Aran Sei

இஸ்லாமியர் பகுதிக்குள் இந்துத்துவா பேரணி; இருதரப்பும் கல்வீச்சு – இஸ்லாமியர்கள் மட்டும் கைது

டிசம்பர் 23 ஆம் தேதி, மத்திய பிரதேச மாநிலம் போபாலில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர் பகுதிக்குள், இந்துத்துவ அமைப்பினர் ‘ஷோர்யா யாத்ரா’ (வீரப் பேரணி) நடத்திய பேரணி நுழைய முயன்றதாகவும், காவல்துறையினர் அவர்களை தடுத்ததால் அவர்களுக்கு இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாகவும் தி வயர் இணையதளம் தெரிவிக்கின்றது.

ஒருகட்டத்தில், இஸ்லாமியர் குடியிருப்பிற்குள் பேரணியை நுழைய விடாமல் தடுக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், இதைத்தொடர்ந்து இந்துத்துவ அமைப்பினருக்கும், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் இடையில் கல்வீச்சு மோதல் நடைபெற்றதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினரை அச்சுறுத்தும் இந்து சாமியார்கள் – காவல்துறை வழக்குப் பதிவு

இந்த நிகழ்வு தொடர்பாக மனாவர் காவல்நிலையத்தில் அடையாளம் தெரிந்த 30 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 22 பேருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், கலவரம் செய்தல், கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பொது மற்றும் தனியார் செத்துகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழும்  3 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி வயர் கூறுகின்றது.

இதில் ஒரு தகவல் அறிக்கை, பஜ்ரங்க தள் அமைப்பை சேர்ந்த பங்கஜ் குஷ்வாஹா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரிந்த 12 இஸ்லாமியர்கள் மற்றும் அடையாளம் தெரியாத 13 இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள அந்த முதல் தகவல் அறிக்கையில் கொலை, கலவரத்தில் ஈடுபடுதல், அத்துமீறி நுழைதல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தி வயர் தெரிவிக்கின்றது.

கல்வீச்சு சம்பவம் நடைபெற்று இரண்டு நாள் கழித்து, காந்தி நகர் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர் கலீல் கஹ்த்ரி என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம், அனுமதி பெறவில்லை என்று கூறி, மாவட்ட நிர்வாகத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. கலீல் வீட்டில் குடியிருந்த மூன்று நபர்கள் கல்வீச்சு நிகழ்வில் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுவதாக தி வயர் தெரிவிக்கிறது.

வீடு இடிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட துணை மாஜிஸ்ட்ரேட் ஷிவாங்கி ஜோஷி “கட்டிடம் இடிக்கப்பட்டது, பொது அமைதிக்கும் குந்தகம் விளைக்க முயன்ற சமூக விரோதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. நாங்கள் வீட்டிலிருந்து கத்தி மற்றும் அரிவாள்களை கைப்பற்றியுள்ளோம்” என்று கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி வயர் இணையதத்திடம் பேசியுள்ள ஷேர் இ காசிப்  அமைப்பை சேர்ந்த ஜமீல் சித்திக், இரண்டு தரப்பினம் கல்வீச்சில் ஈடுபட்டதகாவும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி, கல்வீச்சில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய கோரிக்கை வைத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், “இந்த வன்முறைக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத கலீல் கஹ்த்ரி-யின் வீட்டை மாவட்ட நிர்வாகம் இடித்துள்ளது. அதன் அருகில் உள்ள எந்த வீடுகளுக்கும் அனுமதி பெறாமலேயே கட்டப்பட்டுள்ளன. அவருக்கு அவகாசம் கொடுத்திருந்தால், அனுமதி பெற்றிருப்பார்” என்று ஜமீல் சித்திக் கூறியுள்ளார்.

ஹரிதுவாரில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை பேச்சு – வழக்குப் பதிந்தும் கைது செய்யாத காவல்துறை

கல்வீச்சு நிகழ்வு தொடர்பாக இதுவரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்றும் தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 17 முதல் 19 வரை, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ‘தர்ம சன்சாத்’ என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுத்தது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்த நிகழ்வு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்