Aran Sei

ரூ.5000 கடனைத் திருப்பிச் செலுத்தாததால் பழங்குடியினர் ஒருவர் எரித்துக் கொலை

credits : indian express

மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் 28 வயதான பழங்குடியினர் ஒருவர் ரூ.5,000 கடனுக்காக உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், உகாவத் குர்த் கிராமத்தைச் சேர்ந்த விஜய் சஹாரியா கடனைத் திருப்பிச் செலுத்தாதால் மண்ணெண்ணய் ஊற்றிக் கொளுத்தப்பட்டுள்ளாரென வழக்கை விசாரித்த காவல் துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் (எஸ் பி) ராஜேஷ் குமார் சிங் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த பிறகு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரம் தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த விஜய் சஹாரியா சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார். ராதேஷ்யம் லோதா என்ற நபர் இந்தக் கொலையைச் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ”இது ஒரு கொடூரமான சம்பவம்” என்று தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இறந்தவரின் குடும்பத்தைச் சந்தித்து இரங்கல் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பழங்குடியினர் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்து ”பண முதலைகளிடம்” இருந்து அவர்களைக் காப்பாற்ற சட்ட முன்னேற்பாடுகளை மத்திய பிரதேசத்தில் செய்ய இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஆட்சிக்கு வந்த பாஜக அரசாங்கத்தின் கீழ் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்தச் சம்பவம்குறித்து தன்னுடைய கருத்தைப் பதிவு செய்த மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் கமல்நாத் ”முதலமைச்சர் இந்தச் சம்பத்தை மிகச் சாதாரணமாக நெருப்பினால் ஏற்பட்ட மரணம் என்று கூறுகிறார். ஆனால் உண்மை அதுவல்ல. இறந்த நபர் ராதேஷ்யம் லோதாவிடம் கடனாக வாங்கிய 5000 ரூபாயினால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒப்பந்தக் கூலியாக வேலை பார்த்து வருகிறார். அவர் பெற்ற பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தினால்தான் அவர் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம்குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் குமார் புருஷோத்தம் விஜய் சஹாரியாவின் குடும்பத்தினருக்கு ரூ.8.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவரது குழந்தைகளின் கல்விக்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்