராடல் இன்றைய தினம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்