Aran Sei

‘பிணமுண்டு வாழும் புழுவைவிட கீழானவர் நீங்கள்’- அதிமுக அமைச்சரின் காணொளிக்கு கண்டனம் தெரிவித்த ’நீட்’ அனிதாவின் அண்ணன்

மேல்நிலை வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றும் மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் மருத்துவக்கல்வியில்  சேரமுடியாததால்  தற்கொலை செய்துக்கொண்ட அனிதாவின் காணொளியைப் பயன்படுத்திய அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததால் நீக்கியுள்ளார்.

இன்று (ஏப்ரல் 4) காலை, நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவின் காணொளியைப் பயன்படுத்தி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் புதிய காணொளி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அக்காணொளியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரித்தும், நீட் தேர்வை திமுக கொண்டுவந்தது மட்டுமின்றி, நீட் தேர்வால் உயிரிழந்த 17 பேரை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் அனிதா பேசுவதுபோல தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவத் துறையை சீர்குலைக்கும் நீட் தேர்வு – சி.நவநீத கண்ணன்

மேலும், அதிமுகவையும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரிப்பது போலவும் அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தன் கண்டனத்தை வெளியிட்டுள்ள அனிதாவின் அண்ணன் மணிரத்னம், “அதிமுகவை அனிதா ஆதரிக்கும் வகையில் வீடியோ போட்டுள்ளீர்கள். உங்களுக்கு ஒரு மகள் இருந்து அவர் ஒரு லட்சியத்துடன் இறந்திருந்தால் அவரைப் பயன்படுத்தி இப்படி செய்வீர்களா? ஆனால் நீங்கள் கண்டிப்பாகச் செய்வீர்கள். ஆர்.எஸ்.எஸ் – சனாதன பயிற்சி பெற்றவர்கள்தானே நீங்கள். மறைந்த உங்கள் தலைவர் ஜெயலலிதாவின் உருவத்தை வைத்து வாக்கு கேட்டவர்கள்தானே நீங்கள்? பிணத்தை உண்டு வாழும் புழுவைவிட கீழானவர் நீங்கள் என்று நிரூபித்திருக்கிறீர்கள்.” என்று விமர்சித்துள்ளார்.

நீட் போன்ற ‘மனுநீதி’ தேர்வுகள் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது: நடிகர் சூர்யா

மேலும், “நீட் தேர்வை திமுகதான் கொண்டுவந்ததா? நீங்கள் நீட்டுக்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களித்திருந்தால், நீட் தேர்வே வந்திருக்காது. நீங்கள் வெளிநடப்பு செய்து துரோகமிழைத்தீர்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது, தமிழ்நாட்டில் நீட் வரும் என்று பேட்டியளித்தீர்கள். எழுந்த எதிர்பையடுத்து, நீட் விலக்கிற்கு போராடுவோம் என்று பொய் சொன்னீர்கள். மாணவர்களின் முதுகில் குத்தினீர்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையில் நீட் தேர்வு வரவில்லை.” என்று கூறி, அக்காணொளியை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவருமான பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “தற்கொலை செய்துகொண்ட ஒருவரைப் பயன்படுத்தி போலி காணொளி உருவாக்கும் அளவிற்கு தரந்தாழ்ந்துபோவார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்தது பார்க்கவில்லை. மாஃபா பாண்டியராஜனின் கீழ்மையான அரசியல் பாதையில் இது புதிய உச்சம்.” என்று விமர்சித்துள்ளார்.

`நீட் மற்றும் 7.5 % இட ஒதுக்கீட்டில் அடிமை அரசின் நாடகங்கள்’ – விளக்கும் ஸ்டாலின்

கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, அந்தக் காணொளியை மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்