Aran Sei

தப்லிக் ஜமாத்தை விமர்சிப்பது இஸ்லாமை விமர்சிப்பதாக கருத முடியாது – மாரிதாஸ் வழக்கில் நீதிபதி கருத்து

கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத்தினரே காரணம் என்று வீடியோ வெளியிட்டது தொடர்பாக, யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 03.04.2020 அன்று யூடியூபர் மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ இஸ்லாமியர்களை இழிபடுத்தும் வகையில் இருப்பதாக, அதற்கு மறுநாள் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது காதீர் மீரான் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில், மேலாப்பாளையம் காவல்நிலையத்தில் மாரிதாசுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 292 (ஆபாசமான படத்தை வெளியிடுதல்), பிரிவு 295 (மத உணர்வுகளை புண்படுத்துதல்),  பிரிவு 505 (2) (தவறான செய்தியை பரப்புவதன் மூலம் இருபிரிவினரிடையே பகைமையை உருவாக்குதல்) ஆகிய பிரிவகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தன் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நேற்று (23.12.21) அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மாரிதாசுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டது ஏன்? – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பின் முழு விவரம்

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதியில், கொரோனா வேகமாக பரவுவதற்கு தப்லிக் ஜமாத்தினர் காரணம் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், அன்றாட நிகழ்வுகளை விமர்சனம் செய்யும் மாரிதாஸ் அதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவை முழுமையாக பார்த்ததில் அது அநாகரீகமாவோ, அவமானப்படுத்தும் வகையிலோ மற்றும் ஒருவருடைய நன்மதிப்பை கெடுக்கும் நோக்கத்தில் மிரட்டும் வகையிலோ இல்லை என்று கூறியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆகவே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 292A-ன் கீழ் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்தது செல்லாது என்று கூறியுள்ளார்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 295A-ன் படி, உள் நோக்கத்துடன் வேண்டுமென்றே மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில், மதத்தையோ மத நம்பிக்கையையோ அவமதிப்பது குற்றம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸ் வீடியோவில் எந்த இடத்திலும் இஸ்லாமியரையோ, இஸ்லாமியர்களின் நம்பிக்கையையோ அவர் புண்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் பல இடங்களில் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து இல்லை என்பதை மாரிதாஸ் கூறியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகவே, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 295A-ன் கீழ் வழக்கு பதிவு செய்தது செல்லாது என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக, இந்திய தண்டசை சட்டம் பிரிவு 505(2)-ன் படி, இருவேறு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் கருத்து கூறுவது குற்றமாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாசின் வீடியோவில் அவ்வாறு இரண்டு சமூகத்தினரை குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது சவுதி அரேபியா அரசாங்கம் தீவிரவாத இயக்கம் என்று கூறி தடை செய்துள்ள தப்லிக் ஜமாத் அமைப்பின் கருத்தியலை மாரிதாஸ் தனது வீடியோவில் எந்த இடத்திலும் எதிர்க்கவில்லை என்று கூறியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை மட்டுமே அவர் விமர்சித்துள்ளாதாக கூறியுள்ளார்.

“சர்வதேச தீவிரவாத அமைப்புகள் இந்தியாவை தாக்குவதற்கு எளிதான ஒரு இலக்காக பார்ப்பதை யாராலும் மறுக்க முடியாது. மதத்தின் பெயரால் பலர் தவறாக வழிநடத்தப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்படுது உண்மையே. தீவிரவாதம் எந்த வடிவத்திலும் வரலாம். பெருந்தொற்று பரவத் தொடங்கியபோது அது, உயிரி-ஆயுதத்தின் (Bio-warfare) மற்றொரு வடிவமாகவே பார்க்கப்பட்டது. அதுதொடர்பான செய்திகள் மைய நீரோட்ட ஊடகத்திலேயே வெளியிடப்பட்டது. ஆகவே, இந்த விவகாரத்தில் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய மாரிதாசை குறை சொல்ல முடியாது” என்று நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

‘மாரிதாஸை நீதிபதி கண்டிக்காதது ஏன்?’- முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி

மேலும் “ஒரு அமைப்பை விமர்சிப்பதை மதத்தை விமர்சிப்பதாக கருத முடியாது. தப்லிக் ஜமாத் அமைப்பும் இஸ்லாமும் ஒன்றுதான் என்று கூற முடியாது. 2020 மார்ச் மாதத்தில், தனது பொறுப்பற்ற செயல் காரணமாக தப்லிக் ஜமாத் அமைப்பு கடுமையான விமர்சனத்திற்கு ஆளானதை யாராலும் மறுக்க முடியாது. அதன் (தப்லிக் ஜமாத்) தூய்மைவாத மற்றும் மீட்டுருவாக்க திட்டம் இஸ்லாமிய தீவிரபோக்கிற்கு இடமளிப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதுபோன்ற காரணங்களுக்காகவே சமீபத்தில் சவுதி அரேபிய அரசாங்கம் அந்த அமைப்பை (தப்லிக் ஜமாத்) தீவிரவாத இயக்கம் என்று கூறி தடை செய்துள்ளது” என்று ஜி.ஆர்.சாமிநாதன் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மாரிதாஸ் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்வதாகவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 08.12.21 அன்று மரணமடைந்த நிலையில், அதுகுறித்து மாரிதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா?” என்று கேள்வி எழுப்பியதுடன் “பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, 09.12.21 அன்று, மதுரையைச் சேர்ந்த திமுக தொழில்நுட்ப பிரிவின் நிர்வாகி வி.பாலகிருஷ்ணன் அளித்த புகாரில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கையும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 14.12.21 அன்று ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்