Aran Sei

மதுரையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்படும் – சு. வெங்கடேசன் எச்சரிக்கை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் வரப்போகும் நாள்களில் மதுரையின் நிலை என்னவாக இருக்கப்போகிறது என்பதைச் சிந்தித்து மாவட்ட நிர்வாகம் கூடுதல் முனைப்போடு செயல்பட வேண்டுமென மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 28 அன்று,வரையிலான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பார்ப்போமேயானால் தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 1068, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 1047, வீட்டுத்தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1105 ஆகும்.

தமிழகத்தில் அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை: அபாயக்கட்டத்தை நெருங்குவதாக சு.வெங்கடேசன் எச்சரிக்கை

இந்நிலையில், கடந்த பத்து நாள்களின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அடுத்த பத்து நாள்கள் எப்படி இருக்கும் எனக் கணித்தோமேயானால் வரும் மே 5ஆம் தேதியுடன் தனியார் மருத்துவமனையின் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிடும் நிலை உள்ளதாகவும், அதேபோன்று மே 9 அல்லது 10ஆம் தேதியோடு அரசு மருத்துவமனையின் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிடும் சூழல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவ மனைகளில் இடமின்றி நிலைமையைக் கைமீறவிடாமல் தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் நாம் முயற்சி செய்ய வேண்டுமெனவும் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

கொரோனா முதல் அலையில் நடவடிக்கை எடுக்காத அரசே இந்நிலைக்கு காரணம் – சு.வெங்கடேசன்

குறிப்பாக மாவட்ட நிர்வாகம் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவது அடிப்படையான பணி. அவற்றில் போதிய அளவு முன்னேற்றமில்லை. நமக்கு ஈடான மக்கள்தொகையைக் கொண்ட கோவை மாவட்டத்தில் தினசரி பரிசோதனை அளவு 10 ஆயிரமாக இருக்கிறது. ஆனால் நாம் இன்னும் 7 ஆயிரத்திலேயே இருக்கின்றோம் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை அதிகமாகவும் விரைவாகவும் கண்டறிந்து மருத்துவ நடவடிக்கைக்கு உட்படுத்துவதுதான் நோய்ப்பரவலைத் தடுப்பதற்கான அடிப்படைப்பணி. எனவே மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் உடனடியாக தினசரி பரிசோதனையின் அளவை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

கடைசி தீர்வு ஊரடங்கு என்று அறிவுரை கூறும் பிரதமரே; முதல் தீர்வான தடுப்பூசியை முதலில் முறையாகச் செயல்படுத்துங்கள்- சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

அதே போன்று, மதுரையில் இயங்கும் அனைத்து வகையான சந்தைகளிலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, ஒழுங்கமைக்க தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் நிர்வாகிகளிடம் பேசி உரிய முடிவுகளை எடுக்க வேண்டும்.பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, அரசு வழங்கியிருக்கும் அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்கத் தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டுமெனவும் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், மதுரை மாவட்டம் கொரோனா கால நெருக்கடியை மிகச்சரியாக கையாண்டு மீண்டது என்ற நிலையை உருவாக்க அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும், அதற்கு மாவட்ட நிர்வாகம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்